இழப்புக்களை மூலதனமாக வைத்து இணக்க அரசியல் பேச கூடாது

தமிழீழ தாயகத்தில் தமக்கு எட்டிய வழிகளில் எதையாவது பெறுவோம் அல்லது தம்மால் இயன்ற வழிகளில் எதையாவது செய்வோம் என்ற தொனியில் கூட்டமைப்பு மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்கள் மக்களிற்கு போதிக்கின்றன. இதற்கு மூலதனமாக கடந்த கால போரின் போதான இழப்புக்களை கூறி, இனி தமிழினம் இப்படியான அழிவினை எதிர்கொள்ள முடியாது, தாங்காது என பயமுறுத்தப்படுகின்றார்கள்.


அல்லது ஒருபடி மேலே சென்று இவ்வளவு காலமும் புலிகள் என்ன பிடுங்கினார்கள் என்றும் கேட்கப்படுகின்றது. இப்படியான கறாரான வசனங்கள் ஊடகங்களுக்கு வராமல் பார்த்து கொள்வதிலும் ஜாக்கிரதையாக இருக்கின்றனர்.

ஊர்களில் சின்ன சின்ன கூட்டங்களில் கூட்டமைப்பு மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்கள் என்னென்ன சொல்கின்றார்கள் என்பதனை ஊடகக்ங்களில் பார்த்தால் ஒட்டு மொத்த சனமும் என்ன செய்யும் என்று தெரியாது.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் ஒரு மாவீரரின் சகோதரர் கூடவே முள்ளிவாய்க்காலில் தனது குடும்பத்தை பறி கொடுத்தவர் இவ்வாறு கூறியுள்ளார். அண்ணர் நீங்கள் எதை வேணும் எண்டாலும் செய்யுங்கோ , கதையுங்கோ ஆனால் ஏன் மீண்டும் மீண்டும் இயக்கத்தை இழுக்கின்றீர்கள்.

உங்களுக்கு இயக்கத்தை பிடிக்காவிடில் சங்கரி போல போயிருக்கலாம் அல்லவா ஆனால் இப்போது அவர்கள் இல்லாதபோது கதைக்க கூடாது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பிரமுகரும் சொன்ன பதில் தம்பி அவையட காலம் எல்லாம் போயிட்டுது இனி நாங்கள் சொல்வதனைதான் கேட்கவேண்டும் எங்களுக்கு தெரியும் என்ன செய்யவேணும் என்று. நாங்கள் புலிகளிட்ட போக இல்ல அவையள்தான் எங்களை வந்து கேட்டவ ஏனெண்டால் அவையளுக்கு யாழ்ப்பாணத்தில அப்போது ஆதரவு இல்லை என்று கூறியுள்ளார்.

இவ்வாறு தேர்தல் களங்களில் சூடு பிடிக்க யார் யார் பக்கத்தில் இல்லையோ அவர்களை போட்டுக்கொடுத்து வாக்கு கேட்பது அதிகரித்துள்ளது.இதை விட சிங்களவனின் நேரடியான அரசியல் கருத்துக்கள் பரவாயில்லை போல இருக்கு என்று கூறும் அளவிற்கு தமிழ் வேட்பாளர்களின் கருத்துக்கள் உள்ளூரில் பரப்பபடுகின்றன.

இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயம் என்னவெனில்

கடந்த கால இழப்புக்களை மக்களுக்கு எடுத்து சொல்லி அவை எல்லாம் வீண் என்றும், இனிமேல் அவ்வாறு வரக்கூடாது என்றும் மக்களை பயமுறுத்தி, எச்சரித்து வாக்கு கேட்பது எந்தளவிற்கு நியாயம் உண்டு.

சிங்களவனும் முள்ளி வாய்க்காலை வைத்து வெருட்டித்தான் அரசியல் செய்கின்றான். தமிழ் தேசிய கூட்டமைப்பும் மற்றும் அரச ஆதரவு கட்சிகளும் அதனைத்தான் செய்கின்றனவா? சிங்களவன் நேரடியாக உண்மையாக மிரட்டுகின்றான்.

தமிழ் தலைவர்கள் நாசூக்காக மிரட்டி வாக்கு வாங்க பார்க்கின்றார்கள் இவைதான் வித்தியாசம். ஊடகங்களிற்கு ஒரு பேச்சு உள்ளூரில் ஒரு பேச்சு. சரி அப்படித்தான் இழப்புக்களை மூலதனமாக வைத்து அரசியல் பேசி மக்களின் வாக்குகளை கவர்ந்து சென்றாலும் அதன் பின்னர் ?

இன்னும் இன்னும் இருப்பதனையும் கொடுப்பதற்கும் விட்டு கொடுப்பதற்கும் வழி கோலுவனவாகவே இணக்க அரசியல் அமையும். உருக்கு போல் உறுதியாக இருந்தாலும் ஒன்றும் நடக்கபோவதில்லை என்று விமர்சனம் செய்பவர்கள் இணக்க அரசியல் மூலம் எதையாவது சாதிக்க முடியுமா எனவும் சாத்தியப்பாடாக கூறவேண்டும். அனால் நிலவரம் அவ்வாறு இல்லை

வரதராஜ பெருமாளின் வரவு,பிள்ளையானிற்கான இந்திய அழைப்பு, வன்னியில் ஈ.என்.டி.எல்.எவ் இனரின் பிரசன்னம் கூடவே இந்தியாவின் யாழ் குடா நாட்டிற்கான அலுவலகம் என ஓர் மிகப்பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி எந்த கால கட்டத்திலும் மீழ முடியாத அடிமைகளாக மக்களை திசை திருப்பவும்; எந்த காலத்திலும் ஒன்று படுத்த முடியாமல் வடக்கையும் கிழக்கையும் உருவாக்குவதே இந்திய , இலங்கை அரசின் கூட்டு சதி. இதற்கான நகர்த்தல்கள் நடைபெறுகின்றன என சாதாரண ஓர் பாடசாலை ஆசிரியர்களுக்கே புரிகின்றது எனில் அரசியல் வாதிகளுக்கு ஏன் புரியவில்லை?

இந்தியாவின் இத்தகைய நகர்வுகள் பற்றிய சந்தேகங்களை ஏன் கூட்டமைப்பு இந்தியாவை கேட்கமுடியாது? கேட்டால்தூக்கி எறிந்து விடுவார்களா?ஏன் கேட்காவிட்டாலும் கூட தூக்கி எறியமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

இந்தியா வடக்கு கிழக்கை சிங்களத்துடன் எதிர்த்து இணைப்பதனை விட சிங்களத்திற்கும் இணங்கி போய் அதே நேரம் தமிழர்கள் பிரதேசத்தில் சிங்களத்திற்கு எதிரான அரசியல் கட்டமைப்பினை காலங்காலமாக வைத்திருக்க வேண்டும் அது தமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் இதுவே இந்தியாவின் திட்டம். தமிழர்களுக்கு தீர்வு வேணும் அல்லது அமைதியாக வாழ வேண்டும் என்று இந்தியா நினைப்பதில்லை. மாறாக பலம் அற்ற, சொத்தையான சிங்கள எதிர்ப்பு அரசியல் சூழல் இருக்கவேண்டும் அதனை வைத்து தாம் குளிர்காய வேண்டும் என்பதே இந்திய நிகழச்சி நிரல்.

ஆகவே கிழக்கில் பிள்ளையான் வன்னியில் ஈ.என்.டி.எல்.எவ் குடா நாட்டில் முடிந்தால் கூட்டமைப்பு இல்லையேல் இன்னோரு அமைப்பு இவ்வாறுதான் இந்திய திட்டம் நகரப்போகின்றது.

ஆகவே இழப்புக்களை மூலதனமாக வைத்து இணக்க அரசியல் பேசி , இராஜதந்திர விளையாட்டுக்களை கூறி ஏமாற்றுவதனை விட நேர்மையாக உறுதியாக எமது மாவீரர்கள், பொதுமக்களின் இலட்சியங்களை கூறி எதற்கும் துணிந்து நிற்பதே மேல்.

Comments