தமிழ் இனத்தின் இறைமையும் நாடாளுமன்றத் தேர்தலும்

இலங்கையில் எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் பரபரப்புக்களில் இலங்கை மக்கள் மூழ்கியுள்ளனர். இந்தத் தேர்தலை பொறுத்தவரையில் அரச தரப்புக்கும், தென்னிலங்கையின் பிரதான எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் பாரிய போட்டி நிலவி வருகின்றது. ஆனால் இந்த இரு கட்சிகளில் எது வெற்றிபெற்றாலும் தென்னிலங்கை மக்களை அது பாதிக்கப்போவதில்லை.


எனினும் அதன் வெற்றிதோல்வி என்பது அனைத்துலக சமூகத்தின் முக்கிய நாடுகள் கொண்டுள்ள பூகோள அரசியலில் மட்டுமே தாக்கத்தை உண்டுபண்ண முடியும். பெரும்பான்மை சிங்கள இன மக்களை பொறுத்தவரையில் தென்னிலங்கையில் ஆட்சியை அமைக்கும் பெரும்பான்மை கட்சிகளால் அவர்கள் ஆபத்துக்களை சந்திப்பது குறைவு.

எனவே எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ளத் தேர்தல் என்பது ஈழத் தமிழ் மக்களுக்கு சில முக்கியத்துவங்களை கொண்டது என்பதை நாம் மறுக்க முடியாது. இலங்கை யின் இன விகிதாசாரங்களுடன் ஒப்பிடும் போது வடக்கு கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்படும் ஏறத்தாழ 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சி அமைப்பதிலோ அல்லது இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதிலோ காத்திர மான பங்களிப்புகளை வழங்க முடியாது என் பது உண்மையானது.

ஆனால், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை அனைத்துலக சமூகத்தின் முன் கொண்டுவரும் பிரதிநிதிகளாகவும், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தெளிவான திட்டங்களை முன்வைப்பதற்குரிய அரசியல் தலைமையாகவும் அவர்கள் இயங்க முடியும். அதற்காகவே இந்தத் தேர்தலில் ஈழத்தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்வதில் அதிக அக்கறைகள் காண்பிக்க வேண்டும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு தமிழ் மகனும் வாக்களிக்க வேண்டும் எனவும், அதனை மேற்கொள்ள புலம்பெயர் தமிழ் சமூகம் தன்னால் முடிந்த காத்திரமான பங்களிப்புகளை வழங்க வேண் டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

தாயகத்து அரசியலுடன், புலம்பெயர் தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்புக்களும் இணைந்து பயணிப்பது அவசியமானது. அதனைத் தான் அமெரிக்காவும் வலியுறுத்தி வருகின்றது. அதாவது இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என அமெரிக் காவின் மத்திய மற்றும் தென்ஆசிய பிராந்தி யங்களுக்கான துணை வெளிவிவகார அமைச்சர் றொபேட் ஒ பிளேக் அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனவே ஈழத்தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் இணைந்து பயணிக்கப்போகும் இரு அரசியல் சமூகங்களும் நடைபெறப்போகும் தேர்தலிலும் ஒருமித்த கருத்துக்களை கொண்டிருத்தல் அவசியமாகும்.

எனினும் ஈழத்தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

2004 ஆம் ஆண்டைப் போலல்லாது பல கட்சிகளும், பெருமளவான வேட்பாளர்க ளும் வடக்கு, கிழக்கில் போட்டியிடுகின்றனர். இந்த நிலைமை ஈழத்தமிழ் மக்களிடம் குழப்பங்களை ஏற்படுத்தலாம் என தெரி விக்கப்படுகின்ற போதும். அது தவறானது.

ஏனெனில் விடுதலைப்புலிகள் ஆளுமையை கொண்டிருந்தபோது அவர்களின் கட்டுக்கோப்புக்குள் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கி வந்தது.

எனவே பல கட்சிகளை கொண்ட த.தே. கூட்டமைப்பு விடுதலைப்புலிகள் தமது ஆயுதப் போராட்டத்தை மௌனித்த போது கலைக் கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அதுவே கலைந்து போயிருக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துள்ளது.

ஆனால்,கூட்டமைப்பின் பிளவுகள் தேசியத்தின் ஆன்மாவை பாதிக்கப்போவதில்லை. அது அடுத்த தலைமுறையின் ஊடாக கைமாறவே போகின்றது.

ஈழத்தமிழ் மக்களின் இறைமையை ஐக்கிய நாடுகள் சபையும், அனைத்துலக சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுத்து வந்திருந்தனர்.

ஒரு நாட்டில் வாழும் பல்வேறு இன சமூகங்களுக்கு என தனியான இறைமைகள் உண்டு. அந்த இனங்களின் இறைமைகளை அனைத்துலக சமூகம் அங்கீகரிக்கும் போது அந்த இனம் அந்த நாட்டுக்குள் தனக்கு தனியாக அரசினை அமைத்துக்கொள்ள முடியும்.

பின்னர் அந்த இனத்தின் அரசியல் உரிமைகளை கொண்ட சுயஅதிகார ஆட்சியை மத்திய அரசு தனது நாட்டின் இறைமையைக் கருத்தில் கொண்டு இல்லாது செய்யுமானால் இந்த இனம் தனக்குரிய நாட்டை சுயமாகவே உருவாக்கி பிரிந்து செல்லும் தகைமையை பெற்றுவிடும்.

இதனை தான் நாம் ஒரு நாட்டின் கீழான இரு அரசுகள் என்ற கோட்பாட்டின் அடிப்படையின் ஊடாக நகர்த்த வேண்டும். இந்தக் கோட்பாட்டின் தத்துவத்தை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றால் நாம் கொசோவோ பிரச்சினையை எடுத்துக் கொள் ளலாம்.

1974 ஆம் ஆண்டு கொசோவோவுக்கு வழங்கப்பட்ட சுயநிர்ணய உரிமையின் அரசியல் சாசன திருத்தங்களின் அடிப்படையில் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, காவல்துறை, நீதிமன்றம் போன்ற அதிகாரங்கள் கொசோ வோ அரசுக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் அதனை தொடர்ந்து பேணாத சேர்பியா (மிலோசொவிக் அரசு) கொசோவோவை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. தனது படை நடவடிக்கைக்கு காரணமாக சேர்பியாவின் இறைமை தொடர்பாக மிலோசொவிக் பேசினார்.

கொசோவோவின் சுயநிர்ணய உரிமை இரத்துச் செய்யப்பட்டதுடன், அதனை கைப்பற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையின் போது பேர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன.

கொசோவோ விடுதலை இராணுவத்திற்கு எதிரான சேர்பியா அரசின் இந்த போர்ப்பிரகடனம் குறிப்பிட்ட இனத்திற்கு எதிரான போர்ப்பிரகடனமாக காலப்போக்கில் மாற்றமடைந்தது.

கொசோவோவில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மனித உரிமை அவலங்கள் காரணமாக மேற்குலக நாடுகள் தலையீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதுடன், இறுதியில் சேர்பிய இராணுவத்தின் நடவடிக்கைகள் ஒரு முடக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டன.

சேர்பியாவின் இறைமை உள்ளிட்ட அனைத்துலக சட்டங்கள் அனைத்தையும் புறம்தள்ளிவிட்டு கொசோவோவின் சுதந்திர பிரகடனத்திற்கு அனைத்துலக நாடுகள் அங்கீகாரம் வழங்கின.

தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை பொறுத்தவரையில் அதன் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக மௌனித்து போனாலும், இலங்கை அரசாங்கத்தின் படை நடவடிக்கையை மிகப்பெரும் மனித உரிமை மீறலாகவும், போர்க்குற்றங்களாகவும் சர்வதேச அரங்கில் பேசப்படும் நிலையிலேயே அது மௌனித்துள்ளது.

மேலும் தமிழர் தாயகத்தின் இறைமையை மறுசீரமைப்பு செய்யுமாறு ஐ.நாவிடமும், அனைத்துலக சமூகத்திடமும் விடுதலைப்புலிகள் முன்னர் கேட்டிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது. அதாவது தமிழ் மக்களின் இறைமையை அங்கீகரிக்குமாறு அவர்கள் கேட்டிருந்தனர். ஆனால் அதற்கான காலம் தற்போது கனிந்துள்ளதாகவே அனைத்துலகத்தின் நகர்வுகளை நோக்கும் போது புலப்படுகின்றது.

இதனை மறுவளமாக கூறுவதானால் இலங்கை தனது நாட்டின் இறைமை தொடர்பாக பேசுகின்றது. அவ்வாறானால் அங்குவாழும் இனங்களின் இறைமை தொடர்பாக அந்த இனங்களும் பேசமுடியும்.

ஓர் இனத்தின் இறைமை என்பது அழிக்கப்படும் போது ஒரு நாட்டின் இறைமையை அனைத்துலக சமூகம் புறம்தள்ள முடியும். அதனைத் தான் கொசோவோ மீதான மேற்குலகத்தின் நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

அதனைப் போலவே நாம் பிரித்தானியாவின் ஆட்சிமுறையை கருதினாலும் அங்கு ஒரு நாட்டின் கீழ் பல அரசுகள் உண்டு. உதாரணமாக ஸ்கொட்லாந்து அரசு அதன் மக்கள் விரும்பினால் தனிநாட்டு பிரகடனத்தை எப்போது வேண்டுமானலும் மேற்கொள்ள முடியும்.

எனவே ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வுக்கு வலுவான அடிப்படை கொள்கைகளையும், அதனை தொடர்ந்து தக்கவைக்கும் வலுவான அரசியல் தலைமைகளையும் கொண்டவர்களை ஈழத் தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆதரிப்பது தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி - வீரகேசரி

- வேல்ஸிலிருந்து அருஷ்

Comments