புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் பலம் பொருந்திய கட்டமைப்பிலேயே தமிழரின் உரிமைப் பயணம் உள்ளது

கடந்த 8 ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் மேற்குலகம் மேற்கொண்டுவந்த நடவடிக்கைகள் அனைத்தையும் சிறிது காலம் கிடப்பில் போடும் நிலையை ஏற்படுத்தியுள்ளது அல்லது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் என்பவற்றின் மூலம் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் அது மிகையாகாது.

Posted   Image
ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சம் வாக்குகளால் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டணிக்கட்சி தற்போது நடைபெற்ற பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களில் 60 சதவீதமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. மேலும் முடிவுகள் அறிவிக்கப்படாத இரு மாவட்டங்களின் முடிவுகளும், தேசிய பட்டியல் முடிவுகளும் வெளிவரும் போது அது 63சதவீதத்தை எட்டலாம் என கருதப்படுகின்றது.

பொதுத்தேர்தலைப் பொறுத்தவரையில் இதுவரை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் ஆளும் தரப்பு 117 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 46 ஆசனங்களையும், ஜனநாயக தேசிய முன்னணி 5 ஆசனங்களையும் பெற்றுள்ளன. தமிழத் தேசியக் கூட்டமைப்பு 12 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

நேரடியாக 196 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இலங்கை நாடாளுமன்றத்திற்கு இதுவரையில் 180 உறுப்பினர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 16 உறுப்பினர்களின் விபரங்கள் கண்டி மற்றும் திருமலை மாவட்ட தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் விபரங்களும் வெளியிடப்படும்.

எனவே, இறுதிக்கட்ட அறிவித்தல்களை தொடர்ந்து அரச தரப்பு 142 ஆசனங்களைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு அவர்களுக்கு 8 ஆசனங்கள் தேவைப்படலாம் ஆனால், அதனை அரச தரப்பு எதிர்க்கட்சிகளிடம் இருந்து அல்லது தமிழ் கட்சிகளிடமிருந்து கட்சி தாவல் மூலம் பெற்றுக்கொள்ளும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான பேச்சுகளை சிறுபான்மை கட்சிகளுடன் அரச தரப்பு ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது. முதலில் முஸ்லிம் காங்கிரஸுடன் வெளிப்படையாக பேச்சுகளை மேற்கொண்டுவரும் அரச தரப்பு, எதிர்க்கட்சிகளுடனும், தமிழ் கட்சிகளுடனும் திரைமறைவில் பேச்சுகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இலங்கை அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு கடும் முயற்சிகளை மேற்கொண்டுவருகையில், அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண்பதற்கு அரசியல் சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மேற்குலகம் கருத்து தெரிவித்து வருகின்றது.

ஆனால், அவ்வாறான திருத்தங்கள் அவசியம் என்பது தொடர்பில் இந்தியா மௌனமாகவே உள்ளது. இந்த நிலையில் அரசு பெற்றுக்கொள்ளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சிறுபான்மை இனங்களின் அரசியல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பயன்படுத்துமா என்பதே முக்கியமான கேள்வி.

இந்தக் கேள்வியை முன்வைத்துள்ள பிரித்தானிய நாளேடான த ரைம்ஸ் நாளேடு, இலங்கையின் அரசியல் யாப்பு விதிகளில் ஜனாதிபதி இரு தடவைகள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற வரைமுறை உள்ளதாகவும், எனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறப்போகும் அரசு அதனை மாற்றி அமைத்து ஒருவர் பல தடவைகள் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்ற விதிமுறையை கொண்டுவரலாம் என தெரிவித்துள்ளது.

மேலும் பெரும்பான்மை சமூகத்தின் நலன்களை அதிகரிக்கும் விதிமுறைகளே அதிகம் நிறைவேற்றப்படும் எனவும் அது தெரிவித்துள்ளது. அவர்களின் கூற்றுகளில் உண்மையும் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி பொதுத்தேர்தலாக இருந்தாலும் சரி போரின் வெற்றி என்ற ஒரே கருத்தை முன்வைத்தே இலங்கை அரசு தென்னிலங்கை மக்களிடம் ஆதரவைப் பெற்றுள்ளது.

தென்னிலங்கையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் போரின் வெற்றி எவ்வாறு ஏற்பட்டது என பேசிய அரசு, இனப்பிரச்சினை தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை. எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை இந்த வருடம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் கொண்டுவரப்போவதில்லை.

எனினும் இனப்பிரச்சினைக்கான தீர்வைத் தேடும் குழு அமைக்கப்படும், அது வழமைபோல காலத்தை கடத்தும். தற்போது அந்த குழுவில் இணைந்துகொள்ள வேண்டிய கட்டத்திற்குள் தமிழ்க் கட்சிகளும் வந்துள்ளதால் அரசின் பணிகள் மிகவும் இலகுவாகிப்போய்விட்டன.

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அனைத்துக்கட்சிக் குழு காலத்தை இழுத்துச் செல்ல வடபகுதியின் அபிவிருத்தி என்ற போர்வையில் படைத்தளங்களும், குடியேற்றங்களும் பலமாக நிறுவப்படும்.

இனப்பரம்பல், இனவிகிதாசாரம் என்பன வடக்கு, கிழக்கில் விரைவாக மாற்றப்படும். அவ்வாறு மாற்றப்படும் இன விகிதாசாரங்களுடன் ஒத்துப்போகும் தீர்வு ஒன்றைத் தேடுவதற்கு மீண்டும் ஒரு குழு அமைக்கப்படும்.

போர் நிறைவுபெற்று ஒரு வருடம் அண்மித்துள்ள நிலையிலும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் நிறைவடையவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் 18 இலட்சம் வாக்குகளால் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்ற போதும் அவசரகாலச்சட்டம் நீக்கப்படவில்லை. பலஸ்தீனத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் எனக் கூறும் இலங்கை அரசாங்கம், வடக்குகிழக்கில் குவிக்கப்பட்டுள்ள 1,50,000 இராணுவம் தொடர்பில் எதனையும் தெரிவிக்கவில்லை.

எனவே, இதனை எல்லாம் உணர்ந்து கொள்ள மேற்குலகத்திற்கும், அனைத்துலக சமூகத்திற்கும் காலம் தேவை என்றால் அது நகைப்புக்கிடமானது. ஏனெனில் 2002 ஆம் ஆண்டு ஈராக்கிலும் தேர்தல் நடைபெற்றது தான், அப்போது காலம்சென்ற முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் 99சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.

பர்மாவிலும் தேர்தல் நடைபெறுகின்றது, ஸிம்பாபேயிலும் தேர்தல் நடைபெறுகின்றது. எனவே, தேர்தலின் முடிவுகளை கருத்திற் கொண்டு மேற்குலகம் தமது முடிவுகளை மாற்றி அமைக்கும் சாத்தியங்கள் உண்டா என நாம் கருதினால் அதற்கு மேற்குறிப்பிட்ட நாடுகள் தொடர்பில் மேற்குலகம் கடைப்பிடித்து வந்த அல்லது வரும் கொள்கைகளை சீர்தூக்கிப் பார்ப்பது பொருத்தமானது.

எனினும் ஆசிய பிராந்திய வல்லரசுகளுக்கு சந்தேகங்களை ஏற்படுத்தாது தமது நகர்வை மேற்கொள்வதில் மேற்குலகம் மெதுவான போக்கை கடைப்பிடித்து வருகின்றது. இந்த காலதாமதமும் இலங்கை அரசுக்கு அனுகூலமானதே.

இந்த நிலையில் தான் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பங்களிப்புகளை மேற்குலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. புலம்பெயர் தமிழ் சமூகத்தின் பலம்பொருந்திய கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம் ஆசிய பிராந்திய வல்லரசுகளின் அழுத்தங்கள் இன்றி ஈழத்தமிழ் மக்கள் தமது உரிமைகளை தெளிவாக முன்வைக்க முடியும் என மேற்குலகம் நம்புகின்றது.

ஈழத்தமிழ் இனத்திற்கு தற்போது உள்ள ஒரே வழியும் அதுதான். யாழில் புறக்கணிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளும், இலங்கை அரசினாலும், அனைத்துலக சமூகத்தினாலும் புறக்கணிக்கப்பட்ட இடம்பெயர்ந்த தமிழ் மக்களும் அதனைத் தான் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

அது மட்டுமல்லாது, அவுஸ்திரேலியா முதல் அமெரிக்காவின் மியாமி கடற்கரை வரை ஈழத்தமிழ் மக்கள் மேற்கொள்ளும் கூட்டு அரசியல் தஞ்சமும் அதனைத் தான் இந்த உலகிற்கு கூறி நிற்கின்றது.

-வேல்ஸிலிருந்து அருஷ்
நன்றி -வீரகேசரி வாரவெளியீடு

Comments