நாடு கடந்த அரசாங்கம் (Transnational Government) புகலிட அரசாங்கம் (Government in Exile) இரண்டும் ஒன்றேதானா? அல்லது இவற்றிற்கிடையே வேறுபாடுகள் உண்டா?

இவ்விரண்டு அரசாங்கங்களுக்கும் இடையே பல பொதுப் பண்புகள் இருந்தாலும் கோட்பாட்டு அடிப்படையில் அவை வேறானவை.

புகலிட அரசாங்கம் என்பது வெளிநாடுகளுக்கு தப்பியோடும் அரசியல் தலைவர்கள் தமக்கு ஆதரவு அளிக்கக்கூடிய நாடு ஒன்றில் தஞ்சம் புகுந்து அங்கு அமைக்கும் ஓர் அரசாங்கமாகும். சொந்த நாடு விடுதலை பெறும் பொழுது இப் புகலிட அரசாங்கத்தை அமைக்கும் தலைவர்கள் நாடு திரும்புவர். புகலிட அரசாங்கத்தை அமைக்க குறைந்தது ஒரு நாட்டின் ஒப்புதலும் ஏற்புதலும் தேவை. புகலிட அரசாங்கம் செயற்படுவதற்குப் புலம் பெயர்ந்து வாழும் மக்கள் இருக்க வேண்டிய தேவையில்லை.

நாடு கடந்த அரசாங்கம் பற்றிய கோட்பாடு கடந்த இரு பத்தாண்டுகளாக சமூக அறிஞர்களது கவனத்தை ஈர்த்து வருகிறது. அது புலம் பெயர்ந்து வாழும் மக்களது நாடு கடந்த வாழ்க்கை முறையோடும் (Transnational life) நாடு கடந்த அரசியலோடும் (Transnational Politics) தொடர்புள்ளது.

புலம் பெயர் மக்கள் தாம் வாழும் நாடுகளில் மட்டும் அல்லாது தமது தாயகத்தோடும் வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தம் மக்களோடும் உறவைப் பேணி வருகின்றனர். இவர்களது வாழ்க்கைமுறை தாம் வாழும் நாடுகளின் எல்லைகளுக்குள் சுருங்கி விடுவதில்லை. நாடுகள் கடந்த ஒரு சமூகமாக இவர்கள் தமது வாழ்க்கையை அமைத்துள்ளனர். தாம் வாழும் நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்ட முறையில் தமது வாழ்வை இவர்கள் அமைத்துக் கொண்டபொழுதும் இவர்களது அரசியல் சமூக பொருளாதார மற்றும் பண்பாட்டு பண்புகளைத் முடிவுசெய்வதில் நாடு கடந்த சமூக வெளி (Transnational Social Space) முதன்மையான பங்கினை வகிக்கிறது. ஈழத் தமிழரது புலம் பெயர் வாழ்க்கையும் இவ்வாறே உள்ளது.

புலம் பெயர் தமிழ் மக்கள் மட்டுமல்லாது தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும் நாடு கடந்த தமது தொடர்புகளைப் பேணிய வண்ணம் உள்ளனர். எனவே அம்மக்களும் ஈழத்தமிழரது நாடு கடந்த சமூக வெளியின் உறுப்பாகவே உள்ளனர். ஈழத் தமிழரது அரசியல் இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குள் சுருங்கி விடவில்லை. அவர்களது அரசியல் இப்பொழுது நாடு கடந்த அரசியலாகவும் மாற்றம் கண்டுள்ளது. பன்முகப்பட்டதும் சமூகநலன்மிக்கதும் மக்களாட்சி அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டதுமான தேசியமே தமிழ்த் தேசியம் ஆகும்.

அமைக்கப்பட இருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நாடு கடந்த சமூக வெளியில் வாழ்ந்து வரும் தமிழீழ மக்களால் தமிழீழ மக்களது அரசியல் வேட்கைகளை வென்றெடுப்பதற்காக அமைக்கப்படுகிறது. மேலும் தாயகத்திலும் புலத்திலும் வாழும் தமிழீழ மக்களது சமூக, பொருளாதார, பண்பாட்டு மேம்பாட்டையும் இந்நாடு கடந்த அரசாங்கம் அதன் ஆளுகைக்குள் கொள்ளும்.

மக்களால் மக்களில் தங்கி நிற்கக்கூடிய முறையில் இவ்வரசு அமைக்கப்படுவதால் இதற்கு நாடுகளின் ஒப்புதல் என்பது ஒரு முன் தேவையாக இருக்காது. தமிழ் மக்களிடையே உள்ள பொது அமைப்புகள் இவ்வரசினைத் தாங்கி நிற்கும் தூண்களாக இருக்க வேண்டும். மக்களில் தங்கிநின்றவாறே அனைத்துலக அரங்கில் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி, இறைமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக அரசியல் மற்றும் அரசதந்திர வழிமுறைகள் ஊடாகப் போராடும். (நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான விளக்கக்கோவையிலிருந்து)

Comments