தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் தாளத்திற்கேற்ப தனித் தவில் வாசிக்க முற்படுகின்றது!

'இன்றைய முக்கியமான கால கட்டத்தில், நீதிக்கும், சுதந்திரத்திற்காகவும் போராடும் தமிழ் மக்கள் அனைவரும் தமது கனவை நிறைவேற்ற இணைந்து நிமிர்ந்து நின்று, துணிந்து போராட வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் விடுதலைக்கான பயணத்தை நிறுத்தக்கூடாது.

தென்னமெரிக்க மக்களும், தென்னாபிரிக்க மக்களும் போராடி தமது சுதந்திரத்தைப் பெற முடியுமாக இருந்தால், ஏன் தமிழ் மக்களால் அது முடியாது? தொடர்ந்து போராடினால் தமிழ் மக்கள் தமது இலக்கை அடைவார்கள்'' என்ற நம்பிக்கை மிக்க கருத்து ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கருத்தைத் தெரிவித்தவர் ஒரு விடுதரைப் புலிப் போராளியல்ல. ஒரு தமிழ்த் தேசிய உணர்வாளர் அல்ல. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களின் நெருங்கிய நண்பரும், அமெரிக்காவின் பிரபல மனித உரிமை ஆர்வலரும், அமெரிக்க அதிபர்த் தேர்தலில் அப்போதைய அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷை எதிர்த்துப் போட்டியிட்டவருமான வணக்கத்திற்குரிய அடிகளார் ஜெசி ஜக்சன் அவர்களே இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் கலந்துகொண்டு, தமிழர்களது அமைதிவழிப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும்விதமாக, அதில் கலந்துகொண்ட பிரித்தானியப் பிரதமர் கோர்டன் பிறவுண், மற்றும் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் சிங்கள அரசாலும், அதன் இனவாத சக்திகளாலும் வறுத்தெடுக்கப்படும் நிலையில், சிறிலங்காவிற்கு இன்னுமொரு அதிர்ச்சி வைத்தியமாக வணக்கத்திற்குரிய அடிகளார் ஜெசி ஜக்சன் அந்த மாநாட்டின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு இந்த முக்கியத்துவம் வாய்ந்த உரையை நிகழ்த்தியுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களின் போராட்ட வியூகத்திற்குக் கிடைத்த இந்த உலக அங்கீகாரம் சிறிலங்காவிற்கு மட்டுமல்ல, வல்லாதிக்கக் கனவோடு ஈழத் தமிழ் மக்களைப் புதைகுழிக்குள் தள்ளிவரும் இந்தியாவுக்கும் உலகின் இந்த முக்கிய சக்திகள் கனமான செய்திகளை இதன்மூலம் விடுத்துள்ளார்கள்.

இந்த உலக மாற்றங்களினூடாகப் பயணித்து ஈழத் தமிழர்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் புலம்பெயர் தேசத்துத் தமிழர்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் தாளத்திற்கேற்ப தனித் தவில் வாசிக்க முற்படுகின்றது.

இந்த அபாயகரமான கூட்டுச் சதிகளை அரங்கேற்றுவதற்காக புலம்பெயர் தமிழர்களுக்கும், தாயகத் தமிழர்களுக்குமிடையே முரண்பாடுகளை உருவாக்கவும் முயற்சி செய்கின்றது. தாயகத்துத் தமிழர்களுக்கான புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களும் கொச்சைப்படுத்தப்படுகின்றன.


ஈழத் தமிழர்களின் பலம் சிதைக்கப்பட்டு, மூச்சு விடுவதற்கு மட்டுமான அனுமதியுடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட தமது உறவுகளுக்காகப் போராட வேண்டிய கடப்பாடும், உரிமையும், அதற்கான தகைமையும் புலம்பெயர் தமிழீழ மக்களிடமே உள்ளது என்பதை யாரும் மறுதலித்துவிட முடியாது. அவர்களது போராட்ட வலிமையைச் சிதைத்துவிட முயலும் சக்திகள் புலம்பெயர் தமிழீழ மக்களின் தார்மீக கடமையினைக் கொச்சைப்படுத்தும் விமர்சனங்களை முன் வைக்கின்றனர். புலம்பெயர் தமிழர்கள் தமது முடிவுகளைத் தாயகத்துத் தமிழர்கள்மீது திணிப்பதாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

புலம்பெயர் தமிழீழ மக்களை வேறு கிரகத்து மனிதர்கள் போலக் காட்ட முற்படுவது மிகவும் விசித்திரமானது. தமது உறவுகளைத் தமிழீழ மண்ணில் விட்டுவிட்டு, வாழ்வின் பாதிச் சந்தோசங்களைத் தொலைத்துவிட்டு புலத்தில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தமது உறவுகளுக்காகவும், தாம் இழந்த இயல்பான வாழ்வுக்காகவும் போராடுவதை எவராலும் தவறாகக் கருதப்பட முடியாது. தமிழீழத்தின் மொத்த சனத் தொகையின் பெரும் பகுதியான இந்தப் புலம்பெயர் சமூகத்தை அந்நியப் படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசிய உணர்வைச் சிதைக்க எண்ணும் எதிரிகளின் சதிக்கு விலைபோன சில பேனாப் போராளிகளது இந்தக் கருத்துக்கள் மிக இழிவானதாகும்.

முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களது ஆயுதப் போராட்டம் தோல்வியைத் தழுவுவதற்கு முன்னதாகவே, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அந்தப் போர்க்களம் புலம்பெயர் தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

முள்ளிவாய்க்காலில் வெற்றி கொள்ளப்பட்டதாக சிங்கள தேசத்தால் கொண்டாடப்பட்ட தமிழீழ விடுதலைப் போர் புலம்பெயர் தமிழர்களால் மிக நேர்த்தியாக, விவேகமாக முன்னெடுப்பதன் சாட்சியாகவே, நடந்து முடிந்த உலகத் தமிழர் பேரவை மாநாடு அமைந்துள்ளது.

ஈழத் தமிழர்களது விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாக அறிவித்த மேற்குலகம், புலம்பெயர் தமிழர்களது போராட்ட நியாயங்களைப் புரிந்து கொண்டு, அதற்கு நல்லாதரவு வழங்க ஆரம்பித்துள்ளது. இந்த மாற்றங்களினூடாகத் தொடர்ந்து பயணித்து ஈழத் தமிழினத்தின் அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அனைத்துத் தமிழர்களும் ஓரணியில் நிற்பது மட்டுமே சத்தியத்தின் பாதையாக இருக்கும். அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் வேண்டுகோள்க உள்ளது.

நன்றி - ஈழநாடு

Comments