ராஐபக்சே ஒரு பொழுதும் கூட்டமைப்பை தடை செய்யப் போவதில்லை. - கஐந்திரன்

நேற்று வடமராட்சிப் பகுதியில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஐந்திரன் அவர்கள்


தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற கொள்கைகள் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதில் தாம் உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை உறுதியோடு முன்னெடுத்துச் செல்லுவதற்கான கொள்கைப் பற்றுக் கொண்ட, சலுகைகளுக்கு விலைபோகாத, அழுத்தங்களுக்கு அடிபணியாத, நேர்மையான, உண்மையான அமைப்பாக த.தே.ம.முன்னணியை உருவாக்கியுள்ளோம். நம்பிக்கையிழந்து, சோர்வடைந்து, துயரத்தில் துவண்டுபோயிருந்த மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பி, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி இலட்சியத்தினை நோக்கி மக்களை நேர்மையாக வழிநடத்திச் செல்லும் பொறுப்பை தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஏற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை தொடர்ந்து தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளி, சரணாகதி அரசியல் பாதைக்கு கொண்டு செல்ல முயன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சதி முயற்சிகளை முறியடித்துள்ளோம். விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்குத் துதிபாடி தாம் தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்று காட்டிக் மக்களை ஏமாற்றி வந்த சில ஊடகங்கள் இன்று சிங்கள பௌத்த பேரினவாதமும் இந்திய ஏகாதிபத்தியமும் விரும்புவது போன்று தமிழ்த் தேசியத்தை சிதைத்து தமிழர்களை நிரந்த அரசியல் அனாதைகளாக்கி சிங்களத்தையும், இந்திய ஏகாதிபத்தியத்தினையும் திருப்திப்படுத்தி தமது சுய இலாபங்களை அடைந்து கொள்ள கங்கணம் கட்டி நிற்கின்றன.

அந்த நோக்கத்திற்காகவே தமிழத் தேசியக் கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுள்ளது என்பதனை நன்கு தெரிந்து கொண்ட பின்னரும் அதன் தலைமையை ஏதோ பெருந்தேசியத் தலைவர் என்பது போலவும், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிலை கொண்டுள்ள தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகனை கொச்சைப்படுத்தும் வகையிலும் செய்திகளை எழுதி மக்களை குழப்பி வருகின்றன. இவ்வாறான எழுத்துக்கள் மூலம் கூட்டமைப்புத் தலைமையில் துரோகத்தனங்களை மூடி மறைத்து மக்களை ஏமாற்றி தவறாக வழிநடத்தி கூட்டமைப்புக்கு வாக்களிக்க வைக்கும் பாதகச் செயலை குறிப்பிட்ட ஓருசில ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை அழிக்க ராஐபக்சே விரும்புவதாகவும், அதற்காக கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்களை ராஐபக்சே பயன்படுத்துவதாக கட்டுக்கதைகளை சில ஊடகங்கள் எழுதிவருகின்றன. ராஐபக்சே கூட்டமைப்பு தலைமையை அழிக்க முற்படுவதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. கூட்டமைப்புத் தலைமையை பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை ராஐபக்சேக்கு உண்டு.
முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்ற பொழுது பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன் பொழுதெல்லாம் கூட்டமைப்புத் தலைமைகள் அமைதியாக இருந்ததன் மூலம் பொது மக்கள் படுகொலை செய்யப்படவில்லை என்பது போலவும் புலிகளுக்கு எதிராகவே ராஐபக்சே யுத்தம் செய்கின்றார் எனவும் உலகுக்கு காட்டிக் கொள்ள கூட்டமைப்புத் தலைமைகள் உதவினர்.

வன்னியில் உள்ள மக்களின் எண்ணிக்கையை குறைத்து அரசு கூறியதுடன் உணவுத் தடை மருந்துத் தடை என்பவற்றை விதித்த பொழுது அரசு கூறும் புள்ளி விபரங்கள் சரியானவை என்ற அடிப்படையில் அமைதியாக இருந்து அரசுக்கு ஒத்துழைத்தனர்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய வேண்டும் என எரிக்சூல்கெய்ம் என்ற மனிதன் இந்தியாவில் இருந்து அறிக்கை விட்ட பொழுது அமைதியாக இருந்து புலிகளின் அழிவை மகிழ்வுடனும் ஆவலுடனும் எதிர்பார்த்திருந்தனர்.

இறுதிப் போரின் பொழுது ஐநா மேற்கொள்ள முயன்ற சில நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி ராஐபக்சேவை காப்பாற்ற இந்தியா மேற்கொண்ட அத்தனை முயற்சிகளுக்கும் கூட்டமைப்புத் தலைமைகள் பூரண ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. இவ்வாறான கூட்டமைப்புத் தலைமைக்கு ராஐபக்சே என்றும் கடமைப்பட்டவர். அவர் ஒரு பொழுதும் கூட்டமைப்பை தடை செய்யப் போவதில்லை.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழித்த பின்னர் அரசியல் ரீதியாகவும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கோரிக்கையை இல்லாதொழிக்க ராஐபக்சே கங்கணம் கட்டி நிற்கின்றார். இந் நிலையில் ராஐபக்சேயின் கொலைப் பட்டாளத்துக்கு எந்த வேலையும் வைக்காமல் தமிழ்த் தேசியத்தை தமிழ் மக்கள் விரும்பி தாமாகவே கைவிடும் நிலையை ஏற்படுத்த கூட்டமைப்புத் தலைமைகள் செயற்படத் தொடங்கியுள்ளனர்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் எஞ்சியுள்ள தேசிய உணர்வை திட்டமிட்டு அழிக்கும் பொறுப்பை கூட்டமைப்பு தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்காகவே தமிழ்த் தேசியக் கொள்கைகளை கைவிட்டு தீர்வுத்திட்டம் ஒன்றினைக் கூட்டமைப்புத் தலைமை தயாரித்து வைத்திருக்கின்றது.

அத்துடன் கடந்த தேர்தலின் பொழுது விடுதலைப் பலிகளால் கூட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டு புலிகளது அழிவுக்குப் பின்னரும் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களை வெளியேற்றியதன் மூலம் தனது விசுவாசத்தை கூட்டமைப்பு ராஐபக்சேக்கு வெளிப்படுத்தியுள்ளது.

இவ்வளவையும் செய்துள்ள கூட்டமைப்புத் தலைமையை ராஐபக்சே பாதுகாக்க விரும்புவாரே அன்றி அழிக்க விரும்பமாட்டார். உண்மை இவ்வாறு இருக்க ராஐபக்சே கூட்டமைப்புத் தலைமையை அழிக்க முற்படுவதாக கூறுவது மக்களை ஏமாற்றி வாக்குகளை கவருவதற்கான முயற்சியே அன்றி வேறில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்று அரசுத்தரப்பில் கூறப்படுவதாக செய்திகள் வருகின்றது. அதற்கான காரணமாக கூட்டமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை கூறிவருவதாக சொல்லப்படுகின்றது. கூட்டமைப்புக்குள் இருந்து நாட்டைப் பிளவுபடுத்துவது பற்றி கருத்துக் கூறக் கூடியவர்களை கூட்டமைப்புத் தலைமை வெளியேற்றியுள்ளது. இப்போது கூட்டமைப்பில் உள்ள அதன் தலைமைகள் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு வாழ்வது பற்றியே தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது நாட்டைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை கூட்டமைப்பு முன்வைப்பதாக அரசு கூறுவது கூட்டமைப்பினர் மீது அரசுக்கு ஆத்திரம் உள்ளது போன்ற பொய்யான தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, அதன் மூலம் த.தே.கூட்டமைப்பே தமிழ் மக்களின் உரிமைக்காக உண்மையாக குரல் கொடுக்கும் கட்சி என்று தமிழ் மக்களை நம்பவைத்து கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொடுத்து தமக்கு விருப்பமான கூட்டமைப்பை தேர்தலில் வெல்ல வைக்க இந்தியாவும், சிங்கள அரசும் கூட்டிணைந்து நாடகம் ஆடுகின்றன. இதனை தமிழ் மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

கூட்டமைப்பு நீண்டகாலத்திற்கு மக்களை ஏமாற்ற முடியாது. இந்தியாவின் எண்ணப்படி தமிழ்த் தேசியத்தை அழிக்க துணை புரியும் ஊடகங்களும் நீண்டகாலம் மக்களை முட்டாள்களாக்கும் முயற்சியை தொடரவும் முடியாது.

போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்படல் வேண்டும் என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தரப்புக்கள் வலியுறுத்திவரும் இவ்வேளையில் ராஐபக்சேயின் குடும்பத்தை தூக்குமேடைக்கு கொண்டு செல்ல மேற்படி அமெரிக்க, ஐரோப்பிய தரப்புக்கள் முயற்சி செய்யும் பொழுது ராஐபக்சேவை காப்பாற்றும் முயற்சியில் கூட்டமைப்பு தலைமை ஈடுபடுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொங்குதமிழ் என்ற இணையத் தளத்திற்காக செவ்வி தருமாறு கேட்டுவந்த ஒருவருக்கு கNஐந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார்.

கNஐந்திரகுமார் பொன்னம்பலத்திடம் செவ்விகண்ட அந்த செய்தியாளர் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு காண்பதே தமது விரும்பம் என்று கNஐந்திரகுமார் கூறியதாக உண்மையை திட்டமிட்டு திரிபுபடுத்தி நேர்காணலை வெளியிட்டுள்ளார். ஆனால் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டை எப்பொழுதும் நிராகரித்து வருபவர்.

அத்துடன் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற கொள்கைகள் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். ஆனால் பொது மக்களை குழப்பி கூட்டமைப்பை வெற்றிபெற வைக்கும் உள்நோக்கிலேயே மேற்படி நேர்காணல் திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்டுள்ளது. எங்களது உயிர் உள்ளவரை இந்தக் கொள்கைகளை நாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Comments