மே 10 2009 தொடக்கம் நாளை வரை - ஒரு பார்வை

canada-ponkutamilகடந்த வருடம் மே மாதம் 10 ஆம் திகதி நோர்வேயில் ஆரம்பிக்கப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான மீளுறுதி வாக்கெடுப்பின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வலுவுடமையை இன்றைய காலகட்டத்தில் பரிசோதிப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இலங்கைத்தீவின் அனைத்து தமிழ் கட்சிகளாலும் 1976 ஆம் ஆண்டில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை 1977 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அத்தீர்மானத்தினை முன்னெடுப்பதற்கான ஆணை அன்றைய இளம் தமிழ் சமுதாயத்திடம் கையளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழ் மக்களின் ஆணையை ஏற்று முப்பதாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த ஆயுதப் போராட்டத்தில் நடைமுறை தமிழீழ அரசை நிறுவி சிறிலங்கா அரசுக்கு சமாந்தரமான நிழல் அரசை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் நிலைநிறுத்தியது.

எனினும் 2009 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளின் நேரடி மற்றும் மறைமுக ஆயுத உதவிகளை பயன்படுத்தியும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட விடுதலைப் போராட்டங்கள் தொடர்பான நிலைப்பாடுகளை சாதகமாக்கியும் கொண்ட சிறிலங்கா அரசு, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்றும் அங்கவீனப்படுத்தியும் கொடிய இனஅழிப்பு போரை செய்தது.

இக்கொடிய போர் தொடர்ந்தபோது, ஆயுத விடுதலைப் போராட்டத்தின் மூலம் கட்டியமைக்கப்பட்ட தமிழீழ நடைமுறை அரசின் இறைமைக்கான அச்சுறுத்தல் நிலை உணரப்பட்டது. இந்நிலையில் விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்திக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையால் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை முன்வைத்து, அரசியல் ரீதியான போராட்டங்களை கூர்மைப்படுத்துமாறு கோரப்பட்டது.

vkr-election-results



தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலக சமூகத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கிலும் பயங்கரவாத முலாம் பூசப்ப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை வெளிப்படுத்தவும் அனைத்து புலம்பெயர்ந்த நாடுகளிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து தமிழ் மக்களின் ஆணையை பெற்றுக்கொள்ளுதல் பொருத்தமானதாக இருக்குமென புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் கருதினர். அதனையே பொருத்தமான வழியென விடுதலைப் போராட்டத்தை தலைமைதாங்கிய தமிழீழ தேசிய தலைவரும் வெளிப்படுத்தினார்.

தாயகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த விடுதலைப் போராட்டம் ஒரு பயங்கரவாத போராட்டமல்ல என்பதையும் மாறாக அது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கான போராட்டமே என்பதையும் சனநாயக ரீதியில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக வெளிப்படுத்துவதற்காக வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் தேர்தல் நோர்வேயில் முதன்முதலாக மே மாதம் 10 ஆம் திகதி நடத்தப்பட்டது.

நோர்வே வாழ் ஈழத்தமிழர்கள் 99 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட ஆதரவை வழங்கி வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தினார்கள். ஏனைய நாடுகளிலும் இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு முன்பதாகவே தமிழீழ நடைமுறை அரசு செயலிழக்கம் செய்யப்பட்டுவிட்டது.

ஆனாலும் தாயகத்தில் வாழும் மக்களின் குரலாக தொடர்ந்தும் ஏனைய நாடுகளிலும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை செய்வதற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் உறுதியெடுத்துக்கொண்டனர்.

தாயகத்தில் ஏற்பட்ட பேரழிவை தொடர்ந்தும் அனைத்து தமிழ் மக்களிலும் இயல்பாகவே ஏற்படக்கூடிய வேதனையும் விரக்தியும் உடனடியாக ஏற்பட்டாலும் தொடர்ந்தும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்துகொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக 2009 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் பிரான்சிலும், அதே ஆண்டு டிசம்பர் 19 ஆம் திகதி கனடாவிலும் இவ்வாண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி சுவிஸ்லாந்திலும், ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஜேர்மனியிலும் நெதர்லாந்திலும், ஜனவரி மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதி பிரித்தானியாவிலும், பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி டென்மார்க்கிலும், மார்ச் மாதம் 21 ஆம் திகதி இத்தாலியிலும் இவ்வாக்கெடுப்புகள் வெற்றிகரமாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியாவில் நடைபெறுவதற்கான வேலைகளில் அவுஸ்திரேலிய தமிழர் கருத்துக்கணிப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். புலம் பெயர்ந்து வாழும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட ஈழத்து தமிழ் சமூகத்துடன் இணைந்து – தாயகத்தில் அடக்குமுறைக்குள் வாழும் இரண்டு மில்லியன் தமிழர்களின் குரலாக ஒலித்து - தமது வரலாற்றுக்கடமையை செய்வதற்கு அவுஸ்திரேலிய தமிழர்களும் இணைந்துகொள்ளுகின்றனர்.

சனநாயக ரீதியாக சர்வதேசத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களுக்கு அமைவாக தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்ற ஈழவிடுதலை போராட்டத்தின் புதுமையான வடிவமாகவுள்ள வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலான வாக்குப்பதிவானது வரலாற்றின் பக்கங்களில் நிச்சயம் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

- ஈழநேசன்-

Comments