தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்து, இந்தியா மூலம் மேற்குலகிற்கு 'செக்' வைப்பதே கோத்தபாயவின் திட்டம்!
விடுதலைப் புலிகளால் தமிழ்த் தேசியத்திற்கான அரசியல் களமாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணிக்க முயற்சிக்கும் பாதை குறித்த சந்தேகம் தமிழ் மக்களிடம் அதிகரித்தே வருகின்றது. இந்திய நிகழ்ச்சி நிரலுடன் களம் இறங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியாவது இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முன்னுக்குப் பின் முரணாக எத்தனையோ கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், இன்றுவரை இந்தியா குறித்த தமது கருத்துக்களை மாற்ற முடியாதவர்களாகவே உள்ளனர்.
«தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணயம் பற்றி குறிப்பிட்டதை இந்தியா விரும்பாது. இந்தியாவை நிராகரித்து அரசியல் தீர்வை சிந்திப்பது ஆரோக்கியமானதாக இருக்காது» என்ற கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் செயலாருமான மாவை சேனதிராஜா தற்போது தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களது சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் இந்தியாவின் விருப்பங்களை ஏற்றுக்கொண்டுஇ ஈழத் தமிழர்களுக்கான எந்த அரசியல் தீர்வைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொடுக்கப் போகின்றது? எதை நோக்கி, யார் கரம் பற்றிப் பயணிக்கப் போகின்றது? என்பது இன்றுவரை அவர்களால் வெளிப்படுத்தப்டவே இல்லை.
«தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்தால் தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைத்து அதற்க்கு எதிராக ஜனநாயக ரீதியான போரட்டங்கள் நடாத்தபடும்» என்ற இன்னொரு கருத்தையும் மாவை சேனாதிராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட போது அவர்கள் அவர்கள் இவ்வாறு தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைத்து அதற்க்கு எதிராக ஜனநாயக ரீதியான போரட்டங்கள் நடாத்த முன்வரவில்லை. முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பிய மூன்று இலட்சம் தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள் முடக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளானபோதுஇ கடத்திப் படுகொலைகள் புரியப்பட்டபோது, பாலியல் கொடுமைகள் புரிந்தபோது, அடிமைகளாக்கி அவமானப்படுத்தப்பட்டு, பெற்ற குழந்தைக்குப் பால் வாங்க முடியாத நிலையில், மானத்தைப் பலிகொடுத்து சிங்களக் காமுகர்களுக்கு விருந்தாக நிர்ப்பந்திக்கப்பட்ட போது இவர்களுக்குத் தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைத்து அதற்க்கு எதிராக ஜனநாயக ரீதியான போரட்டங்கள் நடாத்த வேண்டும் என்று தோன்றவில்லை. தற்போது, தமது அமைப்பைத் தடை செய்தால் இப்படியெல்லாம் போராடப் போவதாக வெட்கம் கெட்டுப் பிதற்றுகிறார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்தும் நாடகத்தின் ஒரு அங்கம்தான், «பயங்கரவாதஈ பிரிவினைவாதத்தை மீண்டும் தோற்றுவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யவேண்டும்» என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் தமிழ் மக்களை உசுப்பேற்றும் பேச்சு என்பது ஈழத் தமிழர்களுக்கு நன்றாகவே புரிந்துள்ளது. மகிந்த ராஜபக்ஷ சிங்கள அதிபர்த் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற இந்திய விருப்பத்தை நிறைவேற்ற, சிங்களவர்களை உசுப்பேற்றுவதற்காக சம்பந்தர் கையாண்ட அதே முறையைத்தான் நன்றிக்கடன் செலுத்த விரும்பிய கோத்தபாய பின்பற்றியுள்ளார். சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம், சிங்கள இனவாதத்தை உசுப்பேற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த வாக்குக்களை மகிந்தவுக்கு ஆதரவாகத் திருப்பியது. கோத்தபாய அதே உசுப்பேற்றலைத்தான் தற்போது தமிழ் மக்களிடம் உருவாக்கி, அவர்களது வாக்குக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சாதகமாகத் திருப்ப முனைகிறார்.
கோதபாய தமிழத் தேசியக் கூட்டமைப்பு வெல்வதற்கு எதற்காக உதவ வேண்டும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா? அது ஒரு சாதாரண கணக்குத்தான். வடக்கே ஈழத் தமிழர்களது வாக்குக்கள் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு விழப் போவதில்லை என்பது மகிந்த சகோதரர்களுக்கு நன்றாகவே தெரியும். வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மைக் கட்சிகள் போட்டியிடுவதன் மூலம் சிங்கள மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்தாலும், தமிழ் வாக்குக்களை இப்போதைக்கு தமக்குச் சாதகமாகத் திரட்ட முடியாது என்பது சிங்கடக் கட்சிகள் அனைத்தும் புரிந்து கொண்டே போட்டியிடுகின்றன. யாழ். குடாநாட்டில் டக்ளசை வெற்றிலைச் சின்னத்தில் நிறுத்தி அவருக்குக் கிடைக்கக் கூடிய வாக்குக்களின் மூலம் ஆகக் கூடியது ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை மட்டுமே பெற முடியும் என்பது மகிந்த சகோதரர்களுக்கு நன்றாகவே புரியும்.
தேர்தலின் பின்னரும் ஈழத் தமிழர்களுக்கான ஒரு அரசியல்த் தீர்வை சிங்கள அரசு முன்வைக்காமல் அடுத்த நகர்வை மேற்கொள்ள முடியாத அளவிற்கு மேற்குலகின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு நீண்ட கால அவகாசத்தை வழங்கும் நிலையும் தற்போது அருகி வருகின்றது. இந்த நிலையில், தம்முடன் பேசக் கூடிய தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலம் பெறுவதே தமக்குச் சாதகமானதாக இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் கைகளுக்குள் இருப்பதால், தம்மால் வழங்கக் கூடிய பிரிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் காணி அதிகாரங்களற்ற மாவட்ட அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கும்.
இந்தியா அதனை ஏற்க வைக்கும் என்பதே சிங்கள அரசியல் கணக்கு. அதனையே தற்போது இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தியாவின் வளர்ப்புப் பிராணியான வரதராஜப் பெருமாளும் தெரிவித்துள்ளார். '13 வது அரசியல் திருத்தம் தற்போது சாத்தியப்படாது' என்ற அவரது இந்திய வார்த்தை வடக்கு கிழக்கு என்ற தனித் தனி மாகாண அதிகாரங்களையே குறிக்கின்றது. அந்தக் கணக்கின் பிரகாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமாக சிங்கள அரசு தேர்தலுக்கு முன்னதாக இத்தகைய அவசர அச்சுறுத்தல்களை வெளிப்படுத்தி வருகின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லோருமே புரிந்து கொள்ளக் கூடிய கணக்காக இருப்பதுதான் இதன் பலவீனம்.
சிங்கள தேசத்திற்கு மிக அச்சுறுத்தலாக விழங்கும் புலம்பெயர் தமிழர்களது ஆதரவுடன் களம் இறங்கியுள்ள தமிழத் தேசியத்திற்கான அரசியல் முன்னணி வெற்றி பெறுவதை மகிந்த அரசோஇ இந்திய அரசோ விரும்பப் போவதில்லை. அந்த முன்னணி வெற்றி பெற்றுப் பலமான சக்தியாக உருவானால், புலம்பெயர் தமிழர்களின் உதவியோடு மேற்குலகின் தலையீட்டை உருவாக்கி விடுவார்கள்.
அது ஈழத் தமிழாகளுடைய அரசியல் தளத்தை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்றுவிடும் என்பதே சிங்கள அச்சமாக உள்ளது. இதற்காகவே, இந்தியாவின் கரம் பற்றி நடைபோடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்வதை உறுதி செய்ய வேண்டிய நிலையில் மகிந்த சகோதரர்கள் களத்தில் இறங்கியுள்ளார்கள்.
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் புலம்பெயர் தமிழர்களால் மீண்டும் ஜனநாயக முறைப்படி மீள் வாக்களிப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இந்த ஜனநாயக விருப்பங்களைப் புரிந்து கொண்ட மேற்குலகு ஈழத் தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்கும்படி சிங்கள அரசை நிர்ப்பந்தித்து வருகின்றது.
முள்ளிவாய்க்கால் பேரவலங்களைத் தவிர்க்க முயற்சித்த மேற்குலகை இந்தியா மூலம் தடுத்து நிறுத்திய மகிந்த அரசு, மேற்குலகின் அரசியல் தீர்வுக்கான அழுத்தங்களையும் அதே இந்தியப் பேயரசின் மூலம் தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றது.
அதற்கு ஒரே வழி,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்து, இந்தியா மூலம் மேற்குலகிற்கு 'செக்' வைப்பதே. இதனைப் புரிந்து கொள்ள ஈழத் தமிழர்கள் தவறினால்ஈ இன்றுவரை தம் உறவுகளுக்காகப் போராடிய புலம்பெயர் தமிழர்களது தமிழ்த் தேசிய உணர்வைப் படுகொலை செய்வதாக அமைந்துவிடும்.
பாரீஸ் ஈழநாடு.
Comments