தமிழர்களுக்கு ராஜபக்சா மீது உள்ள கோபத்திலும் பார்க்க உலக நாடுகள் மீதான கோபமே மிக அதிகம் – வணக்கத்திற்குரிய எஸ். ஜே. இம்மானுவல் அடிகளார்

தமிழர்களுக்கு ராஜபக்சா மீது உள்ள கோபத்திலும் பார்க்க உலக நாடுகள் மீதான கோபமே மிக அதிகம் கனடிய தமிழ் காங்கிரஸ் நடத்திய கருத்தரங்கில் வணக்கத்திற்குரிய எஸ். ஜே. இம்மானுவல் அடிகளார் உரை.



கடந்த வருடம் மே மாதம் முழு உலகமுமே திரண்டு வந்து நமது மக்கள் மீதும் போராளிகள் மீதும் பாரிய யுத்தத்தை நடத்த்pயது. சர்வதேச யுத்த விதிகளுக்கு மாறான யுத்தத்தை நடத்தியதே சர்வதேசம் தான் என்பதை அறிகின்ற போது நமக்கு கோபம் அதிகமாகின்றது. ஆனாலும் தற்போது எமது தமிழர்களுக்கு ராஜபக்சா மீது உள்ள கோபத்திலும் பார்க்க உலக நாடுகள் மீதான கோபமே மிக அதிகம். ஏனெனில் நமது மக்களை அழிக்கவும் நமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கவும் சர்வதேசம் ஒன்றாக நின்றது.”

இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கனடாவின் ஸ்காபுறொ நகரில் அமைந்துள்ள செலிபிரேசன்ஸ் பேங்குவற் ஹோல் மண்டபத்தில் நடைபெற்ற நாடுகடந்த அரசு தொடர்பான விளக்கக் கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய உலகத் தமிழர் பேரவையின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் அரசியல் விமர்சகர்ருமான வணக்கத்திற்குரிய எஸ். ஜே. இம்மானுவல் அடிகளார் கூறினார். கனடிய தமிழ் காங்கிரஸ் ஏற்பாடு செய்த மேற்படி கருத்தரங்கிற்கு காங்கிரஸின் தலைவர் கலாநிதி ஸ்ரீரஞ்சன் தலைமை தாங்கினார்.

கனடாவின் நாடு கடந்த அரசு தொடர்பான செயற்பாட்டுக் குழுவின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கருத்தரங்கில் பங்கெடுத்தனர். அங்கு தொடர்ந்து அடிகளார் உரையாற்றுகையில்

“எமக்கு நியாயமும் விடுதலையும் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்த்திருந்தோம். ஐக்கிய நாடுகள் சபையும் ஐக்கிய அமெரிக்காவும் எமது விடுதலைப் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தை அறிந்து கொண்டு நமக்கு உதவிகளைச் செய்யும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் இறுதியில் நடந்தது என்ன? நமது விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கம் கொண்ட சில நாடுகளின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் நமது மண்ணில் உலகமே திரண்டு வந்து பாரிய அட்டகாசங்களைப் புரிந்தது. மே மாதம் 2009 ம் ஆண்டு எங்கள் விடுதலைப் புலிகள் அறிவித்தார்கள் தங்கள் துப்பாக்கிகள் மௌனிக்கப்படுகின்றன என்று. ஆனாலும் அதற்குப் பின்னர் கூட நமது மக்களுக்கு எதிரான தாக்குதல்களை இலங்கைப் படைகளும் உலக நாடுகளின் ஏவல் படைகளும் நிறுத்தவில்லை.

ஆனாலும் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள மக்களிடம் ஒரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஆயுதங்கள் அற்ற ஒரு அரசியல் போராட்டமாக நடத்தும் பொறுப்பு நமது கைகளில் வந்து விழுந்துள்ளது. அதை நாம் செய்து கொள்ள நமக்கு ஒரு தளம் தேவைப்படுகின்றது. அதுதான் நமது நாடு கடந்த தமிழீழ அரசு. அதை நாம் நிறுவிய பின்னர் சரியான முறையில் நடத்திச் செல்ல வேண்டும். எனவே உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் நாடு கடந்த அரசுக்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும.

நமது உலகத் தமிழர் பேரவை என்கின்ற அமைப்பு நாடுகள் ரீதியாக இயங்கி வருகின்ற தமிழர் அமைப்புக்களை ஒன்று சேர்த்து சர்வதேசத்தை எமது பக்கம் திரும்பிப் பார் என்று கேட்கும் படியான ஒரு போராட்டத்தை நடத்துவதே நோக்கமாகக் கொண்டது. எனவே கனடாவில் உள்ளவர்கள் உலகத் தமிழர் பேரவையின் ஒரு அங்கமாக விளங்கும் கனடிய தமிழர் பேரவைக்கும் தமது ஆதரவை வழங்க வேண்ம் ” என்று கேட்டுக் கொண்டார்.

Comments