சிறீலங்காவுக்கு செல்லாதீர்கள்- இந்திய திரையுலகத்திற்கு கனேடிய தமிழ் மக்கள் வேண்டுகோள்

சிறீலங்காவில் இந்திய இந்தி நடிகர் அமிதாப்பச்சன் தலைமையில் நடத்த திட்டமிட்டுள்ள திரைப்பட விழாவில் பங்கேற்க வேண்டாம் என இந்திய திரையுலகத்தினருக்கு கனேடிய தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

எதிர்வரும் ஜுலை மாதம் சிறீலங்காவில் நடைபெறவுள்ள இந்திய அனைத்துலக திரைப்பட விழாவில் பங்கேற்க வேண்டாம் என இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கும், இந்திய திரையுலகத்திற்கும் கனேடிய தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிறீலங்கா செல்ல வேண்டாம் என அமிதாப்பச்சனின் வீட்டுக்கு வெளியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கனேடிய தமிழ் மக்கள் இந்த கோரிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் மீது போர் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்ட சிறீலங்கா அரசின் ஆதரவில் நடைபெறும் இந்த விழாவில் அமிதாப்பச்சனும், இந்திய திரையுலகத்தினரும் கலந்துகொள்வது புலம்பெயர் தமிழ் மக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கனேடிய தமிழ் காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் வாழும் தமிழ் மக்கள் மீது மோசமான வன்முறைகளையும், மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்ட தற்போதைய சிறீலங்கா அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமிதாப்பச்சனின் விஜயம் அமைந்து விடும் என கனேடிய தமிழ் காங்கிரசின் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானத்திற்கு எதிராக மிக மோசமான வன்முறைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசு தற்போது தமது அங்கீகாரத்திற்காக உலகை வேண்டி நிற்கின்றது. இந்த நிலையில் இந்திய திரையுலகம் அங்கு விஜயம் மேற்கொள்வது அவர்களுக்கு உதவுவதாகவே அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய அமைப்பு நாடுகளின் கூட்டத்தை சிறீலங்காவில் நடத்துவதில்லை என பொதுநலவாய அமைப்பு அண்மையில்; முடிவு செய்திருந்தது. அதனை நாம் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். எனவே பொதுநலவாய நாடுகள் சிறீலங்காவை புறக்கணிக்கும் போது அமிதாப்பச்சன் ஏன் சிறிலங்காவை புறக்கனிக்கக் கூடாது? அவர் எமது உணர்வுகளை மதிக்க வேண்டும், நாம் அவரின் தீவிர ஆதரவாளர்கள் என காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Comments