தமிழ் மக்களின் அரசியல் விருப்புக்களை எடுத்துரைக்கும் எண்ணத்துடனும், அவர்களின் விடுதலை நோக்கிய பாதையை சிறீலங்கா அரசியல் முறையைப் பயன்படுத்தி முன்னெடுத்துச் செல்லவும், அதேநேரம், தமிழ் மக்களின் விருப்புக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் இவ்வாறான அரசியலைப் பயன்படுத்தி காலங்காலமாக இழைத்து வரும் பின்னடைவுக்கு மீண்டும் இடம் கொடுக்காமல் இருக்கவுமென ஓர் அரசியல் அணியாக தாயக மக்களால் 2001ம் ஆண்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உறுதியான அரசியற் செயற்பாடுகளை சிறீலங்காவில் மேற்கொண்ட அதேநேரம், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் ஆதரவுடன் அவர்கள் வாழும் நாடுகளுடனும் பன்னாட்டுக் கட்டமைப்புகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி தமிழ் மக்களின் விருப்புக்களையும் சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் இனவழிப்பு நடவடிக்கைகளையும் தெருவித்து வந்தனர்.
ஆனால் மே 2009 இற்குப் பின்னர், இவர்களில் சிலர், குறிப்பாக திரு இரா. சம்பந்தன், திரு மாவை சேனாதிராஜா, திரு சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வாக அமையக் கூடியது இறைமையுள்ள தமிழீழம் என்பதில் நம்பிக்கையற்றுக் காணப்படுவதை தம் செயல்களாலும் வாக்குமூலங்களாலும் உணர்த்தியுள்ளார்கள். அது மட்டுமல்லாமல் தாமே தமிழ் மக்களின் தலைவிதியை நிர்மாணிப்பவர்கள் என்ற எண்ணப்பாட்டுடன் தீர்மானங்களைத் தயாரித்து அவற்றை நிறைவேற்றித் தமிழ் மக்கள் மேல் திணிக்கக் கூடியவர்களாக தங்களை மாற்றியுள்ளார்கள்.
அத்துடன் 2004 பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் மிகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற திரு செல்வராஜா கஜேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன், திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்களின் கூற்றுக்கு முதன்மை கொடுக்காததோடு, போர் நெருக்கடிகளின் போது வெளிநாடுகளில் இவர்கள் தங்கியிருந்து புலம் பெயர் மக்களின் செயற்பாடுகளில் கலந்து கொண்டு பல அரசியல் வேலைகளை முன்னெடுத்து வந்தமையையும் கருத்தில் எடுக்காமல், அவர்கள் இவ் அணியை விட்டு வெளியேறவும் வெளியேற்றப்பட காரணமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இருந்துள்ளமை மிகவும் வருந்தத்தக்கது.
தாயக உறவுகளின் குரல்வளை நசுக்கப் பட்டுள்ள நிலையில், புலம் பெயர் தமிழ் மக்கள் தம் தாயக விடுதலைக்கான போராட்டத்தை பல தரப்பட்ட வழிகளில் முன்னெடுத்து, தமிழினவழிப்பை வெளிப்படுத்தி வருகின்ற வரலாற்று முதன்மை பெற்றுள்ள இவ் வேளையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தோற்றுப்போன எண்ணப்பாட்டிலான தமிழ்த் தேசியத்தை விட்டுக்கொடுக்கும் தன்மையிலான செயற்பாடுகள் பாரிய பின்னடைவை அனைத்துலகமட்டத்தில் ஏற்படுத்தப் போவது திண்ணம்.
அத்துடன் புலம்பெயர்ந்து வாழும் மக்கள், அவர்களது சொந்த தேசத்தை விட்டு சிறீலங்கா அரசு விரட்டியடித்ததென்பதே உண்மையாயிருந்தும், இம் மக்களை தாயக உறவுகளிடமிருந்து பிரிக்க நினைக்கும் சக்திகளின் வேலையை இலகுவாக்கும் விதத்தில் புலம் பெயர் மக்களின் பிரதிநிதிகளுடனான தொடர்பைத் தவிர்த்தும் அவர்களின் அறைகூவலை எதிர்த்தும்; வருவதென்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிங்களப் பேரினவாதத்தின் அனைத்துலகப் பரப்புரைச் செயற்பாட்டுக்கு பலம் சேர்ப்பதாக அமைகிறது.
இந்நிலைமை அனைத்துலக நாடுகள் ஏற்றுக் கொள்ள மறுக்கும் 'இனவழிப்பு" என்ற சிறீலங்காவின் நடவடிக்கைக்குத் துணைபோவதாக அமைகிறது. மே 2009 இல் பேரழிவைச் சந்தித்த தமிழினம், 2001 ம் ஆண்டு எவ்வாறான நோக்கங்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதோ அந் நோக்கங்களுக்காக கடுமையாக உழைக்கும் என நம்பியது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், தமது கடமையை மறந்து தமிழ் மக்களின் பலத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெண்ணெய் திரண்டு வரும் போது தாளியை உடைக்க முயற்சிக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது கொண்டுள்ள நிலைப்பாட்டில் அவ் அணியினரை ஏற்றுக் கொள்ளும் தன்மை தமிழ் மக்களிடையே இல்லை என்பது தெளிவு. தமிழ் மக்களின் கருத்தறிந்து செயற்படக் கூடியவர்களையும், தமிழ்த் தேசியத்தில் உறுதியான பற்றுக் கொண்டு வெளிப்படையாகச் செயற்படக் கூடியவர்களையுமே தமிழ் மக்கள் தங்களது குரல்களாகத் தெரிவு செய்ய வேண்டும்.
அந்த வகையில் தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கோட்பாட்டுக்குள் நின்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூய்மை செய்யப்பட்டு அது ஆரம்பிக்கப்பட்ட உண்மையான பொருளில் மீண்டு வரும் சூழ்நிலையில் அவ்வணியின் உறுப்பினர்களுடனும், மற்றும் அடிப்படை அரசியற் கொள்கைகளில் உறுதியாகவுள்ள அனைத்துத் தரப்புக்களுடனும் ஒன்றிணைந்து செயலாற்றவும், தேர்தலின் பின்னர் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்களுடன் இணைந்து, அனைத்துலக குமூகத்துடன் செயலாற்றி, மேன்மையுடன் கூடிய பாதுகாப்பானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வை அடைவதற்காக அர்பணிப்படனும் நேர்மையுடனும் உழைக்கவும், தமிழர் தாயகத்தின் வளங்களைப் பாதுகாத்து, பொருண்மிய மேம்பாட்டு வேலைத்திட்டங்களையும், மன்pத உரிமை தொடர்பான நடவடிக்கைகளையும் , உடனடி மனிதாபிமான தேவைகளை நிறைவு செய்யக் கூடிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவும், மிதிவண்டி முத்திரையில் போட்டியிட்டு உழைக்க முன் வந்துள்ள தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, எமது முழுமையான ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Comments