சிறீலங்கா நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெறப்போகின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற பின்னர் ஆயுதப்போராட்டம் ஓய்வுக்கு வந்த பின்னர் நடைபெறும் இத்தேர்தல் மிகவும் முக்கியம்வாய்ந்த ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வருவதற்காக பல அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ் தேசியத்தை மையப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தவறான தலைமைத்துவத்தின் காரணாமாக அது ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து திசைமாறிச் சென்று தற்போது அக்கூட்டமைப்பு சிதைந்துள்ளது.
ஈழத்தில் வாழும் மக்கள் வரலாறு காணாத அவலத்தை அனுபவித்திருக்கின்றார்கள். அவர்களின் வாழ்வாதாரம் முற்றாக சிதைந்துள்ளது. அவர்களின் இயல்புநிலை வாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்துவதே மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அவ்வாறான ஒரு அபிவிருத்தியை மையப்படுத்தி இத் தேர்தலில் பலர் களத்தில் குதித்திருக்கின்றனர்.
அதேவேளை புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களின் எழுச்சி ஓர் அரசியல் சக்தியாக உருமாறிவருகின்றது. புலம்பெயர்தேசத்தில் வாழும் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலான ஓர் இறுதித் தீர்வை யாசிப்பதாக ஜனநாயக ரீதியில் தமது விருப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.
தாயகத்தின் அபிவிருத்தி அனைத்தும் ஓர் அரசியல் தீர்வின் அடிப்படையிலேயே அமையவேண்டுமென புலம் பெயர் சமூகம் எதிர்பார்க்கின்றது. அவ்வாறானதொரு அபிவிருத்தியில் புலம் பெயர் சமூகம் ஓர் ஆக்கபூர்வமான பங்களிப்பினைச் செய்ய காத்திருக்கின்றது.
அதனை முன்னெடுக்கும் ஓர் உறவுப்பாலமாக தமிழ் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அமையவேண்டுமென புலம் பெயர்சமூகம் எதிர்பார்க்கின்றது. எந்த வேட்கைக்காக எமது இளம் சந்ததியினர் தம்மை ஆகுதிகள் ஆக்கிக்கொண்டார்களோ; எதற்காக எமது மக்கள் இத்தனை துன்பங்களையும் தாங்கினார்களோ அந்த இலட்சியத்தினை சமரசப்படுத்தும் அரசியல் சக்திகளுக்கு புலம் பெயர் சமூகம் ஆதரவு அளிக்காது.
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற அடிப்படையில் தாம் போட்டியிடுவதாகஇ தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. புலம் பெயர் தமிழ் மக்களின் வேட்கையும் அவர்களின் கொள்கையை ஒத்துச் செல்கின்றது.
குறுகிய ஒரு சில நன்மைகளுக்காக தமிழரின் இலட்சிய வேட்கையை துறப்பது அதன் மூலம் உலகிற்கு தமிழர் தமது தாகத்தை மறந்துவிட்டார்கள் என எண்ணத்தூண்டுவது இதுவரை காலமும் செய்யப்பட்ட தியாகங்களை அர்த்தமற்றதாக ஆக்கிவிடும் . அத்தோடு எமது வேட்கை நீறு பூத்த நெருப்பாக தொடர்ந்தும் இருக்கவே வழிவகுக்கும்.
தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவரின் விடுதலைக்காக போராடிய ஆபிரிக்க தேசிய அமைப்பின் தலைவர்கள் அவர்களின் தேசத்தில் வாழ்ந்த மக்களையும் புலம் பெயர்ந்து வாழ்த்த மக்களையும் இணைத்துப் போராடினார்கள். அவர்கள் சில குறுகிய கால சலுகைகளுக்காக தங்களுடைய நீண்டகால விடுதலை குறிக்கோள்களை அடைவு வைத்திருந்தார்கள் என்றால் இன்றும் தென்னாபிரிக்காவில் கறுப்பினத்தவர் தங்கள் சொந்த நிலத்தில் இரண்டாம் தர பிரசைகளாக இருந்திருப்பர்.
அவ்வாறான ஒரு காத்திரமான பாத்திரத்தை வகிக்கக்கூடிய தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென பிரித்தானிய பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது.
நன்றி
பிரித்தானிய பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம்
Comments