அமெரிக்க இராசாங்கச் செயலகம் வெளியிட்ட 2009ஆம் ஆண்டிற்கான மனித உரிமை மீறல் அறிக்கை பற்றிய ஆய்வுரை

தனது ஒற்றை வல்லரசு ஆதிக்கத்தை வெளிக்காட்டும் நோக்குடன் அமெரிக்க இராசாங்கச் செயலகம் வருடாவருடம் வெளியிடும் உலக மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை மார்ச் 2010 இல் வெளிவந்திருக்கிறது கண்டிப்பதும் தட்டிக் கொடுப்பதும் தனது ஏகபோக உரிமை என்று அமெரிக்கா எண்ணுகிறது. மேற்கு நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் புரியும் அடிப்படை மனித உரிமை மீறல்களைப் பற்றி ஒப்புக்குத் தன்னும் இந்த அறிக்கை கூறாமல் விட்டுள்ளதையே ஒரு பாரிய உரிமை மறுப்பாகச் சுட்டிக் காட்டலாம் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் தமது தவறுகளுக்கு விதி விலக்கு அளிப்பது உலக வழமை.

கடந்த காலத்தில் வெளிவந்த அறிக்கைகளில் சிறிலங்கா அரசைக் கண்டிக்கும் போதெல்லாம் அறிக்கையின் ஆசிரியர்கள் ஈழத் தமிழர்களின் பாதுகாவலர்களான விடுதலைப் புலிகளையும் மிக கடுமையாக விமர்சித்துள்ளனர் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு முன்னோடி நடவடிக்கையாக மத்தியட்சர் நோர்வே ஊடாக ஒரு சமாதானப் பொறியை உருவாக்கிய அமெரிக்கா இன்னும் ஓயவில்லை இந்த அறிக்கையில் யுத்தம் முடிவுக்கு வரும் தறுவாயில் தெற்கு உள்ளிட்ட சிறிலங்காவின் பிரதேசங்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்தப் புலிகள் தீர்மானித்தனர் என்ற ஆதாரமற்ற தகவல் காணப்படுகிறது மேலும் இந்தத் தாக்குதல்கள் அரசியல் வாதிகள் சொத்துக்கள் பொதுமக்கள் மீது நடத்தப்பட இருந்தன என்றும் அது கூறுகிறது இதுகும் உறுதிப்படுத்தப்படாத தகவலாகும். ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கு நாடுகளைத் தூண்டி விடும் நோக்குடன் மேற்கூறிய கற்பனைத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்று நம்பப்படுகிறது இடம் பெயர்ந்த மக்கள் முறையாகக் குடியமர்த்தப்படாமல் உள்ளனர் என்றும் நெருக்கடியான சூழலில் அவர்கள் வாழ்கின்றனர் என்ற தகவலும் இந்த அறிக்கையில் காணப்படுகிறது வவுனியா செட்டிக்குளம் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபடுவதை ஒரு குற்றமாகக் காட்டும் முயற்சியாகவும் அறிக்கையின் கற்பனை வாதத்தைக் கருதமுடியும் மேற்கு நாடுகளில் ஈழத் தமிழ் மனித நேயப் பணியாளர்கள் எதிர்நோக்கும் இடையூறுகளுக்கு இந்த அறிக்கையும் முக்கிய காரணமாகும்.

அமெரிக்காவின் தோழமை நாடான இங்கிலாந்தின் ஈழத்தமிழர்கள் சிலர் பாரிய அச்சுறுத்தல்களைச் நாளாந்திரம் சந்திக்கின்றனர் சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் நீதி மன்றங்களில் நிறுத்தப்படுகின்றனர் இங்கிலாந்தின் நெடிய நீதி மன்ற வரலாற்றில் மிகச் சிறிய குற்றத்திற்கும் தூக்குத் தண்டனை விதிக்கும் ஜட்ஜ் ஜெப்றிஸ் என்பவரைச் சந்திக்கிறோம் இந்தப் பாரம்பரியம் இன்றும் நிலவுகிறது இதற்கு உதாரணமாக ஈழத் தமிழர்களும் பிரிட்டிஸ் பிரசையுமான ஏ. சி. சாந்தன் அனுபவிக்கும் இன்னல்களை எடுத்துக் கூறலாம் பிரபல பிரிட்டிஸ் பொறியியலாளரான சாந்தன் காவல்துறையால் பிடிக்கப்பட்டு நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டார் நீதி மன்றம் அவருக்கு இரு வருட சிறைத் தண்டனை விதித்தது பயங்கரவாதியாகச் சித்தரிக்கப்பட்ட இவர் செய்த ஒரேயொரு குற்றம் சிறிலங்கா விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற போது புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் அங்கு சென்றதாகும.;

சாந்தனுக்கு விடுதலை செய்யப்படும் முன் நீதி மன்றம் விதித்த நிபந்தனைகள் மிகக் கொடியவை அவை மனித உரிமை மறுப்பின் உச்சத்தைத் தொடுகின்றன அவர் ஒவ்வொரு நாளும் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்பமிடவேண்டும் தனது வீட்டிலிருந்து தூர இடத்திற்குப் பயணம் செய்ய முடியாது பிறருடன் சந்திப்புக்களை மேற்கொள்ளக் கூடாது எவரேனும் அவருக்கு அன்பளிப்புப் செய்தால் அது பற்றிப் பொலிசில் பதிவு செய்ய வேண்டும் சாந்தனின் வீட்டுக்கு வருவோர் போவோர் பற்றிய விவரங்களையும் அவ்வாறு பதிவு செய்ய வேண்டும் புலிகளோடு தொடர்பு வைக்கக் கூடாது ஈழத் தமிழ் அகதிகளுக்குத் தான் நற்பணிகளில் ஈடுபடக் கூடாது ஜோசப் ஸ்ராலின் காலத்தில் சைபீரியாவுக்கு அனுப்பப் படுவோருக்கு விதிக்கப்படும் தண்டனை போல் இருக்கிறதல்லவா? இது அமெரிக்க இராசாங்கச் செயலகத்தின் கண்ணில் படாதது தான் மிகவும் வியப்பான செய்தி.

சிறிலங்காவில் மனித உரிமை நிலவரம் படு மோசமாக உள்ளது தாண்டிக்குளம் வவுனியா பரந்த வெளி முகாமில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்களுடைய வாழ்க்கை கவலை அளிப்பதாக உள்ளது ஐ.நா தொடர்ந்து பாரா முகம் காட்டி வருகிறது தமிழர் வாழும் வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுகிறது தொண்டு நிறுவனப் பணியாளர்கள் புலிகளுடன் தொடர்பு உடையவர்கள் என்ற குற்றச் சாட்டுடன் வெளியேற்றப்பட்டுள்ளனர் பலர் கொல்லப்பட்டுள்ளனர் இந்தக் கொலைகள் பற்றிய நீதி விசாரணை நடப்பதில்லை.

சிறிலங்காவில் நடப்பது போல் மேற்கு நாடுகளிலும் தமது இன மக்களுக்காக மனித நேயப் பணிகளில் ஈடுபடுவோர் மிகவும் பாரதூரமான முறையில் ஒடுக்கப்படுகின்றனர் படு கொலைகள் நடைபெறா விட்டாலும் கைதுகளும் சிறை வைத்தலும் பரவலாக நடைபெறுகின்றன சிறிலங்காவின் அத்துமீறல்களை கண்டிக்கும் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகள் அனைத்தும் அதே வகை அத்துமீறல்களை ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செய்கின்றன இதில் வியப்பு என்னவென்றால் சிறிலங்காவிக்கு வெளியே மிகக் கூடுதலான ஈழத் தமிழர்கள் வாழும் நாடான கனடாவின் சிறிலங்கா தொடர்பான நடவடிக்கைகள் தான்.

சிறிலங்காவின் போர் குற்றங்கள் பற்றி மௌனம் சாதித்த கனடா இன்று ஈழத் தமிழர்கள் பற்றிக் கரிசனை காட்டும் தமிழர்களின் பணிகளை முடக்கி நிறுத்தியுள்ளது அமெரிக்காவின் எல்லை நாடான கனடாவில் நடப்பதை இராசாங்கச் செயலகம் அசட்டை செய்வது கவலைக் குரியதாகும். சிறிலங்கா அரசு தனது நாட்டில் வாழும் தமிழர்களுக்குத் தொண்டாற்றும் மனித நேய அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றது. மேலும் இந்த நடவடிக்கையோடு நிறுத்திக் கொள்ளமல் தனது தூதரகங்கள் ஊடாக மேற்கு நாடுகளில் செயற்படும் தமிழ் மனித நேயப் பணியாளர்களை முடக்கும் பிரச்சரங்களை மேற்கொள்கின்றது.

சிறிலங்காவின் இந்த வகை இராசதந்திர நடவடிக்கையின் பிரதிபலிப்பு மேற்கு நாடுகளில் மிக தீவிரமாக இன்று காணக் கூடியதாக இருக்கின்றது தமிழ் மனித நேய பணியாளர்கள் சாதரண குற்றவாளிகள் போல் வேட்டையாடப் படுகின்றனர். இதனால் பாரிய மனித உரிமை மீறல் நடை பெற்ற வண்ணம் உள்ளது. சிங்களவர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் இத்தாலியில் இத்தாலிப் பொலிசார் பக்கச் சார்பான முறையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கின்றனர் சிறிலங்காவின் இத்தாலிக்கான தூதர் இதன் பின்னணியில் இருப்பதைத் இத்தாலி வாழ் தமிழர்கள் நன்கு அறிவார்கள் சில காலத்திற்கு முன்பு இத்தாலிப் பொலிசார் மனித நேயப் பணியாளர்கள் வாழ்விடங்கள் மீது அதிகாலையில் ஒரு பாச்சலை நடத்தியுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையின் போது இந்த தமிழ் பணியாளர்கள் உடல் ரீதியாக தாக்கப்பட்டனர். குற்றச் செயல் புரியாத இந்த அப்பாவித் தமிழர்கள் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர் மனித நேயப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனை அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்களின் தனி மனித சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளின் பொருளாதார மேம்பாற்டிற்கு ஈழத் தமிழர்கள் மிகவும் சிறந்த அர்ப்பணிப்பைச் செய்கின்றனர் சட்டம் ஒழுங்கை மதித்து நடக்கின்றனர் சில வருடங்களுக்கு முன் ஆபிரிக்க வம்சா வழி இளைஞர்கள் பாரிஸ் நகரில் தொடர்ச்சியாகப் பல நாள் நீடித்த வன்முறைகளில் ஈடுபட்டனர் ஊர்திகளும் விடுதிகளும் தீயிடப்பட்டன ஊடகங்கள் இந்த நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளன இப்படியான வன்முறைகளில் ஈழத் தமிழர்கள் ஈடுபட்டதாக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உட்பட எந்தவொரு நாட்டின் வரலாற்றில் காணமுடியாது தமிழர்கள் தெருவில்; பேரணி நடத்தினால் மிகவும் கட்டுப்பாட்டுடன் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாமல் நடத்துகின்றனர் இதைப் பொறுப்பு வாய்ந்த காவல்துறையினர் நன்கு அறிவர் இவர்களையா பயங்கரவாதிகள் என்று கூறுகிறீர்கள்?

பிரான்சில் 17 மனித நேயப் பணியாளர்களின் குடியிருப்புக்கள் மீது பொலிசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு கைதுகளை நடத்தினர் கைது நடந்த பல மாதங்கள் சென்ற பின்னர் 14 கைதிகள் விடுவிக்கப் பட்டனர் ஆனால் அவர்கள் மீது கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன தொலைதூரம் பயணம் செய்யக் கூடாது வெளி ஆட்களுடன் சந்திப்புக்களைச் செய்யக் கூடாது மனித நேயப் பணிகளில் ஈடுபடக் கூடாது போன்ற நிபந்தனைகள் இதிலடங்கும் மிகுதியான 3 பேரக்கும் தலா 7ஆண்டுச் சிறைச் தண்டனை விதிக்கப்பட்டு அவர்கள் சிறையில் இருக்கின்றர்கள்.

ஈழத் தமிழர்களின் அர்ப்பணிப்பையும் சட்ட ஒழுங்கை மதித்து நடக்கும் பண்பையும் நன்கு உணர்ந்த ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனி முதலிடம் வகிக்கிறது தலைநகர் பேர்ளினில் ஈழத் தமிழர்கள் தமது உரிமைகள் தொடர்பாக ஒரு அமைதிப் பேரணி நடத்திய போது அங்கு வந்த ஜேர்மனிக்கான சிறிலங்கா தூதர் இவர்கள் பயங்கர வாதிகள் பேரணியை நிறுத்துங்கள் என்று கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிசாரைக் கேட்டார் எமக்கு வேலை இல்லாமல் மிகவும் அமைதியாகப் பேரணி நடத்தும் இவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் வெளியேறும் படி தூதுவரைப் பொலிசார் பணித்தனர் இப்படியான ஜேர்மனியில் 6 மனித நேயப் பணியாளர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார் 5 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் இவர்களில் சிலருக்காவது சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

மேற்கூறியவற்றைப் பார்க்கும் போது உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஈழத் தமிழர்களுக்கு இருண்ட காலம் தொடங்கி விட்டதை உணர முடிகிறது மேற்குலக நாடுகள் பேச்சில் நீதியையும் செயலில் அநீதியையும் செய்கின்றன ஈழத் தமிழர்களின் மீள் குடியேற்றம் அவர்களுடைய மனித உரிமைகள் பற்றி மேற்கு நாட்டு அரசியல் வாதிகள் பேசுவதைக் காணோம் தமது இனத்திற்காகப் பாடு படுவோரைத் தடுப்பதில் அமெரிக்கா கனடா போன்ற வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பாவின் இத்தாலி பிரான்சு ஜேர்மனி ஆகிய நாடுகளும் தீவிரமாக ஈடுபடுகின்றன.

மேற்கு நாட்டுத் தலைவர்களும் இராசதந்திரிகளும் முன் பின் முரணாகப் பேசுவதில் வல்லவர்களாகத் திகழ்கிறார்கள் அவர்கள் உண்மைக்காக் குரல் கொடுப்பதில்லை தங்கள் தேசிய நலன் அடுத்த தேர்தல் வெற்றி போன்ற வற்றிற்காக ஈழத் தமிழர்கள் பற்றிக் கவலைப்படாமல் செயற்படுகின்றனர் நீங்கள் மாத்திரம் உறுதியான நிலைப் பாட்டை எடுத்து அதற்கு அமைவாக நடக்கத் தீர்மானிப்பீர்கள் என்றால் ஈழத் தமிழர்களின் மனித உரிமை மீறல்கள் காரணமான உயிரிழப்புக்களை தடுக்கலாம். ஆனால் மேற்கு நாட்டு தலைவர்கள் செய்வது என்னவென்றால் அவர்கள் அல்லற் படும் ஈழத் தமிழருக்கு உதவும் மாட்டர்கள். தமிழர்கள் தமக்கு தாமே உதவுவதற்கும் விடமாட்டார்கள் சுவீடன் நாட்டுக் கர்மயோகி டாக் ஹாமர்யோல்ற் வகித்த ஐ.நா செயலாளர் நாயக பதவியில் அமர்ந்திருக்கும் தென் கோரியரான பான் கீ மூன் திடசித்தி அற்றவராகவும் பதவிக்குரிய வினைத் திறன் இல்லாதவராகவும் இருப்பதால் ஈழத் தமிழர் வாழ்வு நரகமாகியுள்ளது செட்டிக்குளம் தடுப்பு முகாம், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகியவற்றில் வதைபடும் தமிழர்கள் பற்றிய கரிசனை இவரிடம் அறவே கிடையாது. சனவரி 2010த்துடன் செட்டிக்குளம் முகாங்கள் அனைத்தும் முடப்படும் என்ற சிறிலங்கா அரசின் உறுதி மொழியை நிறைவேற்றப்படவில்லை இதற்கான அழுத்தத்தை பான் கீ முன் கொடுக்க தவறியுள்ளார். தடுப்புக்காவலில் உள்ள அப்பாவி இளைஞர்கள் பலர் தெற்கில் உள்ள பூசா தடுப்பு முகாமிற்கு மாற்றப்பட்டு வருகின்றனர். ஐ.நா அமைப்பின் சரிவும் வீழ்ச்சியும் பான் கீ மூன் காலத்தடன் தொடங்கியதாக வரலாறு கூறும் என்பது உறுதி.

அமெரிக்க இராசாங்கச் செயலகம் விடுக்கும் அறிக்கை அமெரிக்கக் கண்ணோட்டத்தை மாத்திரம் பிரதி பலிக்கின்றது. மேற்கு நாடுகள் தமது எல்லைக்குள் வாழும் தமிழர்களுக்கு எதிராக புரியும் மனித உரிமை மீறல்களையும் சட்டத்தின் ஊடாக புரியும் அத்து மீறல்களையும் நீதி பரிபாலனக் குறைபாடுகளையும் கண்டிப்பதற்கு இந்த அறிக்கை தவறியுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழருக்க இது கடும் வேதனை அளிக்கின்றது. எதிர் வரும் காலத்தில் அமெரிக்க இராசாங்க செயலக அறிக்கை தமிழ் மனித நேய பணியாளர்களுக்கு எதிரான ஒடுக்கு முறையை மேற்கு நாடுகளை நிறுத்தும் படி கூற வேண்டும் என்பது மனித உரிமை ஆர்வளர்களின் கருத்தாகும்.

- அரசியல் ஆய்வாளர் க. வீமன்

Comments