மனித நேயப் பண்பாடும் மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளும் உச்ச நிலை அடைந்துள்ள 21 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறிலங்கா தனது நாட்டின் பகுதியினரான தமிழர்கள் மீது நேரடித் தாக்குதல் நடவடிக்கையை முப்படை மூலம் மேற்கொண்டுள்ளது.
வடக்கின் வன்னி நிலத்தில் வாழ்ந்த அப்பாவித் தமிழர்கள் இந்தத் தாக்குதலுக்கு இலக்காகினர். தம்மைப் பாதுகாக்கும் வலுவற்ற ஆண், பெண், சிறுவர், குழந்தைகள் வயது வேறுபாடின்றித் தாக்கப்பட்டனர் தமது பாரம்பரிய ப+ர்வீக நிலங்களில் வாழ்ந்த மூன்று இலட்சம் வரையிலான வன்னி மக்கள் இரானுவத்தினரால் படிபடியாக விரட்டிச் செல்லப்பட்டு மனித வாழ்வுக்குச் சாதகமற்ற காட்டுப் பகுதியில் முட்கம்பியால் சுற்றி வளைக்கப்பட்ட தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா அரச படைகளின் இறுதிகட்டத் தாக்குதலின் போது 40,000 க்கும் மேற்பட்ட தமிழ்ப் பொது மக்கள் இலக்கு வைத்து தாக்கப்ப்டடு உயிரிழப்பைச் சந்தித்தனர். இந்த பாரிய உயிரிழப்புக்கள் மே 18 ஆம் நாள் மேற்படி போர் முடிவுறும் நாளுக்கு முந்திய குறகிய காலத்தில் நடைபெற்றன. முப்படைகளின் தாக்குதலால் நடைபெற்ற இந்தப் படுகொலைகள் முள்ளிவாய்க்கால் என்ற கடலோரப் பிராந்தியத்தில் நடைபெற்ற காரணத்தால் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் என்று அழைக்கப்படுகின்றன.
தமது சோக வரலாற்றின் குறியீடாகவும் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் இவ்வருடம் தொட்டுத் உலகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள், மனித நேய ஆர்வலர்கள் ஆகியோர் மே 18 நாளைப் “போர்க் குற்றவியல் நாள்” என்று அடையாளப் படுத்தியுள்ளனர். சிறிலங்காப் படைகள் புரிந்த சர்வதேச மனிதநேயச் சட்ட மீறல்கள் மனித உரிமை நியமங்களுக்குப் புறம்பான செயல்கள் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
சிறிலங்காவுக்கான ஜீ.எஸ.;பி பிளஸ் வரிச் சலுகைகளை மறுக்கும் அறிக்கையில் 2010 மூன்று சர்வதேசச் சட்டங்களைச் சிறிலங்கா மீறியுள்ளதாக ஜரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
ஆவையாவன
1) சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை.
2) சித்திரவதை மற்றும் கொடிய மனிதத் தன்மையற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனைகளுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கை.
3) சிறுவர் உரிமைக்கான சர்வதேச உடன்படிக்கை.
இந்தச் சர்வதேசச் சட்டங்கள் குறிப்பிடும் உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு மேற்கொள்ளவில்லை என்றும் பொது மக்களின் பாதுகாப்புக்கு எதிராகப் பொலிஸ், இராணுவம், விசேட அணிகள், துணைப்படைகள் என்பன தண்டனை அச்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள அரசு அனுமதித்ததாகவும் ஜரோப்பிய ஒன்றிய அறிக்கை குறிப்பிடுகிறது.
அரச படைகளின் அத்து மீறல்களைப் பதிவு செய்வதற்கு உள்ளுர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் வழங்கிய தகவல்கள் தமக்குப் பயன்பட்டதாக ஜரோப்பிய ஒன்றியத்தினர் குறிப்பிடுகின்றனர். அமெரிக்கா இராஜாங்கச் செயலகம் மார்ச் 2010 இல் வெளியிட்ட 2009 ம் ஆண்டிற்கான மனித உரிமை அறிக்கை.
கடந்த வருட மே மாதக் காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் சுதந்திரமாக ஒன்றுகூடல், பேச்சு சுதந்திரம், நடமாட்ட சுதந்திரம் என்பனவற்றை மீறியதாகவும் குறிப்பிடுகிறது இந்தக் குறிப்பு செட்டிக்குளம் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டோர் பற்றியதாகும் மேலும் ஒரு முன்னிலை தொண்டு நிறுவனம் உலக ஊடகங்களின் பார்வையைப் பெறாத மனித அவலம் செட்டிக்குளத்தில் நடப்பதாக அறிக்கை வெளியட்டுள்ளது.
உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை அங்கு பரவலாக நிலவுவதாகவும் அது தெரிவிக்கிறது. வன்னி வாழ் தமிழ் மக்கள் மீது கொடிய யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்ட சிங்கள பௌத்த பேரினவாத அரசு நாளும் விமானக் குண்டு வீச்சுக்களையும் எறிகணைத் தாக்குதல்களையும் நடத்தியது குடியிருப்புக்கள், வணக்கத் தலங்கள், மக்கள் கூடும் பொது இடங்கள், பள்ளிகூடங்கள், மருத்துவமனைகள், நிவாரணம் வழங்கும் மக்கள் நெரிசலாக நிற்கும் கடைகள் என்பன தாக்தல்களுக்கு உள்ளாகின.
சாட்சிகள் இல்லாத இனப்படுகொலையை சிறிலங்கா அரசு நடத்தியது. இந்த மக்கள் மத்தயில் நிலை கொண்டு ஓரளவேனும் உதவி செய்து கொண்டிருந்த ஜநா உதவி அமைப்புக்கள், எம்.எஸ்.எப் மருத்துவ உதவி வழங்கும் தொண்டு நிறுவனம், சிறுவர் நலன் காக்கும் சிறுவர் பாதுகாப்பு நிதியம், ஒக்ஸ்பாம் ஆகிய சர்வதேச நிறுவனங்கள் அரசின் மிரட்டல்களுக்குப் பணிந்து வன்னியில் இருந்து வெளியேறின.
இதனால் காடுகளிலும் மணல் வெளிகளிலும் மடிந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர். மனிதநேய நியமங்கள் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது வாழ்விடம், தோல்நிறம், வரலாறு, நாகரீகம் போன்ற வேறுபாடுகள் இந்த நியமங்களையும் பிரமாணங்களையும் எவ்வகையிலும் மாற்ற முடியாது. தனித்துவங்களுக்கு இடமளிக்காத பொது நியமம் போரின் போது வதைபடும் அனைத்து சிவிலியன் பொதுமக்களுக்கும் நீதி வழங்கும் கட்டாய நிலையில் இருக்கிறது.
தமிழர்களை இப்படித்தான் நடத்துவோம் அதற்க்கான சட்ட திட்டங்களை நாம் இயற்றியுள்ளோம் என்ற சிங்கள அரசின் வாதம் சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் முன்நிலையில் எடுபட வாய்பில்லை. எனவே சிங்களப் படைகள் புரிந்த அட்டூழியங்களுக்கான தண்டனையை சர்வதேச சட்டம் வழங்காமல் இருக்கமுடியாது. போரில் ஈடுபடுவோர் கடைபிடிக்கவேண்டிய விதி முறைகளை ஜெனிவா உடன்படிக்கை பட்டியலிடுகிறது போர் கைதிகள் நடத்தப்படும் முறைகள் பற்றியும் சரனடையும் போராளிகளுக்குரிய பாதுகாப்புக்கள் பற்றியும் இந்த உடன் படிக்கை எடுத்துக் கூறுகிறது.
ஜெனிவா உடன் படிக்கையை அமுல் படுத்தும் பொறுப்பு ஐ.சி.ஆர்.சியின் பொறுப்பாகும் சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் பாதுகாவலனாகவும் போரில் ஈடுபடும் மனித குலத்தின் மனச் சாட்சியாகவும் ஐ.சி.ஆர்.சி இடம் பெறுகிறது. பொது மக்களுக்கு எதிராக மாத்திரமல்ல சரண்புகுந்த எல்ரிரிஈ போராளிகளுக்கு எதிராகவும் சிறிலங்கா படையினர் புரிந்த மனித நேயச் சட்டங்களுக்குப் புறம்பான அத்து மீறல் களுக்கு சட்ட நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு ஐ.சி ஆர் சிக்கு உரியதாகும்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த கையோடு இரு முக்கிய போர் குற்றவியல் நீதி மன்றங்கள் யேர்மனியிலும் யப்பானிலும் அமர்வுகளை மேற் கொண்டன போரில் வெற்றி பெற்ற நாடுகளின் நீதி மன்றங்களாக இவை அமைந்தன யேர்மன் மற்றும் யப்பான் இராணுவத் தலைவர்கள் நீதி விசாரணை செய்யப்பட்டுத் தண்டிக்கப் பட்டனர். அதன் முக்கியத் துவம் கருதி யேர்மன் நாட்டின் நூறெம்பேர்க் நீதி விசாரணைகள் பற்றிப் பார்ப்போம்.
Nuremberg trials என்றழைக்கப்படும் இந்த விசாரணைகள் 20 நவம்பர் 1945ல் ஆரம்பித்து 218 நாட்கள் நடைபெற்றன. யேர்மன் நாசிப் படைத் தலைவர்கள் மீது நான்கு குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
அவையாவன
01) அமைதிக்கு எதிரான குற்றங்கள் -ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடுத்தல்
02) போரியல் குற்றங்கள் -போர் சட்டங்கள் மரபுகளை மீறுதல்
03) மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் -படு கொலைகள், அடிமைப் படுத்தல், சிவிலியன் பொது மக்களை நாடு கடத்தல்
04)சதி செய்தல்
மேற் கூறிய மூன்று குற்றங்களைச் செய்வதற்குப் பொதுத்திட்டம் தீட்டுதல். வரலாறாகிய நூறெம்பேர்க் விசாரணைகளுக்கு முக்கியத்துவம் உண்டு. போர் குற்றம் செய்த இராணுவத்தினர் தண்டிக்கப்படுவர் என்ற கோட்பாடும் மேலிடத்துக் கட்டளையை நிறைவேற்றுகிறோம், நாமாகக் குற்றம் இழைக்க வில்லை என்ற இராணுவத்தினர் வாதமும் கவனத்தைப் பெற்றன.
மேற் கூறிய கோட்பாடு இன்ற வரை நிலைத்து நிற்கிறது இராணுவத்தினரின் மேலிடத்துக் கட்டளை வாதம். அன்றும் இன்றும் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. இன்று நிலவரம் வித்தியாசமாக இருக்கிறது ரோம் நகரில் கைச் சாத்திடப்பட்ட உடன் படிக்கையின் பிரகாரம் சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் ஹாக் நகரில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ளது.
ரோம் உடன் படிக்கையில் 110 உலக நாடுகள் மாத்திரம் கைச்சாத்திட்டுள்ளன. சிறிலங்கா உடன் படிக்கையில் கைச்சாத்திடவில்லை ரோம் உடன் படிக்கையில் கைச்சாத்திட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மாத்திரம் ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தால் நேரடியாக வழக்கத் தொடர முடியும் எனவே சிறிலங்காவுக்கு எதிராக ஐசிசியினால் வழக்குத் தொடர முடியாது.
சிறிலங்கா புரிந்த போர் குற்றங்களுக்காக அதன் இராணுவ அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் ஆகியோரை சர்வசேத குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்துவதற்கு மாற்று உபாயம் இருக்கிறதா என்ற வினாவுக்கு இருக்கிறது என்பது தான் பதில். ஐநா செயலாளர் நாயகம் ஐநா பாதுகாப்பு சபை ஆகியோர் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே சிறிலங்காவைச் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறுத்த முடியும் பான் கீ மூன் இந்தப் பிரச்சனையைக் கையாள்வதில் ஏற்கனவே பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
போர் உக்கிரமடைந்த காலத்தில் உலக அமைதிக்குப் பொறுப்பான ஐநாவின் அமைதி நடவடிக்கைகளை முன்னெடுப்பவருமான செயலாளர் நாயகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்துள்ளார் முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் பாரிய போர்க் குற்றச் சம்பவங்கள் நடந்ததை திருவாட்டி நவநீதம்பிள்ளை உறுதிபட சுட்டியதோடு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துச் சொன்னார். அதன் பின் பான் கீ மூன் விழித்துக்கொண்டார்.
சிறிலங்கா விவகாரத்தில் மத்தியட்சம் வகித்த நோர்வேயின் இராசதந்திர அறிக்கையின் படி சிறிலங்காப் போர்க் செயலாளர் நாயகத்தின் வலுவற்ற கையாள்கைக்கு மீண்டுமொரு உதாரணமாக அமைகிறது ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் கொல்லப்படும் போதும் தமது வாழ்விடங்களில் இருந்து விரட்டப்படும் போதும் செயலாளர் நாயகம் வலுவற்ற பார்வையாளராக இருந்தார். உலகின் பிணக்குகளைத் தீர்க்கும் பொறுப்பு வாய்ந்த ஐநாவும் செயலாளர் நாயகமும் வாளாவிருந்துள்ளனர். இவ்வாறு அந்த உயர்மட்ட அறிக்கை குற்றஞ் சுமத்துகிறது.
நியூயோர்கின் இன்னர் சிற்றி பிறெஸ் என்ற ஊடகத்திற்கு நேர்காணல் வழங்கிய ஐநாவுக்கான பிரான்சு இராசதந்திரி ஜெராட் அவுட் சிறிலங்கா விவகாரத்தில் ஐநாவும் செயலாளர் நாயகமும் ஆமை வேகத்தில் செயற்பட்டதற்கு உறுப்பு நாடுகளின் குறிப்பாக இந்தியா, சீனா, ஆகியவை கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா விவகாரம் பற்றித் தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கப் போவதாக பான் கீ மூன் அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளார் இது பற்றிய அறிவிப்பை சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்சாவுக்கு மேற்கொண்ட பான் கீன் மூன் நிபுணர்கள் குழுவின் முடிவின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார் செயலாளர் நாயகத்தின் பரிந்துரை ஆதாரங்களோடு ஐநா பாதுகாப்புச் சபைக்குப் சமர்பிக்கப்பட்ட பின் பாதுகாப்புச் சபை சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றினால் குற்றவாளிகள் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் செயலாளர் நாயகத்தின் பரிந்துரையிலும் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்திலும் சிறிலங்காவின் தலைவிதி தொங்கிக் கொண்டிருக்கிறது எனினும் இந்தியாவும் சீனாவும் இருக்கும் வரை சிறிலங்கா அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
குற்றவியல் நீதி மன்றத்தின் நடவடிக்கைக்குக் கால வரையறை கிடையாது 1994 இல் 600,000 ருட்சி இனத்தவர்களின் படுகொலைக்குப் பொறுப்பான மூன்று ஹ_ட்டு இன் அமைச்சர்கள் 2005ம் ஆண்டில் அதன் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்டனர் அரசியல் தலைவர்களும் தண்டிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது தமிழர்களுக்கு எதிரான போரை நடத்திய மகிந்த ராஜபக்ச நிகழ்வுகள் சரிவர நடந்தால் தண்டிக்கப்படலாம் சேர்பியா நாட்டின் அதிபர் சுலொபோதன் மிலோசேவிச் நான்கு வருட விசாரணைக்குப் பின் நீதி மன்றச் சிறையில் தண்டணைக்கு முன்னர் மார்ச் 2006 இல் இறந்தார் பல்லாயிரம் பொஸ்னிய முஸ்லிம்களை 1995ல் கொன்ற றடோவன் கறாட்சிக் 2008ல் நீதி மன்றத்தின் முன்னர் நிறுத்தப்பட்டார்.
சிறிலங்காவின் சனாதிபதி படைத்தலைவர்கள் ஆகியோர் இப்போதைக்கு நட்பு சக்திகளின் உதவியால் தப்பிக் கொண்டாலும் நூல் இழையில் தலைக்கு மேல் தொங்கும் கூரிய கத்தி போல் அவர்கள் செய்த தமிழினப் படுகொலைக் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் இதற்காக நாம் எமது பங்களிப்பைச் செய்வது அவசியம் எம்மை உலகம் மறக்க விடாமல் எம்மால் இயன்ற பரப்புரைகளையும் கவன ஈர்ப்பக்களையும் தொடர்சியாக மேற்கொள்வது அத்தியாவசியம்.
அமெரிக்க நகர் ஒன்றில் தொழிலாளர்களுக்கு எதிராக பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் நினைவாகவே மே 01ம் நாள் உலகத் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதைப்போல் மே 18 போர்க் குற்றவியல் நாளாக உலக வரலாற்றில் இடம் பெறச் செய்ய அனைத்தையும் நாம் முன்னெடுக்கவேண்டும்.
-க. வீமன்
Comments