தமிழர்கள் என்றால் அமிதாபுக்கு கிள்ளுக்கீரையா?-வைகோ

கொழும்பில் இந்தியத் திரைப்பட விழாவை நடத்தும் முயற்சியை நடிகர் அமிதாப்பச்சன் கைவிட வேண்டும், அந்த விழாவில் தமிழ்த் திரைப்பட துறையைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்று மதிமுக. பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழர்களின் மரண பூமி ஆக்கப்பட்டு விட்ட இலங்கையில், கொடுமையான கொலைப் பாதகன் ராஜபக்சே ராஜாங்கம் நடத்தும் தலைநகர் கெழும்பில், ஜூன் மாதத்தில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெற இருப்பது, மேலும் மேலும் தமிழர்களின் உள்ளத்தில் நெருப்பைக் கொட்டுகின்ற செய்தி ஆகும்.

லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, மீதம் இருக்கின்ற தமிழர்களின் கண்ணீர்க் கதறலும், வேதனைப் புலம்பலும், வீசும் காற்றையே ஓலக் காற்றாக ஆக்கிவிட்ட நிலையில், சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவை, மூன்று நாட்கள் நடத்த, இந்த அமைப்பின் விளம்பரத் தூதரான நடிகர் அமிதாப்பச்சன் ஏற்பாடு செய்தது தமிழர்களின் தலையிலே மிதிக்கின்ற அக்கிரமம் ஆகும்.

இந்தியாவில், அனைவராலும் மதிக்கப்படுகின்றன கலையுலக நட்சத்திரமான அமிதாப்பச்சன், இப்படி ஒரு செயலில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது. இந்த முயற்சியை அவர் உடனடியாகக் கைவிட வேண்டும். அவர் வசிக்கும் மும்பை யிலே தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கானவர்கள் மடியக் காரணமான பாகிஸ் தானியர்களின் தலைநகரில், இஸ்லாமாபாத்தில், இந்த விழாவை அவர் நடத்தத் தயாரா?.

அப்படி அறிவித்து விட்டு மும்பை நகரில் அவர் நடமாட முடியுமா?. தமிழர்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா? லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததைக் கொண்டாடப் போகிறார்களா?. இப்படியெல்லாம், இவர்கள் செயல்படுவதற்கு துணிச்சலைத் தந்ததே இந்திய அரசுதானே?.

ராஜபக்சேயை இந்தியாவுக்கு அழைத்து வந்து, திருப்பதியில் பூரண கும்ப வரவேற்புக் கொடுக்க ஏற்பாடு செய்ததால் தானே, இந்தத் துணிவு அனைவருக்கும் வந்து விட்டது?. கொழும்பிலே உத்தேசிக்கப்பட்ட விழாவை, இந்தியத் திரைப்படத் துறையினர் சார்பில் நடத்தக் கூடாது. இந்த விழாவில் தமிழகத் திரைப்பட துறையைச் சேர்ந்த முன்னணிக் கலைஞர்கள் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளதாக அறிகிறோம்.

தமிழகத் திரைப்படத் துறையைச் சேர்ந்த எவரும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்பதோடு, இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத் திரைப்படத் துறையினர் வெளிப்படையாக அறிக்கை தர வேண்டும். அமிதாப்பச்சன் தனது நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார வைகோ.

Comments