உலகத்திற்கு ஏற்றவாறு தேசியத் தலைவர் தனது கொள்கைகளை மாற்றவில்லை

நிலவனால் திட்டமிட்டு பரப்படும் கூட்டமைப்பு வாததிற்கு ஒரு பதிலாகவும்
தேசிய தலைவர் மேற்கொண்ட சில ராஜதந்திர நகர்வுகள் (காணொளி)

ஈழத்தமிழர்களின் இன்றைய அரசியல் தலைமையிலான த.தே.கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்ற சில இராஜதந்திர நகர்வுகள் சரணாகதி, துரோகம் என அடையாளப்படுத்தப்பட்டு வருகின்ற இன்றைய நிலையில் கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட சில இராஜதந்திர நகர்வுகளை மீட்டுப்பார்ப்பது எதிர்காலம் பற்றிய எமது நகர்வுகளுக்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன் உண்மையின் தரிசனத்தில்…

ஆதவன் இணையத்திற்கென ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்[ நிலவன் ]
இதற்கு பதிலாக இந்தக்கட்டுரை


இந்தியாவிற்கு ஏற்றவாறோ, அல்லது வேறு நாடுகளுக்கு விருப்பமான வகையிலோ தமிழ் மக்கள் தமது கொள்கைகளை மாற்ற முடியாது எனவும், தமிழ் மக்கள் தமது அடித்தளத்தில் இருந்து பேரம்பேசும் அரசியலை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசியல் ஆய்வாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான இதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் இருந்து ஒலிபரப்பாகும் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ஐ.பி.சி) தமிழிற்கு வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்த அவர், கொள்கைகளைக் கைவிட்டு கீழிறங்கிச் செல்வது தற்காலத்தில் சாதகம் போன்று தென்பட்டாலும், தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனச்சுட்டிக்காட்டினார்.

“தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை” என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளில் இருந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஒருபோதும் கீழிறங்கிச் சென்றிருக்கவில்லை எனவும், தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசத்தைக்கொண்ட தேசிய இனம் என்ற அடிப்படையில் இருந்து பேச்சுக்கள் ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலைத் தொடர்ந்து வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்தியாவும், மகிந்த அரசாங்கமும் கூட்டுத்திட்டம் தீட்டியிருப்பதாகத் தெரிவித்த ஆய்வாளர் இதயச்சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வட மாகாணத்திற்குள் முடக்கி, அவர்களின் பேரம்பேசும் திறனை மழுங்கடிப்பதே இந்தியாவின் நோக்கம் எனவும், வட மாகாணத் தேர்தல் நடந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் போட்டியிடுமா? என்பதை இப்போதே தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகியவற்றின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இரண்டும் ஒன்றுபோல் காணப்பட்டாலும், அவை வேறான விடயங்களைக் கூறுவதாகவும், மாவீரர்கள், பொதுமக்களின் இழப்புக்களின் பின்னால் தமிழ் மக்கள் அடிபணிவு அரசியலுக்குள் சென்று விட்டார்களா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்த அவர், சமஸ்டிக்காக இவ்வளவு உயிர்களும் இழக்கப்படவில்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஸ்டியை முன்வைத்தும், தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி “தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்” என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்வைத்து தேர்தலில் இறங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய இதயச்சந்திரன், இரண்டு தேர்தல் அறிக்கைகளையும் விரிவாக விளக்கிக் கூறினார்.

சிங்கள தேசத்தின் இறைமையைப் பகிர்வதைப் பற்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தெரிவிப்பதாகவும், ஆனால் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் விஞ்ஞாபனம் தமிழ் மக்களிற்கு தனியான இறைமை இருப்பதைச் சுட்டிக்காட்டி, அதனையே வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்ட அவர், போராட முடியாதவர்களே அடிபணிவு அரசியலை மேற்கொள்ள முனைவர் எனவும் தெரிவித்தார்.

தனிநபர் வசைபாடல்கள் இடம்பெறுவது ஆரோக்கியம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆய்வாளர் இதயச்சந்திரன், இதனை பிரதேசவாதமாகத் திசை திருப்பிவிடக்கூடிய அபாயம் இருப்பதாகவும் கூறியதுடன், திருகோணமலையின் ஒரு பகுதியை அநுராதபுரத்துடன் இணைத்துவிடும் திட்டம் அரசுக்கு இருப்பதால், திருகோணமலையில் ஒரு பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

-இதயச்சந்திரன்-

Comments