நாங்கள் யார் பக்கம் சாயவேண்டும் என்பதை மட்டுமே தற்போது இந்தியா தீர்மானிக்கலாம்!

தமிழீழ நிலத்தில் மற்றுமொரு போர் வேகம் பெற்று வருகின்றது. முன்பெல்லாம் தமிழீழ மக்களையும், மண்ணையும் மீட்க விடுதலைப் புலிகள் எதிரியின் படையணிகளுடன் யுத்தம் புரிந்தார்கள்.

அதில் வீரம் இருந்தது, தியாகம் இருந்தது, ஒரே இலக்கு என்ற உயர்ந்த இலட்சியம் இருந்தது. அதற்காகத் தமது உயிரையும் ஈகம் செய்யும் தற் துணிவும் இருந்தது. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழினமும் அடித்து நொருக்கப்பட்டு, அழித்து முடிக்கப்பட்டு, முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டு, வாய் திறக்க முடியாத மவுனிகளாக்கப்பட்ட பின்னர் உருவான இரண்டாவது களத்தில் இத்தப் போர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்க் களத்தில் விடுதலைப் புலிகளின் படையணிகள் இல்லை.

எதிரிகள் மேலான தாக்குதல்களும் இல்லை. விடுதலைப் புலிகளால் நெறிப்படுத்தப்பட்டவர்கள், வழிப்படுத்தப்பட்டவர்கள் பிளவு படுத்தப்பட்டு வௌ;வேறு படையணிகளாக மாறிக் களம் இறங்கியுள்ளார்கள். அவர்களுக்கு எதிரிகள் குறித்து அலட்டிக் கொள்ளவில்லை. உயிர், உடமைகள், மானம், கவுரவம், எதிர்கால நம்பிக்கை என மனிதத்தின் அத்தனை கூறுகளும் நொருக்கப்பட்டு வாழ்விழந்து நிர்க்கதியாக நிற்கும் ஈழத் தமிழினத்தின் எஞ்சிய மாந்தர் குறித்தும் அக்கறை கொள்ளவில்லை. அடுத்த தலைமுறையையாவது நிம்மதியாக வாழ வைக்கவேண்டும் என்ற சின்ன ஆசை கூடக் கிடையாது.

இந்தப் போர்க்களத்தில் வெல்லவேண்டும். சிங்கள நாடாளுமன்றத்திற்குச் சென்று மகிந்த வழங்கும் சிம்மாசனத்தில் அமர வேண்டும். அது மட்டுமே அவர்களது இந்தப் போரின் குறிக்கோள். ஒரு வேளை, ஒட்டு மொத்தத் தமிழர்களும் ஒரே மனதாக வாக்களித்துவிட்டால், முன்னொரு காலத்தில் தமிழீழப் பிரகடனத்தோடு சிங்கள நாடாளுமன்றத்திற்குச் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அ. அமிர்தலிங்கம் அவர்களை எதிர்க்கட்சித் தலைவராக்கியது போன்ற அவர்களுக்கு மட்டுமேயான ஒரு வசந்த காலம் மீண்டும் கனிந்தால் இரா. சம்பந்தன் அவர்களுக்கு முடி சூட்டி எதிர்க்கட்சித் தலைவராக்கி அழகு பார்க்கும் வெளியே சொல்ல முடியாத ஆசையும் நிச்சயம் அதன் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இருக்காது என்று நம்ப முடியாது. ஏனென்றால், இந்தப் போர்க் களத்தை உருவாக்கியதில் பெரும் பொறுப்பும், அதில் வென்றே தீரவேண்டும் என்ற பெரும் ஆசையும் அவர்களுக்கு இருப்பது ஒன்றும் இரகசியமானது அல்ல.

முள்ளிவாய்க்கால் பேரழிவில் அவர்கள் இழந்தது என்று சொல்லும்படியாக எவையும் இல்லை. தவறுதலாகக் களத்தில் தங்க வேண்டிய சூழ்நிலையால் மகிந்த படையினரால் பிடிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினமும் மகிந்தவுடன் உயிர்ப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டு, அவருடன் சங்கமமாகிவிட்டார். அவருடன் சில உதிரி வக்கிரகங்களும் களன்று ஒட்டிக்கொண்டன. மகிந்த சகோதரர்களால் தமிழ்த் தேசியக் கூட்டணியில் தீவிர தமிழ்த் தேசியவாதிகளாக அடையாளம் காணப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோர் ஏற்கனவே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள்.

இன்னொரு நாடாளுமன்ற உறுப்பினரான சிவனேசன் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார். இதனால், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும் எழுந்து நின்று துள்ளிக் குதிக்காமல் அடக்கியே வாசித்தார்கள். அதன் பின்னரும், முள்வேலி முகாம்களுக்குள் எமது மக்கள் முடக்கப்பட்டு, சித்திரவதைகளுக்குள்ளான போதும், அங்கே சென்று அவர்களைப் பார்க்க மகிந்த அனுமதி வழங்காமல் மறுத்த போதும் அடக்கமாக அமைதி காத்தனர். அத்தனையும் முடிந்து, அவலத்தையே வாழ்வாக ஏற்றுக்கொண்ட மக்களிடம் அரசியல் செய்து பிழைப்பு நடாத்தும்படி மகிந்த அவிழ்த்து விட்டதும், மன்னார் வரை சென்று, மகிழ்ந்து கோத்தபாயாவுக்கு வாழ்த்துத் தெரிவித்ததைத் தவிர, கூட்டமைப்பு எதைக் கிழித்தது என்று வாள் சுழற்றுகிறது என்று புரியவில்லை.

மகிந்த சகோதரர்களின் படுகொலைப் பசிக்கு இரையாகாமல், தப்பிப் பிழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன், பத்மினி ஆகியோரும் தம்முடன் நாடாளுமன்றம் வந்துவிட்டால், தாமும் பேரம் பேசும் தகுதியை இழந்து விடுவோம் என்று அவர்களைக் கழற்றி விட்டதால், இன்னொரு தமிழ்த் தேசிய உணாளரான கஜேந்திரகுமாரும் வெளியேறி விட்டார். அதனால், இப்போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மும் மூர்த்திகளும் வாளை வேகமாகச் சுற்ற வேண்டிய கட்டாய தற்காப்புப் போரை நடாத்தி வருவது நன்றாகவே தெரிகின்றது.

சுதந்திர சிறிலங்காவின் ஆட்சிக்குள் அரசியல் செய்ய தமிழ்த் தலைமைகள் அங்கிருந்து தமிழீழ மக்களுக்குப் பெற்றுக் கொடுத்ததைப் பட்டியலிட்டால், இவர்கள் எதற்காக அங்கு செல்ல வேண்டும்? என்ற கேள்வியே எஞ்சுகின்றது. நில ஆக்கிரமிப்பைத் தடுக்க முடியவில்லை. சிங்களக் குடியேற்றங்களைத் தவிர்க்க முடியவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் தடுத்து வைக்கப்பட்ட எண்ணற்ற இளைஞர்களை விடுவிக்க முடியவில்லை. தமிழர்கள் மீதான படுகொலைகள், கடத்தல்கள், கற்பழிப்புக்கள், கப்பம் பெறுதல் என்று அத்தனையும் இன்று வரை பெருகி வந்துள்ளதே தவிர, அவற்றைக் குறைத்துவிடக் கூட இந்தத் தலைமைகளால் முடியவில்லையே.

அறுபது ஆண்டுகளாக நடந்து, இன்றுவரை தொடர்ந்தே செல்லும் இந்த தமிழின அழிப்பை இப்போதும் இவர்கள் கைகாட்டும் இந்திய தேசம் எப்போது தடுத்து நிறுத்த முயற்சித்தது? தந்தை செல்வா அவர்கள் தமிழ்த் தேசியத்தை வட்டுக்கோட்டைத் தீர்மானம் வரை நகர்த்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக, தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் வீரம் செறிந்த போராட்ட வடிவத்தினூடாக முள்ளிவாய்க்கால் வரை நகர்த்தி வந்துள்ளார். அந்தப் பேரழிவை முன்னரே கணிப்பிட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் அந்தத் தமிழ்த் தேசியத்தை மீட்பதற்கான போராடும் கடமையை புலம்பெயர் தமிழர்களிடமும், இளையோரிடமும் கையளித்திருந்தார். அவரது விருப்பப்படியும், சிந்தனைப்படியும் புலம்பெயர் தமிழர்கள் தங்களுக்கான கடமைகளைத் தோளில் சுமந்துள்ளார்கள். அவர்களது போர்க் களம் மேற்குலகின் அரசியலில் பல அதிசயிக்கத் தக்க மாற்றங்களை உருவாக்கி வருகின்றனர். அந்த மாற்றங்களினூடாக சிங்கள தேசத்திற்குக் கிலியூட்ட ஆரம்பித்துள்ளார்கள்.

அதனால், சிங்கள தேசத்திற்கும், அங்கு நிலை கொள்வதை மட்டுமே குறியாகக் கொண்ட இந்திய தேசத்திற்கோ தற்போதைய துருப்புச் சீட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. ஒட்டுக்குழுவாக மக்கள் மத்தியில் எடுபடாத டக்ளசை மட்டும் நம்பி இனிமேலும் மேற்குலகுக்கு எதிரான பனிப் போரை நடாத்த முடியாது என்பது மகிந்தவிற்கு நன்றாகவே தெரியும். இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற துருப்புச் சீட்டு மூலமாக இந்தியாவுடன் இணைந்து மேற்குலகின் நகர்வுகளுக்கு அணை போட முயற்சி செய்கின்றார்.

இத்தனை அழைவுகளுக்கும், இத்தனை அவலங்களுக்கும் பின்னர் அசைந்து கொடுக்காத தன்மீதான அவ நம்பிக்கையைப் போக்க ஐ.நா. செயலாளர் பான் கி மூன் அவர்கள் அறிவித்திருந்த இறுதி யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர்கள் குழுவை அமைக்கும் தீர்மானத்தை எதிர்த்து இந்தியா கடந்த வாரத்திலும் ஈழத் தமிழர்களுக்கான முடிவுறாத தனது துரோகத்தை நீட்டியுள்ளது. அத்தனை துரோகங்களுக்கும் தலையாட்டி நிட்சயமாகத் தன்னுடன் வரக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைக்க வேண்டிய கடமை இந்தியாவுக்குள் உள்ளது இயல்பானதே.

புலம்பெயர் தமிழீழ அமைப்புக்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேண முடியாததற்கும், புலம்பெயர் தமிழீழ மக்களிடம் இன்று வரை நெருங்கிச் செல்ல முடியாததற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இருக்கும் தடைகள் இந்தத் திசைகளிலிருந்தே வருவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கால்க் கட்டுகளை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டவர்கள் தமிழ்த் தேசியத்திற்கான ஓட்டப் பந்தயத்தில் வெல்வது சாத்தியமே இல்லை. ஒரு சில புலிகளாவது சிங்களச் சிங்கங்களை எதிர்த்து நின்று கர்ச்சிக்க வேண்டிய நேரத்தில், எத்தனை பன்றிகள் கூட்டமாகப் போனாலும் என்ன கிடைத்துவிடப் போகின்றது.

முள்ளிவாய்க்கால் போரை நிறுத்தும்படி புலம்பெயயர் தேசங்கள் எங்கும் கெஞ்சிக் கேட்டோம். அழுது புலம்பினோம். ஆவேசமாக வீதி மறியல் போராட்டங்கள் நடாத்தினோம். இன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதமர் கோர்டன் பிரவுண் அவர்களுடனும், வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களுடனும் ஈழத் தமிழர்களுக்காகப் பேசும் பலத்தைப் பெற்றிருக்கின்றோம். ஐ.நா. மன்றத்தை அசைத்து வருகின்றோம். மேற்குலகின் ஊடகங்களின் கண்களைத் திறந்துள்ளோம். தற்காலிகமாகவாவது ஜி.எஸ்.பி. ப்ளஸ் வரிச் சலுகை சிங்கள தேசத்திற்கக் கிடைக்காமல் தடுத்துள்ளோம்.

சிங்களத்தின் மீதான ஒரு பொருளாதார யுத்த களத்தைத் திறந்துள்ளோம் என்று கடந்த வருடத்தில் கையேற்ற தமிழ்த் தேசிய விடுதலைப் போரின் வெற்றியைப் பட்டியலிட புலம் பெயர் தமிழர்களால் பட்டியலிட முடிகின்றது. ஈழத் தமிழாகளுக்கான புலம்பெயர் தமிழர்களின் பலத்தை சிங்கள தேசத்தைப் போல... இந்திய ஆட்சியாளாகளைப் போல... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை நிராகரித்தது ஏன்? அவர்களுடன் களத்தில் இறங்கி நடந்து வந்த கஜேந்திரன், பத்மினி ஆகியோரை தேர்தல் களத்திலிருந்து அகற்றியது ஏன்? கஜேந்திரகுமார் அவர்கள் 'காங்கிரஸ் கட்சிக்காகத் தருவதாகக் கூறும் இரண்டு இடங்களையும் அவர்களுக்கே வழங்குங்கள்.

அவர்கள் கட்டாயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்றம் வரவேண்டும்' என்று முன்வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது எதனால்? ஆம், நீங்கள் சோரம் போய்விட்டீர்கள். விடுதலைப் புலிகளால் மானம் மறைக்கப்பட்ட நீங்கள் தற்போது அம்மணமாகிப் போனதால், பிறக்கும்போதே கவச குண்டலங்களுடன் பிறந்த கர்ணர்கள் உங்கள் கண்களுக்கு அசிங்கமாகத் தெரிகிறார்கள். 'அவர்கள் வரவேண்டும்... உங்களுடன் அவர்களும் வரவேண்டும்... அப்போதுதான் உங்களுக்கும் உங்கள் மானம் மறைக்கப்பட வேண்டும் என்ற துணிவு பிறக்கும்.'

இந்தியா என்ற தேசத்தில் பல மகான்களும், மகாத்மாக்களும் உருவாகியபோதும் அங்கு நல்ல தலைவர்கள் உருவாகாமல் போனதில், அல்லது அங்கு உருவாகிய மாமனிதர்கள் தங்களது கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லக்கூடிய நல்ல வாரிசுகளையும் உருவாக்கிச் செல்லவில்லை.

புத்தர் பிறந்த மண்ணில் புத்தம் நிலைக்கவில்லை. காந்தி வாழ்ந்த மண்ணில் காந்தியம் வாழவில்லை. தமிழகத்தில் மக்கள் எழுச்சி மூலம் பெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்தி முடித்த அறிஞர் அண்ணா அவர்களால் கருணாநிதியைத்தான் உருவாக்க முடிந்தது. இடையே தமிழ் மக்களுக்கு அள்ளி வழங்கிய வள்ளல் எம்.ஜி.ஆர். அவர்கள் புரட்சித் தலைவராக உருவெடுத்துத் தமிழகத்தை வழிநடாத்தினாலும், அவரது ஆயுளும் அதுவரை நிலைக்கவில்லை. அதுவே ஈழத் தமிழர்களின் கண்ணீருக்கும், அவலங்களுக்கும் கூடக் காரணமாக அமைந்து விட்டது.

இந்தியத் துரோகங்கள் இத்துடன் முடிவுக்கு வரட்டும்! இல்லையேல், மேற்குலகின் மனிதாபிமானத்தை வென்று ஈழத்தை வெல்வோம்! அதுவும் முடியவில்லையானால், சிங்கள எதிரிகளுடன் சமாதானம் பேசுவோம்! அது கைகூடுமானால், சீனாவை அழைத்து வந்தாலும் தப்பேதும் கிடையாது. இந்தியாவின் கையாலாகாத் தனத்தால் 'தீபெத்' மக்கள் ஐம்பத வருடங்கள் கழிந்தும் அஞ்ஞானவாசம் புரிவதைப் பார்த்து நாமும் கற்றுக் கொள்வோம்.

'துரோகிகள் எதிரிகளை விடவும் ஆபத்தானவர்கள்' இது எங்கள் சூரியத் தேவனின் வாக்கு. இந்தியா எங்களின் நண்பனா? எதிரியா? துரோகியா? என்று தீர்மானிக்கப் போகின்றவர்கள் ஈழத் தமிழர்களே! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கப் போகின்றவர்களும் அவர்களே! நாங்கள் யார் பக்கம் சாயவேண்டும் என்பதை மட்டுமே தற்போது இந்தியா தீர்மானிக்கலாம்!

நன்றி்:ஈழநாடு

Comments