தேசியக் கொள்கைகளை முன்னெடுப்போருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் - எஸ்.ஜெயானந்தமூர்த்தி

“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை ஆதரித்து, அதனை முன்னெடுப்பவர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவரும், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.

செவ்வியைக் கேட்க இங்கே அழுத்தவும்

அத்துடன், திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் போட்டியிடும் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” அடிப்படைக் கொள்கைகளில் உறுதியாக இருப்பதால், அதனை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஐ.பி.சி) தமிழிற்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்கள் மட்டுமன்றி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கொள்கையில் உறுதியாக இல்லாதவர்களுக்கும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

தீர்வுத் திட்டம் மற்றும் அடிப்படைக் கொள்கைகளில் மட்டுமன்றி, கடந்த அதிபர் தேர்தல், அதன் பின்னர் வேட்பாளர் தெரிவு என்பவற்றின்போதும், தம்மைப்போன்ற கூட்டமைப்பின் அங்கத்தவர்களுடன் கலந்து பேசாது, தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் தன்னிச்சையாக நடந்து கொண்டதாக கண்டனம் தெரிவித்த ஜெயானந்தமூர்த்தி, இருப்பினும் மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் வன்னி மாவட்டங்களில் போட்டியிடும் ஒரு சிலர் தேசியக் கொள்கைகளில் உறுதியானவர்கள் எனவும், அவர்களை இனம்கண்டு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

தேசியத்திற்கும், அதன் கொள்கைகளுக்கு முரணாகக் கடந்த காலங்களில் செயற்பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தினால், மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தாம் கூறிய கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டு, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களும், தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களுக்கு ஆதரவாகச் செயற்படக்கூடியவர்களுக்கும் வேட்பாளர் அனுமதி வழங்கப்பட்டமை கண்டனத்திற்கு உரியது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்தவர்களில் தானும் ஒருவன் என்ற போதிலும், அதன் தற்போதைய தலைமையின் செயற்பாடுகளால், மக்கள் மத்தியில் அது பற்றிய அதிருப்தி காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஜெயானந்தமூர்த்தி, கூட்டமைப்பின் தலைமையில் கடந்த மே மாதத்தின் பின்னர் மாற்றம் தெரிவாகக் கூறியதுடன், தலைமையில் இருப்பவர்கள் கட்சியைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளில் இறங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்கள் இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணங்க இயங்கி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்தியாவை நாம் முழுமையாக ஒதுக்கி விட முடியாது என்பதை ஒப்புக்கொண்டுள்ள போதிலும், இந்தியா மட்டும் விரும்பும் தீர்வை ஏற்க முடியாது எனவும், தீர்வு பற்றி எமது மக்களே முடிவெடுக்க வேண்டும் எனவும், தமிழர் தாயகத்தில் காலூன்ற இந்தியா தற்பொழுது மேற்கொண்டுவரும் பகீரதப் பிரயத்தனத்தையும் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட ரீதியில் யாருடனும் தனக்குக் கோபம் இல்லை என்பதைத் தெரிவித்த ஜெயானந்தமூர்த்தி, ஆனால் கொள்கைளில் உறுதியின்றி தடம் புரளுபவர்களை தன்னால் ஏற்க முடியாது எனவும், மக்களும் அதனையே செய்வார்கள் என்றும் கூறியதுடன், 2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பைச் சுட்டிக்காட்டியதுடன், இம்முறை கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களைக் குழப்பும் வார்த்தை ஜாலங்கள் இருப்பதையும் எடுத்துரைத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவினாலும், கொள்கை முரண்பாட்டாலும், அரசு பலரைத் தேர்தலில் களமிறக்கி இருப்பதாலும், மக்களின் ஆர்வமின்மை போன்ற பல காரணங்களால் கடந்த முறை போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஆசனங்களைப் பெறுவது மிகக் கடினம் எனத் தெரிவித்த அவர், மட்டக்களப்பில் கடந்த முறை பெற்ற 4 ஆசனங்களை இம்முறை பெற முடியாமா என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெறுபவர்களில் தமிழ்த் தேசியத்திற்காய் உழைக்கக்கூடியவர்கள் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தனது விருப்பை வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, தமிழ் மக்களின் அடிப்படைக் கொள்கைக் கோட்பாடுகளில் இருந்து யாரும் விலகிச்செல்ல முடியாது எனவும் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

Comments