நளினி மீது பொய் வழக்கு -தொடரும் கருணாநிதியின் துரோகம்.


ஒரு கோட்டை சிறியதாக்க அதன் அருகிலேயே ஒரு பெரிய கோடு போட்டால் அது சிறியதாகி விடுகிறது.இதையே தான் கலைஞர் கருணாநிதி வேத வாக்காகக் கொண்டிருக்கிறார் போலும்.ஒரு துரோகச்செயலை மூடி மறைக்க இன்னொரு துரோகம் அதைவிட பெரியதாய் அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்.

ஈழப்பிரச்சினையில் கடிதம் எழுதி எழுதியே மூண்டெழுந்த உணர்வலைகளைக் காலம் தாழ்த்தியபடி இந்தியா செய்த அத்தனை துரோகத்துக்கும் ஒத்து ஊதிக்கொண்டிருந்த இந்தக் கலைஞர் ,பேரனுக்கும் மகனுக்கும் மந்திரி பதவி வாங்க முதுகு வலியையும் பொருட்படுத்தாமல் தில்லிக்கு சென்று சண்டையிட்டார் .

முத்துக்குமார் உயிரை ஈகம் செய்த பொது மாணவர் பிரச்சினை வந்துவிடக் கூடாதென்று கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுப்பளித்து மாணவர் சமுதாயத்தை இழிவு படுத்தினார்.

இப்படி தன் சக்திக்கு மீறி துரோகமிழைத்து வரும் கருணாநிதியிடம் நளினியின் ஆயுள் தண்டனையை குறைக்கப் பரிந்துரை செய்யும் கருணை மனு வந்தபோது தன்னிடம் சகல அதிகாரங்கள் இருந்த போதும் அதை மறுத்து தண்டனைக்குறைப்பு செய்யவில்லை. பொய் வழக்கில் சிறையிலிருக்கும் நளினிக்கு கருணை காட்டாத கலைஞர் தினகரன் பத்திரிகை எரிப்பு வழக்கில் சிறையிலிருந்த குற்றவாளிகளுக்கு கருணை காட்டினார்.

நளினியின் கருணை மனு மீதான வழக்கு விசாரணையின் போது நிதிபதி கேட்ட கேள்விக்கு அரசு வழக்கறிஞர் பதில் அளித்ததைக் கேட்டு நீதிமன்ற வளாகமே சிரித்தது. நளினி விடுதலை செய்யப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று நளினியின் தாயார் வசிக்கும் பகுதியின் காவல்துறை ஆய்வாளர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அரசு இந்த முடிவுக்கு வந்ததாக சொல்லியதைக்கேட்டு யாரும் சிரிக்காமல் இருக்க முடியாது தான்.

விசாரணையில் தான் பிடியில் இருக்கும் கைதி ஒருவரிடமே தான் நினைத்ததை வாக்குமூலமாக வாங்கும் சக்தி படைத்த காவல்துறை ஆய்வாளர் தரும் வாக்குமூலம் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை புரிந்துகொள்ள பெரிய ஞானம் தேவையில்லை தானே.

நளினியிடமே பொய் வாக்குமூலம் வாங்கி பத்தொன்பது ஆண்டுகள் சிறை வாசம் வாங்கிக்கொடுத்த கயவனின் வாக்குமூலம் மட்டும் நீதியோடு இருக்குமா என்ன ?

பிரபாகரன் அவர்களின் தாயார் இந்தியாவுக்கு வருவதைத் தடுத்துத் திருப்பியனுப்பியதை மறைக்க சிறையிலிருக்கும் நளினியிடம் கைபேசி இருந்ததாகப் பொய்வழக்குப்போடுகிறார் கருணாநிதி.

நளினி வெளியே வர இருந்த அத்தனை வாய்ப்புகளையும் தட்டிவிட்டு அவரை மென்மேலும் சிறைவாசியாக்கி விடுதலைக்கான எந்த வாய்ப்பும் அந்ததாய்க்கு கிடைக்கவிடாமல் செய்த கருணாநிதியின் துரோகம் முடிவே இல்லாமல் தொடர்வது தான் தமிழினத்தின் சாபக்கேடு.

Comments