தமிழீழ தேசியத் தலைவர் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்த சிறிலங்கா, அதனை இந்தியாவிற்கும் தெரிவித்து ஆவணங்களையும் வழங்கிவிட்டதாக கூறியிருந்தது.
எனினும், அண்மையில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சிறிலங்கா தங்களிடம் வழங்கிவிட்டதென சிபிஐ தெரிவித்தாக கூறியது அந்நாட்டில் பல வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்த நிலையில், அவ்வாறான உறுதிப்படுத்தும் ஆவணங்களை (மரணச் சான்றிதழ்) வழங்கவில்லை என இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் இறப்பு சான்றிதழின் மூல பிரதியினையும் வழங்குமாறு சிறிலங்காவிடம் இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு எழுத்து மூலமாகக் கோரியுள்ளது.
அத்துடன், கே.பி. பத்மநாதன் அவர்களை விசாரணை செய்யவும் அவரது வங்கி கணக்குகளை பரிசீலிக்கவும் உரிய ஏற்பாட்டினை செய்து தருமாறு இந்தியா சிறிலங்காவிடம் மீண்டும் கேட்டுள்ளனர். பத்மநாதன் சிறிலங்கா சென்றடைந்தபோதும் இந்திய அதிகாரிகள் இவ்வாறு கோரிக்கை ஒன்றினை விடுத்தனர்.
அதாவது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இவர் இருப்பதால் விசாரிப்பதற்கு அனுமதி கோரியிருந்தது. ஆனால் சிறிலங்கா சாதகமாக பதில் அளிக்கவில்லை என இந்திய மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.
தற்போது மீண்டும் கே.பியை விசாரிக்க கடித மூலம் உத்தியோகபூர்வமாக கேட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
Comments