சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள் - பிரான்ஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பு

தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் சார்பாக சைக்கிள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்டு போட்டியிடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. செல்வராசா கஜேந்திரன், பொன்னம்பலம் கஜேந்திரகுமார், திருமதி பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் எமது அடிப்படைக்கொள்கையான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் போன்றவற்றை இலட்சியமாகக் கொண்டு அன்று தொட்டு இன்று வரை எமது தேசத்திற்காக குரல் கொடுத்து வருகின்றார்கள். அதன் தொடராக இன்று நாடாளுமன்ற தேர்தலிலே போட்டியிடுகின்றார்கள்.


அன்பான எம் தேசத்தின் உறவுகளே!

நாம் அனைவரும் ஓர் அணியாக திரண்டு எமது பொன்னான வாக்குகளை சைக்கிள் சின்னத்திற்கே அளித்து வெற்றியடையச்செய்வதன் மூலம் எமது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுப்பதற்கு உறுதி எடுத்துக்கொள்வோம். இவர்கள் எம் தேசத்தின் உறவுகளின் உரிமைப்போராட்டத்திற்காக ஓங்கிக்குரல் கொடுப்பார்கள். குரல் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். தொடர்ச்சியாக இவர்களின் பணி எமது மக்களுக்காக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். ஆகவே அன்பானவர்களே இவர்களை வெற்றியடையச்செய்வதால் எமது இலக்கை அடையலாம்.

தமிழ்மக்களாகிய நாம் ஓங்கிக்குரல்கொடுப்போம். அது மட்டுமல்ல அன்புத்தாய்மார்களே, சகோதரிகளே எம் தமிழ்ப்பெண்கள் எம் தேசத்திலே சொல்லமுடியாத துன்பதுயரங்களை அனிபவித்துக்கொண்டு இருக்கின்றார்கள். எமது உறவு பத்மினி சிதம்பரநாதன் அவர்களின் கட்சியினைப் வெற்றியடையச்செய்வதன்மூலம் எம் தேசத்தில் வாழும் பெண்களின் அவலநிலையை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைக்கமுடியும்.

ஆகவே அன்பான எம் தேசத்தின் உறவுகளே! நாம் அனுபவித்த துன்ப துயரங்களை சர்வதேச சமூகத்தின் முன் கொண்டு வரவேண்டும். ஆகவே நாம் அனைவரும் ஒரே கொள்கையின் கீழ் நின்று இந்த சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிப்போம்.

தமிழ் மக்களாகிய நாம் காலம் காலமாக சிங்களதேசத்தின் இனஅழிப்பிலே சிக்குண்டு ஏமாற்றப்பட்டு வருகின்றோம். இந்த இன அழிப்புக்கு பல சர்வதேச நாடுகளும் துணைபோகின்றது. துணைபோனதும் குறிப்பிடத்தக்கது. எமது வரலாற்றிலே நாம் ஒடுக்கப்படுவதும், அடக்கப்படுவதும் வரலாறாகிவிட்டது. ஆகவே இனியும் நாம் பொறுமை காப்பது பொருத்தமல்ல. விலைமதிக்க முடியாத உயிர்கள்தான் எத்தனை எத்தனை இழந்து நிற்கின்றோம். எமது இனம் சாகப்பிறந்தவர்கள் அல்ல. வாழப்பிறந்தவர்கள். எமது உரிமைகளை நாமே தீர்மானிக்கும் சுயஉரிமை உடையவர்கள் என்பதை சிங்கள தேசத்திற்கு உரத்துக்கூற வேண்டும். எமது இனம் மௌனமாக இருந்ததன் விளைவு இன்று வவுனியா வதைமுகாம்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது.

எமது உறவுகள் வவுனியா வதைமுகாமிலே உற்றார் உறவுகளை இழந்து அங்கவீனர்களாக்கப்பட்ட நிலையில் உடமைகளையும் இழந்து இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு நாதியற்றநிலையில் வாய்பேசாமடந்தைகளாக இருகின்றார்கள். எமது பெண்கள் எதை இழக்கக்கூடாதோ அவையெல்லாவற்றையும் இழந்து கொண்டு இருக்கின்றார்கள். சிங்கள காடையர்களின் கையிலே எமது சகோதரிகள் சிக்குண்டு தவிக்கின்றார்கள். இவர்களின் எதிர்காலம் சபீட்சமாக அமையவேண்டும் இவர்களுக்கும் இனிமையான எதிர்காலம் அமையவேண்டும். எமது தேசத்தின் உறவுகளின் விடுதலைக்காக சகோதரி பத்மினி சிதம்பரநாதன் அவர்கள் குரல்கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்.

தொடர்ச்சியாக அவரின் பணி எமது மக்களுக்காக தொடரவேண்டும் என்று வாழ்த்துகின்றோம். கடந்த காலங்களிலே எமது தாயகதேசத்தின் பெண்களின் வீரம், திறமை, தியாகம் அற்பணிப்புக்கள் எல்லாவற்றையும் பார்த்து வியந்திருந்தோம். ஆனால் தற்போதைய கால கட்டத்திலே எமது உறவுகளின் துன்ப துயரங்களை, அடிமை வாழ்க்கையை எடுத்துக்கூற முடியாத நிலையில் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்த துன்பதுயரங்களுக்கு எல்லாம் ஓர் முற்றிப்புள்ளி வைக்கும் இறுதிக்காலகட்டத்தில் தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் இருக்கின்றோம்.

ஆகவே எம் தேசத்தின் உறவுகளே உங்களது பொன்னான வாக்குகளை சகோதரி பத்மினி சிதம்பர நாதன் போட்டியிடும் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கட்சிக்கு வாக்களித்து எமது தேசத்திற்கு பலம்சேர்ப்போம். சர்வதேசம் எம்மையும் திரும்பிப்பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஆகவே எமக்கு என்று ஒரு நாடு அமையும்வரை நாம் அனைவரும் ஒற்றுமையாக நின்று உழைப்போம் என்று உறுதி எடுத்துக்கொள்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
தமிழ்ப்பெண்கள் அமைப்பு பிரான்ஸ்.

Comments