தலைவர் காட்டும் திசையிலே...

உறக்கத்திலிருந்து உலுக்கி எழுப்பி, உட்கார வைக்கிறது. இமைகளை இணைக்கவே அச்சம் கொள்கிறது. மறக்க முடியுமா? துடிதுடித்து தவித்துக் கொண்டிருந்த எம் இன மக்களின் கோர மரணத்தின் நிகழ்வுகளை எப்படி மறப்பது? கடல்தாண்டி அவர்கள் கதறிய ஓசை நம் செவிகளை பிளந்ததை நம்மால் எப்படி மறக்க முடியும்? ஒருநாளா? இருநாளா? ஓராண்டு நிறைவுற்றுவிட்டது. சிங்கள வெறிநாய்கள் கூட்டமைத்து, எம் தமிழ் உறவுகளை கூறுபோட்டு கொன்றது. ஐயோ! என்று அணைக்க கரம் நீளுமா? என கடல்தாண்டி தம் கண்களை கழற்றி எறிந்து காத்திருந்தார்கள். இன்று நிகழலாம், நாளை நிகழலாம், இல்லை நாளை மறுநாள் தாக்குதலிலிருந்து தப்பித்து விடலாம் என்றெல்லாம் நம்பிக்கையோடு எம் உறவுகள் இருந்தபோது, நம்பிக்கையை சிதறடிக்கும்விதமாய் கொத்துக் கொத்தாய் குண்டுகளை வீசி கொன்றொழித்தார்கள் எம் இன மக்களை. உலகம் முழுக்க போரை நிறுத்து, எம் மக்களை காப்பாற்று என தமிழ் உறவுகள் நடத்திய போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், முழக்கங்கள், அதையும் தாண்டி சொந்த உடலை தீப்பந்தமாய் மாற்றிய முத்துக்குமார் போன்ற தீரர்களின் ஈகங்கள் எல்லாம் அந்த படுபாதக கொடுமைக்காரர்களுக்கு முனகல் சத்தமாய் மாறிப்போனது.

உலகம் தமது கண்களை மூடிக்கொண்டு தமக்கெதுவும் தெரியாது என்பதைப்போல் அமைதி காத்தது. ஊடக தர்மம் மரணித்துப்போனது. அநியாயங்களை வெளிகொணர வேண்டும் என்கின்ற அடிப்படை உணர்வுகூட ஊடகவியலர்களுக்கு மறந்துபோனது. மொத்தமாய் எமது உறவு ஒரு இடத்தில் முடக்கப்பட்டு கொன்றொழித்துக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டு ஊடகங்கள் புதிய புதிய தொடர்களை தமிழ் மக்களிடம் காண்பித்து, அவர்களின் உணர்வுகளை மழுங்கடித்துக் கொண்டிருந்தது. அச்சு ஊடகங்களோ, இது ஒரு பெரும் நிகழ்வாகவே எடுத்துக் கொள்ள மறுத்தது. அன்று மட்டும் ஊடகங்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை மக்களிடம் கொண்டு சென்றிருந்திருக்குமேயானால், உலகத்தின் வரலாறே திசைமாறி இருக்கும். ஆனால், ஏனோ ஊடகங்கள் திசைமாறி போய்விட்டது. அச்சுறுத்தலுக்கு அடிபணிந்ததா? அல்லது தமது சுகவாழ்வுக்கு சோடைபோனதா? என்று நமக்குத் தெரியவில்லை.

ஆனாலும்கூட, அந்த நிகழ்வுகள் நம்மை இன்னமும்கூட உறங்கவிடாமல் உலுக்கி எடுக்கிறது. தமிழர் என்று நாம் இந்த மண்ணில் இருந்தோமே, சொந்த உறவுகள் செத்தொழியும்போது, நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்கின்ற இயலாமை நம்மை கேலி செய்கிறது. என்ன செய்ய? இந்த நாடு தமிழ்நாடாக இல்லையே? தமிழ்நாட்டிற்கு வாய்த்த தலைவர்கள் தமிழ் கொண்டு வாழ்ந்தார்களே தவிர, தமிழுக்காக வாழாமல் போய்விட்டார்களே! கடந்த ஆண்டு எவ்வளவு கேலிக்கூத்துக்கள். நடிகர்களின் உண்ணாநிலைபோராட்டம், ஒருநாளில் முடிந்துபோன அந்த போராட்டம், எந்தவித முடிவுமே தெரியாமல் திரை விழுந்தது. சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேறியது. சட்டமன்ற வளாகத்திற்குள்ளிலிருந்து நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தது.

அதையும்தாண்டி கொட்டும் மழையிலே கைகளை பிணைத்துக் கொண்டு மனித சங்கிலியாய் மாறி நின்றது. எவ்வளவு போராட்டங்கள். ஆங்காங்கே அதையும்தாண்டி எத்தனை சாலை மறியல்கள். எவ்வளவு முழக்கங்கள். அட தமிழினமே! உன்னைக் காப்பாற்ற எங்களால் முடியவில்லை. உனக்காக போராட எங்களுக்கு இங்கு உரிமையில்லை. தமிழ் மொழி பேசும் வெறும் சக்கைகளாகத்தான் நாங்கள் வாழ வேண்டியதாகிவிட்டது. எந்த நிலையிலும் எங்கள் வாழ்வு உங்களோடு பிணைக்க முடியவில்லை. எங்களை மன்னித்துவிடுங்கள். நாங்கள் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கப்படுகிறோம். ஒரே ஒரு தலைவன் களத்திலிருந்து வெளியேறிய காரணத்தினால்தான் உங்கள் உயிர்கள் எதிரிகளின் கரங்களால் களவாடப்பட்டது.

ஒரே ஒரு தலைவன் உங்களைவிட்டு சற்று தள்ளி நின்றதால் உங்கள் உயிர்கள் எதிரிகளுக்கு ஏளனப்பொருளாகி விட்டது. புலிகள் இருந்தவரை அவன் இந்த ஆட்டம் போடுவானா? போட்டிருக்கிறானா? ஒற்றை வீரனாய் நின்ற எம்மை அழிக்க போக்கிலிகளை உடன் சேர்த்து, படைதிரட்டி எம்மினத்தை கொன்றொழிக்க எப்படி மனம் வந்தது? மகிழ்ச்சியோடு வாழ்ந்த ஒரு இனத்தின் மண்ணை குருவி கூட்டை களைப்பதை போன்று களைத்து முடித்தானே காடையர் ஒன்றிணைந்து. எல்லாவற்றிற்கும் முடிவு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் எல்லை இருக்கிறது. எல்லையில்லா உலகம் எங்கும் இல்லை. முடிவில்லா நிகழ்வு எதுவும் இல்லை. இதோ, அவர்களின் அடக்குமுறைக்கு எதிரான முடிவு விரைவில் எதிர் திசையிலிருந்து புறப்பட தயாராகிறது.

நாம் தாயக உறவுகளை இழக்க பெரும் காரணமாய் இந்திய-பாசிச வெறி, இந்திய-பார்ப்பனிய ஆதிக்கம், சோனியாவின் பழிவாங்கும் குணம் ஒன்றிணைந்து நின்றது. ஆம்! எம் உறவுகளே உங்கள் உயிர் தமிழீழம் எங்கும் காற்றிலே, மரக் கிளைகளிலே, மர வேர்களிலே, நீரிலே, நிலத்திலே, எங்கள் மனதிலே இன்னும் உயிரோடு உலாவிக் கொண்டுதான் இருக்கிறது. இன்றுவரை எங்களை அவை கேள்வி கணைகளால் துளைத்துக் கொண்டுதான் இருக்கிறது. இழந்ததை விடுங்கள். இருப்பதை காக்க, என்ன செய்யப்போகிறீர்கள் என்கின்ற வினாவுக்கு என்ன விடை சொல்வது என்று தெரியவில்லை. காரணம், தமிழன் ஒன்றிணைந்து போராட ஒரு களம் இல்லை.

தமிழன் உறக்க பேச ஒரு களம் இல்லை. ஆறரை கோடி தமிழ் மக்கள் வாழும் இந்த தமிழ் களம் சொரணை அற்று போய்விட்டது. அத்தனை மக்களின் மனங்களிலும் தமிழ் உணர்வு மழுங்கி, மக்கி விட்டது. சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டு, சிந்தை இறங்காறடி என்கின்ற பாரதியின் பாட்டு மெய்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கே நம் மக்களை காப்பாற்ற நடத்தப்பட்ட நாடகங்கள் அப்பாடா... எத்தனை கேவலமானவை. பிரணாபை அனுப்பு, பிரணாபை அனுப்பு என்று முழக்கம் இட்டோம். பிரணாப் சென்று வந்தபிறகு இன்னும் கூடுதலான தாக்குதல்தான் நிகழ்ந்தது. பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலை ஆட்டும் கணக்காய் இங்கே நம் உறவுகளை கொன்றொழிக்க துணைபுரிந்துவிட்டு, அவர்களின் வாழ்வுக்காக உண்ணாநிலை நாடகம். எப்படி முடிகிறது இவர்களால். தமிழர்கள் என்பதற்காக வேண்டாம். மாந்தநேயம்கூட இல்லாமல் இந்த தமிழ் சமூகம், இவ்வளவு தரம் தாழ்ந்து போனது எப்படி? புரியவில்லை. புரியவில்லை எமது உறவுகளே! இதை தகர்க்க வேண்டும். இதை மாற்றி அமைக்கவேண்டும். என்ன செய்யலாம்.

உலகில் எல்லாவித நிகழ்வுகளுக்கும் இரண்டே இரண்டு முடிவுகள் தான் இருக்கின்றன. ஒன்று தேவை, மற்றொன்று தேவை அற்றது. ஒன்று தொடக்கம், ஒன்று முடிவு. ஆக, நாம் நமது போராட்டத்தை தொடங்கிவிட்டோம். அதை முடிப்பதற்காக நாம் முனைப்போடு செயலாற்ற வேண்டிய தருணத்திலே இருக்கிறோம். நமக்கான உரிமைகள் பறிபோனது. நமக்கான விடுதலை வாழ்வு பறித்தெடுக்கப்பட்டது. நமக்கான மண், நம்மிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஆனாலும், நாம் அமைதி காக்க வேண்டும் என்று அடக்கப்படுகிறோம். சொந்த உறவுகளை கொன்றொழித்த சோனியா, தேர்தல் பரப்புரைக்கு தமிழகம் வருகிறார். தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்கின்ற தமிழக முதல்வர், சோனியாவை வாழ்த்துகிறார். என்ன தைரியம்.

எமது சொந்த உறவுகளை கொன்றுவிட்டு, சொந்த மண்ணிலே பரப்புரைக்கு வரும் அளவிற்கு அவருக்கு தைரியம் எங்கிருந்து வந்தது? அந்த மேடையில் சிறுத்தை என உறுமிய தலைவர், பூனையைப் போன்று சுருண்டு தாயே என்று சோனியாவை அழைக்கிறார். அட மானங்கெட்ட தமிழகமே! நீ எப்படி இப்படி சோடைப்போனாய். ஒரே ஒரு மக்களவை உறுப்பினர் பொறுப்புக்காக இப்படியா உன் உணர்வு மக்கிப்போனது. மனிதனாய் இருந்தால், சோனியாவே எம் மக்கள் இறந்ததற்கு பதில் சொல். நான் அதற்காகத்தான் இந்த மேடைக்கு வந்தேன். எமது பதவிக்காக அல்ல என்று சீறி இருந்தால், சிறுத்தைகளின் புகழ் இந்த விண்ணை தாண்டி உயர்ந்திருக்கும். காங்கிரசை அழிக்காமல் உறங்க மாட்டேன் என்று சபதம்.

ஆனால் தேர்தல் என்று வந்தவுடன் காங்கிரசுக்கு வாக்கு சேகரிக்க எப்படி வந்தது முழக்கம். எத்தனை நாடகம். இந்த தமிழினம் எவ்வளவு ஏமாற்றப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சியிலே தமிழீழ படுகொலைகளை ஒலிபரப்ப முனைந்தபோது, தமிழ்நாடு அரசு காவல்துறை தடுத்து நிறுத்துகிறது. காவலர்கள் தமிழர்களாய் இருந்து, காவலர்களாய் கடமையாற்றப் போனார்கள். ஒடுக்கப்பட்ட அந்த உயிர்களின் சோக குரல்கூட, சொந்த மக்களுக்கு கேட்டுவிடக் கூடாது என்பதற்காக என்னவெல்லாம் செய்து முடித்தார்கள். ஓராண்டு கடந்துவிட்டது. நினைத்துப் பார்க்க முடியவில்லை. கடந்த ஆண்டு ஒட்டுமொத்த எம் உறவுகளை ஒரே இடத்தில் நிற்க வைத்து, கொன்று குவித்தார்களே! காயப்பட்ட எம் உறவுகள் கதறி அழுது மருத்துவத்திற்கு சென்றால், மருத்துவமனையின்மீது செல்லடித்து சிதறடித்தார்களே! சோருக்கும் தண்ணீருக்கும் அலையாய் அலைந்து, தவித்த எம் தமிழ் குழந்தைகளின் தாகம், குருதி கொப்பளிக்க அடங்கிப் போனதே.

யார் தட்டிக் கேட்க முடிந்தது? உலகத்தை எல்லாம் நாம் கெஞ்சி பார்த்தோம். உலகத்தை நாம் தட்டிப் பார்த்தோம். ஐயோ காப்பாற்றுங்கள் என்று கதறிப் பார்த்தோம். ஆனால், அனைத்தும் பாழாய் போனது. எதுவுமே நடக்கவில்லை. எம் உறவுகளின் உறக்கம் சாவுக்கு துணை புரிந்தது. சாதிக்கப்பிறந்த எம் உறவுகள் சாவுக்கு கையளிக்கப்பட்டது. 30 ஆண்டுகாலமாக பார்த்து பார்த்து செதுக்கிய தமிழீழம் சீரழிக்கப்பட்டது. தமிழீழத்தின் வரலாற்றில் இதுஒரு புதிய அத்தியாயம் தான். ஆனாலும்கூட, எமது உறவுகளே... குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அடக்குமுறையாளர்கள் தொடர்ந்து வெற்றிக் காண்பதில்லை. கொடுங்கோலர்கள் இன்பத்தின் அரியணையில் சாகும்வரை வீற்றிருக்கப் போவதில்லை. காலம் திசைமாறும். வரலாறு களம் மாறும். மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன, அடக்குமுறை தொடருமேயானால், மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை தமிழீழ மண்ணில் தவிர்க்க முடியாது என. அது நடைமுறைப்படுத்தப்படலாம்.

ஆனால் அடுத்தக்கட்ட நமது விடுதலைப்போர் நமது எதிர்கால தலைமுறையை தீர்மானிக்கும் போராக இருக்கும். கலங்க வேண்டாம். பயப்பட வேண்டாம். உறுதியோடு இருப்போம். எம் தலைவன் உயிரோடு இருக்கும்வரை தமிழீழம் என்பது உறுதிபடுத்தப்பட்ட நிகழ்வுதான். எம் தலைவனின் எண்ண வடிவங்கள் தமிழர் வாழ்வில் பரிதிகளாக முளைத்தெழும். ஒவ்வொரு தமிழரின் மனங்களிலும் தாரகைகள் உயிர்பெறும். அதற்கான காலம் அருகில் இருக்கிறது. அதற்கான முயற்சி உங்கள் கரங்களில் இருக்கிறது. நாமும் இணைந்தே தான் நமக்கான மண்ணை படைக்க வேண்டும். நாமும் கரம் உயர்த்தியே நமது நாட்டை கட்டியமைக்க வேண்டும். இதோ, தலைவன் காட்டும் திசை நோக்கி நாம் பயணத்தை தொடருவோம். துயரங்கள் ஒருபோதும் தொடராது. அநீதி ஒருபோதும் நிலைக்காது. தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும். ஆனால் தர்மமே வெல்லும் என்பதை மறக்க வேண்டாம். உயிர் நீத்த எண்ணற்ற மறவர்களுக்கும், எம் மண்ணின் மக்களுக்கும் நாம் வீர வணக்கம் செய்கிறோம். இது அவர்களை புதைத்ததற்காக அல்ல, விதைத்ததற்காக.

-கண்மணி

Comments