முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு கூரல் நிகழ்வு : பிரித்தானிய தமிழர் பேரவை

மனிதாபிமானத்திற்கெதிரான ஒரு பெரும் குற்றமான முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்த்தப்பட்டு ஓராண்டு பூர்த்தி அடைகிறது. சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனிதாபிமான சட்டம் ஆகியவற்றை அப்பட்டமாக மீறி பல்லாயிரக்கணக்கான எமது உறவுகளை பட்டினி போட்டும் குண்டுகள் வீசியும் இலங்கை அரசாங்கம் கொலை செய்தபோது அவர்கள் எழுப்பிய அவலக்குரல் இன்னமும் எமது காதுகளை விட்டு நீங்கவில்லை.

இந்தப்பேரவலத்தை நிறுத்துமாறு கோரி பிரித்தானியாவிலும் உலகெங்கிலும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் பல்வேறுபட்ட சாத்வீகப் போராட்டங்களின் ஊடாக சர்வதேச சமூகத்தை மன்றாடிக்கேட்டுக் கொண்ட நிகழ்வுகளும் இன்னமும் எமது கண்களை விட்டு அகலவில்லை.

ஐ.நா சபை தலையிடும், சர்வதேசசமூகம் தலையிடும், அவலங்கள் தடுக்கப்படும் என்று நம்பிக் காத்திருந்த எமது உறவுகள் அந்த எதிர்பார்ப்போடு அங்கே மடிந்து போனார்கள்.

அந்தக் கொடுமையான வெயிலில் கடற்கரை மண்ணில் உணவின்றி உறையுள் இன்றி ஓயாத குண்டுமழையில் எமது உறவுகள் வாழ்ந்த அந்தப் பொழுதினை, அங்கே அவர்கள் ஈவிரக்கம் இன்றி கொல்லப்பட்ட அந்த நாட்களை நாம் நினைவு கூருவோம்.

சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களும் மனித உரிமைகள் அமைப்புக்களும் தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனப்படுகொலையின் ஒரு உச்சக்கட்ட நிகழ்வாக இந்த முள்ளிவாய்க்கால் படுகொலையைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

ஆனால் இன்றுவரை இந்த மோசமான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் விசாரணை செய்யப்படாமையையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்காமையையும் சுட்டிக்காட்டி சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சிக் கதவுகளைத் தட்டுவோம்.

இறுதி யுத்தத்தில் சுமார் 40,000 அப்பாவி மக்கள் ஒரு சில வாரங்களில் படுகொலை செய்யப்பட்டமையை ‘இனப்படுகொலையாக' பட்டியல் இடுமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்துவதோடு இந்த வரலாற்று உண்மையை மறுப்பதற்குஅல்லது திரிபுபடுத்துவதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுப்போம்.

இது தொடர்பில் பல்வேறுபட்ட நினைவுகூரல் நிகழ்வுகள் மற்றும் கவனஈர்ப்புப் போராட்டங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டு வருகிறது. இந் நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

பிரித்தானியாவில் வாழும் சகல தமிழ் மக்களும் இந் நிகழ்வுகளில் கலந்துகொண்டு பங்களிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டிக் கொள்கிறது.

media@tamilsforum.com

Comments