நிலமும், புலமும் ஓரே இலட்சிய பாதையில் சைக்கிள் சின்னத்தில் பயணிப்போம்!

முள்ளிவாய்க்காலுடன் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை தொடரமாட்டார்கள் என சிறிலங்கா அரசும் சிங்கள இனமும் நம்புவதாகவே தற்போதய இலங்கைத்தீவின் அரசியல் நிலைப்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.


தமிழ் மக்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு தனிச்சிங்கள அடையாளங்கள் தமிழர் தேசத்தில் நிறுவப்பட்டுவருகின்றன. தமிழர்கள் ஒரு தனித்துவமான கலாச்சாரம், மொழி, பண்பாடு மற்றும் ஒரு பூர்வீக தாயகத்தைக்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு பூரண சுயநிர்ணயம் உண்டு என்பதை சிறிலங்கா அரசோ சிங்கள இனமோ ஏற்றுகொள்ள மறுப்பதுடன் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் தமிழ் அரசியல் தலைவர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துரைக்காதவாறு 6வது திருத்தச்சட்டம் ஊடாக தடுத்தும் உள்ளது.

இதன் காரணத்தால் இப்பொழுது தாயகத்தில் அரசியல் தலைமைகள் தமது நிலைபாட்டை எடுத்துரைக்க முடியாதுள்ளமையை மக்களுக்கும் அனைத்துலகத்திற்கும் எடுத்துரைப்பதுடன் இந்த காரணத்தால் தான் தாம் தாயகத்தில் அரசியல் முடிவுகளை சுதந்திரமாக எடுக்கமுடியாதுள்ளது என்பதை அனைத்துலகத்திற்கு சுட்டிக்காட்டி சிறிலங்கா அரசிற்கு அழுத்தங்களை பிரயோகித்து சிறிலங்காவின் அரசியல் யாப்பில் உள்ள 6வது திருத்தச்சட்டத்தை நீக்க முயற்சி எடுக்கப்படவேண்டும்.

6வது திருத்தச்சட்டம் நீக்கப்படும் சந்தர்ப்பத்தில் தான் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசையின் அடிப்படையில் தமது அரசியல் தலைமைகளை தெரிவுசெய்வதுடன் புலத்து தமிழ்மக்களும் தாயக தமிழ்மக்களும் ஒரே அணியில் தமிழ் தேசியத்தின் இறைமையை தக்கவைத்துக்கொள்ளமுடியும்.

அதைவிடுத்து தமது இயலாமையை அரசியல் தலைமைகள் தமிழ் மக்கள் மீது திணிக்கமுயல்வது சனநாயக விரோதமாகவே பார்க்கமுடியும். தமிழ் தேசியத்தின் இறைமை என்ற விடயத்தில் எந்த சமரசத்திற்கும் தமிழ் அரசியல் தலைமைகள் செல்வதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதை நாம் திடமாக அறிவோம்.

புலத்து தமிழ் மக்கள் தமக்கு உள்ள அரசியல் சுதந்திரத்தின் அடிப்படையில் தமது அரசியல் அபிலாசைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே அரசியல் அபிலாசையுடன் தான் தாயக தமிழ் மக்களும் உள்ளனர் என்பதை அரசியல் தலைமைகள் மறுக்க முடியாது.

தந்தை செல்வாவின் பிறந்த தினத்தில் அவரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிப்பது மட்டும் அவருக்கு வழங்கும் மரியாதையாகாது. தந்தை செல்வா தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையை 1977ம் ஆண்டு ஆவணமாக தமிழ் அரசியல் தலைமைகளிடம் வழங்கியுள்ளார்.

அது தான் தமிழ் மக்கள் அரசியல் தலைமைகளுக்கு வழங்கிய ஆணை. அந்த ஆணையைதான் புலம் பெயர் தமிழ் மக்களும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதை தாயக தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொண்டு புலம் பெயர் தமிழ் மக்களுடன் இணைந்து செயலாற்றவேண்டும்.

புலம் பெயர் தமிழ் மக்களின் கருத்துக்களை மதித்து அவர்களுடன் கலந்துரையாடி செயற்படும் அரசியல் தலைமைகளையே புலம்பெயர் தமிழ் மக்களின் அமைப்புக்கள் ஆதரிக்கமுடியும். இயற்கையோ செயற்கையோ தாயக மக்களை தாக்கிய போது கரம்கொடுப்பவர்கள் புலத்து தமிழ் மக்களே! இதை புரிந்த சிறிலங்கா அரசு கூட அண்மையில் தாயக தமிழ் மக்களினதும் மண்ணினதும் அபிவிரித்திற்கு உதவுமாறு புலத்து தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

தாயக அரசியல் தலைமைகள் என்று கூறிக்கொள்பவர்கள் இதனை புரிந்துகொள்ளாது தமது சுய விருப்பங்களுக்காகவோ இயலாமையாலோ புலம் பெயர் தமிழ் மக்களை புறக்கணித்து செயல்படுவது தாயக மக்களைத் தான் பாதிக்கும்.

அன்பார்ந்த தமிழ் மக்களே!!

சிறிலங்காவால் திட்டமிட்டு தமிழ் மக்கள் பெரும் அவலம் ஒன்றை சந்தித்துள்ள நிலமையில் தேர்தல் ஒன்று திணிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக அரசியல் தலைமைகள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் தொடர்பாடல்களின் அடிப்படையில் டென்மார்க் தமிழ் மக்களின் சனநாயக அமைப்பாகிய நாம் யாழ் திருமலை மாவட்டத்தில் சையிக்கிள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியருக்கே தாயக மக்கள் வாக்களிப்பதை ஆதரிக்கின்றோம்.

தமிழ் தேசிய மக்கள் முண்ணனியினர் புலம் பெயர் மக்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளை பேணிவருவதுடன் கடந்த காலங்களில் புலம் பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழ் மக்கள் நடாத்திய போராட்டங்களிலும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைமைகள் நேரடியாக பங்குபற்றியுள்ளனர். புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் உங்கள் தாயக உறவுகளுடன் தொடர்புகளை ஏறப்படுத்தி தமிழ்தேசிய மக்கள் முண்ணனியினர் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு வாக்களித்து வெற்றியடையச்செய்யுமாறு வேண்டிக்கொள்ளுங்கள்.

யாழ் மற்றும் திருமலை தவிர்ந்த மற்றய தமிழர் பிரதேசங்களில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதாக நாம் அறிகின்றோம் ஆதலால் குறிப்பாக அம்பாறை, வன்னி மற்றும் மட்டக்களப்பு தொகுதிகளில் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை டென்மார்க் தமிழர் பேரவையாகிய நாம் வரவேற்க்கின்றோம்.

நிலமும் புலமும் இணைந்து தமிழர்களின் தாயகம் , தேசியம் ,இறைமை மற்றும் சுயநிர்ணயஉரிமைக்காக குரல் கொடுக்க சையிக்கிள் சின்னத்திற்கு வாக்களித்து உறுதியான அரசியல் அணியை உருவாக்குவோம்.! தாயக தமிழ் மக்களின் சகலவிதமான கட்டுமான , பொருளாதார வளர்சியிலும் கரம்கொடுக்கும் புலம் பெயர் தமிழர்கள் தாயகத்தின் அரசியல் நிலைப்பாட்டிலும் சரியான முடிவுகள் எடுக்கப்பட வழிகாட்டவேண்டிய உரிமையுடையவர்கள்!

தமிழர்களின் இறைமை அரசியல்ல!

அது எமது உரிமை.!

அரசியல் விவகாரக்குழு

த.பஞ்சராசா (தலைவர்)

டென்மார்க் தமிழர் பேரவை

தொலைபேசி 0045 52173671

மின்னஞ்சல்: forum@dansktamilskforum.dk

www.dansktamilskforum.dk/tamil

Comments