த.தே.ம.முன்னணிக்கே எமது ஆதரவு - பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு

"தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம்" என்ற தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னெடுக்கும் "தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு" தமது ஆதரவை வழங்குவதாக, பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையும், அதிலுள்ள விபரங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

உறவுகளே!

எமது தேசியத்தின் கொள்ளைகளில் உறுதியாகவுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு, புலம்பெயர் அமைப்பான பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தனது ஆதரவைத் தெரிவிக்கின்றது. சைக்கிள் சின்னத்தில், இலட்சியத்தை நோக்கிய பாதையில் பயணிக்கவுள்ள இவ் அணியினருக்கு தாயகத்திலுள்ள எமது உறவுகளும் ஆதரவளித்து, வெற்றி பெற வைத்து, உறுதியான அரசியல் அணியை உருவாக்க முன்வரவேண்டும்.

கடந்த மே மாதத்திற்குப் பின்னான சூழ்நிலையில் எதிரிகளின் உதவியுடன் பல துரோக சக்திகள் தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையிலும் ஊடகங்களில் நாளுக்கு நாள் வெளியாகும் திரிபு படுத்தப்பட்ட, அல்லது தவறான செய்திகள், கட்டுரைகள், விளம்பரங்கள் என்பவற்றால் மக்கள் யாரை நம்புவது என்கின்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந் நேரத்தில், தாயக உறவுகளுக்கு நாமே உறவுப் பாலமாகவும் ஊடகங்களாகவும் இருந்து, தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல், மின்னஞ்சல் போன்றவற்றின் துணையுடன் எமது இலக்கை நோக்கிப் பயணிப்பவர்களுக்கு கைகொடுத்து அவர்களை எமது பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பிவைக்கவேண்டுமென இவ்வமைப்புக்கள் வேண்டுகின்றன.

நன்றி!

இவ்வண்ணம்,

பரமானந்தன் பாலசுந்தரம்

(பொறுப்பாளர்)

Comments