இந்தோனேசியாவில் எலிக்கடிக்குள் ஈழ ஏதிலிகள்

ஆறு மாத காலமாக கப்பலிலேயே தங்கியிருக்கும் 31 சிறுவர்கள் உள்ளடங்கலாக 254 ஈழ ஏதிலிகளின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டுவருகிறது.

அவுஸ்திரேலியா செல்லும் வழியில் தடுக்கப்பட்ட இவர்கள் இப்போதும்கூட தாம் கப்பலைவிட்டு இறங்க மாட்டோம் என மறுத்துவருகின்றனர்.

இவர்களின் உடல் ஆரோக்கியம் மோசமாகுவதாக ஏதிலிகளின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். “தற்போது எங்களுக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. படகுக்குள் ஏராளமான எலிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் நுளம்புகள் பெருகியுள்ளன. இவை பெரும் பயங்கரமானவை. எங்களால் நித்திரை கொள்ள முடியவில்லை. சிலவேளைகளில் எலிகள் எங்களைக் கடிக்கின்றன” எனக் கூறியுள்ளார் அவர்.

“இங்கு தொடர்ந்தும் எங்களால் தங்கியிருக்க முடியாது. நாங்கள் படகை விட்டு இறங்க விரும்புகிறோம். ஆனால் இந்தோனேசிய அரசாங்கம் எங்களுக்குச் சில உறுதிமொழிகளை வழங்கவேண்டும். எங்களைத் திருப்பி அனுப்புவதையோ, தடுப்புமுகாமில் அடைப்பதையோ நாங்கள் விரும்பவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

பெருமெண்ணிக்கையான அகதிகள் சுகவீனமுற்றுள்ளதாகவும், சிலருக்கு நிலைமை மோசமாக உள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை மருத்துவமனை கொண்டுசென்று சிகிச்சை அளித்தாலும் அவர்கள் மீண்டும் படகுக்குத் திரும்பவே அவசரப்படுவதாக இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறுகிறார். அவர்கள் படகைவிட்டு இறங்க வேண்டுமெனத் தாம் வலியுறுத்தப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments