திரு. உருத்திரகுமாரன் அவர்களால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே மக்கள் பேரவையினர் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்!

'புதிய உலக ஒழுங்கு' என்ற சொற் பதத்தினூடாக தமிழீழ மக்கள் கேட்பாரில்லாத நிலையில் அழிக்கப்பட்டு, தமிழீழ மக்களது சுதந்திரப் போர் முடக்கப்பட்டு விட்ட பின்னர், தமது சுதந்திர வாழ்வுக்காகத் தம்மை அர்ப்பணித்த அனைத்துத் தமிழர்களும் சிங்கள தேசத்தால் மீண்டும் அடிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்களால் வாய் திறந்து எதையுமே கேட்க முடியாது. அவர்களுக்காகக் கேட்பதற்கு யாருக்கும் அனுமதியும் கிடையாது. தற்போது, நாடாளுமனறம் சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிங்கள வரம்பிற்குட்பட்டே வாய் திறக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினுள்ளேயே உள்ளார்கள்.

ஆனால், சிங்கள தேசத்தின் இந்த இன அழிப்பிற்கும், இன அடக்குமுறைக்கும், இன அச்சுறுத்தலுக்கும் ஆளாகாத ஈழத் தமிழர்களாக புலம்பெயர் தமிழர்கள் இருப்பதே இந்தக் கொடூர கால கட்டத்திலும் சற்று ஆறுதலான விடயம். தமிழர்களின் பலத்தையும், அவர்கள் மத்தியில் உருவாகி வெடித்த குழப்பங்களையும் பலவீனப்படுத்துவதற்காக சிங்கள தேசம் எண்பதுகளில் அனுமதித்த தமிழ் இளைஞர்களது வெளியேற்றம் புலம்பெயர் தமிழ்ச் சக்தியாகத் திரண்டு விடுதலைப் போருக்குப் பலம் சேர்க்கும் என்று சிங்கள அரசுகள் அப்போது எதிர் பார்க்காத காரணத்தால், புலம்பெயர் தமிழர்கள் சிங்கள தேசத்தின் இன அழிப்பிற்குள்ளாகாமலும், முள்ளி வாய்க்கால் பேரழிவுக்குப் பின்னரும் சிதைக்க முடியாத தமிழர் பலமாகவும் சிங்கள தேசத்தை இன்றும் அச்சுறுத்தி வருகின்றது.

சிங்கள தேசம் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் உட்பட்ட இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளின் யுத்த தளபாட, பொருளாதார, இராணுவ உதவிகளையும் பெற்று, அனைத்து நாசகார ஆயுதங்களையும் பயன்படுத்தி முள்ளிவாய்க்காலை தமிழின அழிப்பின் இறுதிக் களமாக்கி, மனித வேள்வியை நடாத்தி முடித்தும், தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமலே உள்ளது. முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புடன் தமிழீழ மக்கள் மீண்டும் சிறைப்படுத்தப்பட்டு, அடிமை நிலைக்குள் கொண்டுவந்து, சிங்கள தேசம் அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடி முடித்துவிட்ட நிலையிலும், புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்கள் அவர்களது தூக்கத்தைக் கெடுத்தே வருகின்றன.

முற்றாக நொருக்கப்பட்ட தமிழீழ மக்கள் மீண்டும் எழுந்திருக்கவே பல வருடங்கள் எடுக்கும். அதற்குள், அவர்கள்மீது தொடர் நிர்ப்பந்தங்களையும், பொருளாதார நெருக்கடிகளையும் ஏற்படுத்தி, சிங்களக் குடியேற்றங்கள் மூலம் அவர்களது நிலத்தை அபகரிப்பதன் மூலம் அவர்கள் மத்தியில் தாயகம் பற்றி சிந்தனையே மீண்டும் எழுந்து விடாமல் தடுத்து விட முடியும் என்ற சிங்கள மகிந்த சிந்தனையில் புலம்பெயர் தமிழர்கள் மண்ணள்ளிப் பொட்டு வருகின்றனர். இதனால், முள்ளிவாய்க்காலை ஒத்ததொரு போர்க் களத்தை புலம்பெயர் தேசங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் சிங்கள தேசத்திற்கு உருவாகியுள்ளது. 'புலம்பெயர் தமிழ் சக்திகளைச் சிதைப்பதே எமது அடுத்த இலக்கு' என மகிந்த வாரிசுகள் அடிக்கடி உச்சரிப்பது வெறும் உல்டா வார்த்தைகள் அல்ல.

தமிழீழ விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் வரை துரத்தப்பட்டு, அழிக்கப்படும்வரை சிங்கள தேசத்தின் சதி வலையில் எம் மத்தியில் வாழும் எத்தனையோ கொலைக் கரங்கள் துணை போயுள்ளன என்பதை அந்த யுத்த களத்தின் இறுதி நாள்வரை அங்கேயிருந்து தப்பி வந்த விடுதலைப் போராளிகள் கண்ணீர்க் கதைகளாகக் கூறி வருகின்றனர். விடுதலைப் புலிகளுக்குப் பெரும் நம்பிக்கை கொடுத்து, அவர்களை முள்ளிவாய்க்கால் வரை நகர்த்தியதில் வெளி சக்திகளின் பெரும் பங்கு உள்ளன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

முள்ளிவாய்க்கால் போன்ற தமிழினப் பேரழிவுகளை சிங்கள தேசத்தால் புலம்பெயர் தேசங்களில் நிகழ்த்த முடியாது எனினும், புலம்பெயர் தமிழர்களிடையே ஊடுருவியிருக்கும் சிங்கள தேசத்தின் புலனாய்வாளர்களும், தமிழ் ஒட்டுண்ணிகளும் பெரும் அரசியல், சமூகப் பேரழிவுகளை எம்மீது நிகழ்த்த முடியும். அதுவே சிங்கள தேசத்தின் இலக்காகவும் உள்ளது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினைப் பல கூறுகளாகப் பிளவு கொள்ள வைப்பது, அவர்களிடையே முரண்பாடுகளை வளர்ப்பது, அவர்களிடையே மோதல்களை உருவாக்குவது என்ற சிங்கள இலக்குகளை நாம் அலட்சியப் படுத்த முடியாது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம்பெயர் தமிழ் சக்திகளை இரு துருவப்படுத்தும் முயற்சி ஓரளவு வெற்றி தரும் நிலையையே அவர்களுக்கு ஏற்படுத்தியது. இதற்காக சிங்கள தேசம் இந்திய உளவாளிகளையும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் களம் இறக்கியிருந்தது. மோதல் நிலைக்கும், ஒருவருக்கு ஒருவர் குழி பறிக்கும் முயற்சிகளுக்கும் பெரும் ஊக்கமும் கொடுக்கப்பட்டது. ஆனாலும், மேற்குலகின் கல்வியையும், சிந்தனைகளையும் உள்வாங்கியிருந்த புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் தேசிய உணர்வாளர்கள் விழித்துக் கொண்டதனால் அந்த அபாயம் தணிந்து போனது. ஆனாலும், முற்றாக நீங்கி விட்டதாக நாம் நிம்மதி கொள்ள முடியாது.

இந்த நாசகார சதிகாரர்களால் மக்கள் பேரவைகளுக்கும், நாடு கடந்த தமிழீழ அரசுக்கும் இடையே திட்டமிட்டு முரண்பாடுகள் உருவாக்கப்பட்டது. நாடு கடந்த தமிழீழ அரசின் இரண்டாம், மூன்றாம் நிலைத் தலைவர்களாக நுழைந்த சிலரே இதற்குத் தூபம் போட்டுத் தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட்டார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு கட்டத்தில் தேசியத் தலைவர் அவர்களால் பணியிலிருந்து அகற்றப்பட்டவர்களாகவோ, பதவி குறைப்புச் செய்யப்பட்வர்களாகவோ, பணி மாற்றம் செய்யப்பட்டவர்களாகவோ இருந்த கே.பி.யின் வாரிசுகள் என்பது அவதானிக்கத் தக்கது. ஆனாலும், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் இந்தச் சதிகளை நாடு கடந்த தமிழீழ அரசின் இணைப்பாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு போனதுடன், அந்தப் பிளவு முயற்சிகளையும் முடிவுக்குக் கொண்டு வந்தனர். ஆனாலும், சதிகாராகள் தமது இலக்கினில் குறியாகவே உள்ளார்கள். இதனை முடிவுக்குக் கொண்டுவந்து, திரு. உருத்திரகுமாரனது இலட்சிய பயணத்திற்கு உரம் சேர்க்கும் வகையில், மக்கள் பேரவையின் முக்கிய பிரமுகர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் வேட்பாளர்களாக, அதன் அடுத்த கட்ட முயற்சியின் பங்காளர்களாகத் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரான புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் அத்தனை அரசியல் நகர்வுகளும், போராட்டங்களும் மக்கள் பேரவைகள் ஊடாகவே நிகழ்த்தப்பட்டன. முள்ளிவாய்க்கால் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்தவும், முள்வேலி முகாமுக்குள் முடக்கப்பட்ட தமிழ் மக்களை மீட்கவும், ஈழத் தமிழாகள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளைத் தடுக்கவும், சிங்கள தேசம் மீதான பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வரவும், மாவீரர்களுக்கு அஞ்சலி செய்யவும் எனத் தொடர்ந்து வந்த அத்தனை நிகழ்வுகளும் மக்கள் பேரவைகளாலேயே மேற்கொள்ளப்பட்டன. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்களை மேடைக்கு அழைத்து வரவும், பிரித்தானிய பிரதமர் கோடன் பிரவுண் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தவும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தளத்தை உருவாக்கவும் அவர்களால் முடிந்திருந்தது. இதுவெல்லாம், அமையப் போகும் நாடு கடந்த தமிழீழ அரசுக்குப் பலம் சேர்க்கும் நிகழ்வுகள் என்பது திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கும் தெளிவு படுத்தப்பட்டது. அதனால், மக்கள் பேரவை உறுப்பினர்கள் நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தலில் பங்குபற்ற அவரால் அழைப்பும் விடுக்கப்பட்டது. அதை அக்கறையோடு மக்கள் பேரவையினரும் ஏற்றுக் களம் இறங்கியுள்ளனர்.

'நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவையும் சிங்கள தேசத்தின் இனவாத அரசுக்கு எதிரான இரட்டைக்குழல் துப்பாக்கி' என்ற திரு. உருத்திரகுமாரன் அவர்களது இலட்சிய சிந்தனையுடன் மக்கள் பேரவை ஒத்துப் போவது சதிகாரர்களுக்குப் பெரும் கலக்கத்தைக் கொடுத்து வருகின்றது. திரு. உருத்திரகுமாரன் அவர்களது நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை குறித்த விமர்சனங்களும் அவர்களால் முன் வைக்கப்படுகின்றது. தற்போது, சிங்கள தேசத்தின் பிடியில் சிக்கியுள்ள கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்கள் குறித்த தமிழ் மக்களது சந்தேகங்கள், தற்போது விமர்சனங்களுக்குட்படுத்தப்படுவது அழகல்ல எனினும், அவரது தலைமையை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தும் சிலரது நடவடிக்கைகளை விமர்சிக்காமலும் இருக்க முடியவில்லை. பிணம் உயிரோடு எழுந்து வந்தாலும், சிங்கள தேசத்தின் பிடியில் சிக்கிய எவரும் சுய சிந்தனையுள்ள மனிதனாகத் திரும்பி வந்த வரலாறுகள் அபூர்வமானவை. எனவே, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான திரு. உருத்திரகுமாரன் அவர்களது தலைமையை ஏற்று, அவருடன் இணைந்து பயணிப்பதே தமிழீழத்தை மீட்பதற்கான பலமாக அமையும். சதிகாரர் வலையில் சிக்காமல், தமிழீழத்தை மீட்கும் போரில் மக்கள் பேரவையின் பலத்தையும் இணைத்துக்கொள்வதுதான் திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கும் உலகப் புகழை உருவாக்கிக் கொடுக்கும்.

Comments