த.தே.ம.முன்னணிக்கு வாக்களியுங்கள் - கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னெடுக்கும் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு" தாயக மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும், அதற்கு புலம்பெயர்ந்த மக்கள் தம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்றும் "கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள்" அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.



"தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு" ஆதரவு திரட்டும் மற்றொரு கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தினை கடந்த வியாழக்கிழமை மாலை 5:00 மணியளவில் கனடா கந்தசுவாமி கோவிலில், கனடா தமிழ் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அமைப்பு நடத்தியிருந்தது. இவ்வாறானதொரு கொள்கை விளக்க, மற்றும் ஆதரவுப் பொதுக்கூட்டம் கடந்த 27ஆம் நாளும் கனடாவில் இடம்பெற்றிருந்தது.

"இப்போழுது விழுந்தால் இனி எப்பொழுதும் எழ முடியாது, உண்மையான தேசியத்தின் புதல்வர்களை நாடாளுமன்றம் அனுப்புவோம்" என்ற முழக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில், தமிழ் மக்கள் தமது அடிப்படைக் கொள்கைகளில் ஏன் வலுவாக நிற்க வேண்டும் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்கள் தற்பொழுதும், கடந்த காலத்திலும் மேற்கொண்டுவந்த தவறான நடவடிக்கைகள் பற்றியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் எடுத்து விளக்கினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான எஸ்.திருச்செல்வம், "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு" ஏன் ஆதரவளிக்க வேண்டும் என்பதை எடுத்து விளக்கியதுடன், தவறினால் ஏற்பாடும் பாதகங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

அத்துடன், யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் காணொளி வழியாக வழங்கிய சிறப்புக் கருத்துப் பகிர்வும் இடம்பெற்றிருந்தது. இவரைத் தொடர்ந்து உரையாற்றிய "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்" கனடா இணைப்பாளர் மதியழகன், இந்தக் கட்சியின் வெற்றியும், அதன் முக்கியத்துவமும் பற்றிக் கூறியதுடன், ஊடக, நிதி பலம் இன்றி தேர்தலில் களமிறங்கியுள்ள "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு" www.tamilnationalpf.org என்ற இணையத்தளம் ஊடாக மக்கள் தமது நிதிப் பங்களிப்பினை வழங்க வேண்டும் என கோரிக்கை வடுத்துள்ளார்.

Comments