புலிக்கொடி இனியும் தேவைதானா ? ( 2 )

தாயக மக்களின் உணர்வுகளை புலம்பெயர் தமிழர்கள் புரிந்துள்ளார்களா?

Pongu_Tamil2_9_30_05"புலிக்கொடி இனியும் தேவைதானா?"

என்ற தலைப்பில் கடந்த வாரம் எழுதிய கட்டுரை தொடர்பில் கனடாவில் இருந்து வாசகர் ஒருவர் எழுதிய கருத்து ஒன்று, அடுத்த கருத்துப்பகிர்வுக்கான தேவையை ஏற்படுத்தியிருந்தது. அந்த வாசகரது கருத்து புலம்பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு பகுதியினர் மத்தியில், கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னர் வலுப்பெற்றிருப்பது ஏனோ உண்மைதான். ஆகவே, அது தொடர்பான விரிவான கருத்துப்பரிமாற்றம் ஒன்றை உருவாக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

"முள்ளிவாய்க்காலில் தமிழர்களுக்கு எழுதப்பட்ட தலைவிதி இனி எதிர்காலத்தில் சிங்கள தேசத்துடன் இணைந்துவாழவேண்டிய முடிவை தமிழ்மக்களுக்கு ஏற்படுத்திசென்றுவிட்டது. தாயகத்தில் உள்ள மக்கள் போரின் கொடூரத்தினால் துவண்டு, தாயகம் - தேசியம் - தனிநாடு என்று புலம்பெயர்ந்து வாழும் மக்கள் கூறித்திரியும் விடயங்களில் அக்கறையற்றவர்களாக, ஏதோ கிடைப்பதை வைத்து வாழப்பழகிக்கொண்டுவிட்டார்கள்.இனியும் புலி, கொடி என்று கூறிக்கொண்டு பழையவற்றையே தூக்கிப்பிடிப்பதில் அர்த்தமில்லை. அதனால், விமோசனமும் இல்லை"
- இதுவே அந்த வாசகர் அனுப்பியிருந்த கட்டுரைக்கான பின்னூட்டம்.

கொடி தொடர்பாக குறித்த வாசகர் விளித்திருந்த விமர்சனத்திற்கு கடந்த கட்டுரையிலேயே விரிவான விளக்கத்தை பகிர்ந்துகொண்டமையினால், அவரது அடுத்த விமர்சனம் குறித்து விளக்கம் தேடிக்கொள்வது பொருத்தமாக இருக்கும். அதாவது, "தாயகத்திலுள்ள மக்கள் சிங்களதேசத்துடன் சமரசமாக வாழப்பழகிக்கொண்டுவிட்டார்களா?

அவர்கள் விரும்பாத ஒன்றுக்குத்தான் இன்று புலம்பெயர்ந்து வாழும் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்களா?

தமிழ்த்தேசியம் - தாயகம் - தனிநாடு என்பவை தொடர்பான விடயங்களில் தாயக மக்களுக்கு அக்கறை இல்லையா?" இவற்றுக்கு பதில் தேடுவதற்கு இக்கட்டுரையினுள் நுழைகிறோம்.
National_Flag
முள்ளிவாய்க்கால் பேரனர்த்தத்தின் பின்னர் தமிழர்களின் வாழ்வு சூனிய நிலையை அடைந்து, எதுவுமே இல்லாத வாழ்வின் வெறுமைக்குள் தள்ளப்பட்டவர்களாக தாயகத்தில் உள்ள பலர் வாழ்ந்துகொண்டிருக்க, இன்னும் ஒரு பகுதியினர் தம் உடலில் எஞ்சியுள்ள உயிரைத்தாங்கியபடி ஏதிலிகளாக வதைமுகாம்களுக்குள் நாட்களை கரைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களிடம் எப்படி அரசியல் பேசுவது அல்லது அவ்வாறு அல்லல்பட்டுக்கொண்டிருக்கும் அந்த மக்களிடம் போய், இந்த நிலைக்கு அவர்கள் வருவதற்கு காரணமாக அமைந்த ஒரு விடயத்திற்கு இன்னமும் எப்படி ஆதரவு கேட்பது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது.

ஆனால் தாயகத்திலுள்ள மக்களே - தமது அரசியல் தேவைக்கான ஏக்கத்தை அனைத்து தேர்தல்களிலும் வெளிப்படுத்தி - தயாராக உள்ளபோது புலம்பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு பகுதியினர் தாயகத்தில் உள்ள அந்த மக்களின் அரசியல்ஞானம் குறித்து அதிகஅக்கறை கொண்டு கவலைகொள்வது ஏன் என்ற கேள்வியே பதிலாக இருக்கமுடியும். அந்த கள யதார்த்தத்தினை ஆழமாக நோக்கினால், இது குறித்த சந்தேகங்களுக்கு மேலும் விளக்கத்தினை பெற்றுக்கொள்ளமுடியும்.

தாயகத்தில் உள்ள மக்கள் இன்றைய காலகட்டத்தில் துயர் மேல் துயரையும் துன்பத்தின் மேல் துன்பத்தையும் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் சுமந்து வாழ்கிறார்கள். அந்த துயர், தமது தனி வாழ்வில் அனுபவித்துக்கொண்டிருப்பதின் வெளிப்பாடு மாத்திரமல்ல. தமது தேசத்திற்கு இடம்பெற்ற கொடூரத்தையும் சேர்த்ததுதான் என்பதே யதார்த்தம். அதனை அவர்கள் போரின் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களிலேயே ஆதாரமாக தமது வாக்குக்களில் காண்பித்திருக்கிறார்கள்.

உலகின் கொடிய போர்களில் ஒன்றாக நடந்து முடிந்திருக்கும் தமிழின அழிப்புக்கு பின்னரும் அந்த இனம் மீண்டும் தமது தேசியத்தையும் அதன் கொள்கைகளையும் வழிமொழிந்த கட்சி ஒன்றுக்கு வாக்களித்து, தாம் எதற்காக தம்மை இழந்தோமோ அதுவே தமக்கு இன்னமும் வேண்டும் என்று இடித்துரைத்திருக்கிறது என்றால் - அந்த மக்கள் தமது இலட்சியம் தொடர்பான நிலைப்பாட்டில் எவ்வளவு உறுதியாக உள்ளார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டியதில்லை.

தமது தேசத்தின்பால் அவர்கள் செலுத்தவேண்டிய அக்கறை மற்றும் தேசியத்தை நோக்கி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்த தேவைகளிலும் பார்க்க, தமது வாழ்வை மேம்படுத்துவதிலும் சீரழிந்துபோயுள்ள தமது வாழ்வை சீரமைப்பதிலும் அவர்கள் தற்போது அதிக அக்கறை காட்டலாம். அதுவே, இன்று அவர்கள் செய்யவேண்டிய முதற்பணியும்கூட. அதனையே புலம்பெயர்ந்துவாழும் சமூகம் இன்று முழுமூச்சுடன் அவர்களுக்கான பணியாக செய்யவேண்டியிருக்கிறது.

ஆனால், அதற்கு அப்பால் அவர்களிடம் வாழ்ந்துகொண்டிருக்கின்ற தேசிய தாகத்தையும் தேசப்பற்றையும் புலம்பெயர்ந்துவாழும் மக்களில் ஒரு பகுதியினர் மறைத்து தேசியம் தொடர்பாக 'புதிய வகுப்பு' நடத்துவதற்கு தயாராகுவது ஏன்?

தாயக மக்கள் இன்று அரசியல் விழிப்புணர்வு உடையவர்களா இல்லையா என்பதற்கு சிங்கள அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே சில விடயங்களை - அதேவேளை - காத்திரமான செய்திகளை - தெரிந்துகொள்ளலாம்.

2007 ஆம் ஆண்டு ஜுலை மாதம் கிழக்கு மாகாணத்தை விடுவித்துவிட்டதாக பிரகடனம் செய்த சிறிலங்கா அரசு - கிழக்கு முற்றாக விடுவிக்கப்படாத - 2008 ஆம் ஆண்டே மாகாண சபை தேர்தலை நடத்தி அங்கு தனக்கு ஆதரவிருப்பதாக அறிவித்துக்கொண்டது. தனது ஆதிக்கத்தை இலகுவாக இறுக்கிக்கொள்வதற்கு ஏதுவாக அங்கு காணப்பட்ட அரசியற்சூழலை தனக்கேற்ற முடிவை பெற்றுக்கொள்வதற்கு சிங்கள தேசம் பயன்படுத்திக்கொண்டது. இவ்வளவுக்கும் அம்பாறைக் காட்டுப்பகுதியில் விடுதலைப்புலிகளினால் தொடர் இழப்புக்களை இராணுவம் அந்த தேர்தல் முடிந்த பின்னரும்கூட சந்தித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், இன்று நாட்டில் போர் முடிவடைந்துவிட்டதாக பிரகடனம் செய்து ஒரு வருடமான பின்னரும்கூட, வட மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாரற்ற நிலையிலேயே உள்ளது. ஏனெனில், வடக்கில் நடந்த மூன்று தேர்தல்களிலும் தமிழ் தேசியம் என்பது எவ்வளவு தூரம் செல்வாக்கு செலுத்தியுள்ளது என்பதை சிங்கள தேசம் நன்றாகவே புரிந்திருக்கிறது.

தமிழ் தேசியம் என்ற விடயத்தில் சமரசமற்ற நிலைப்பாட்டை கடைப்பிடித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழியிலேயே அங்குள்ள ம்க்கள் தேர்தல்களை சந்தித்துள்ளார்கள். அதற்கு தமது ஆணையை வழங்கியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்த சிங்கள தேசம், மாகாணசபை தேர்தலிலாவது தனது எதிர்பார்ப்பிற்குரிய முடிவை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக காலத்தை இழுத்தடிக்கும்போக்கை கையிலெடுத்துள்ளது. ஆகக்குறைந்த மட்ட அதிகாரங்களை கொண்ட மாகாணசபையில் கூட தமிழர்களின் தேசிய பலம் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாகவிருந்து அதன் ஊடாக அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள தயங்குகின்ற சிங்கள தேசத்திடம் தமிழ் தேசம் எவ்வாறான தீர்வை எதிர்பார்க்கமுடியும்.

அத்துடன், நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நாள் முதல், தமிழ் தேசிய கூட்டமைப்பு தாம் அரசுடன் பேசத்தயார் என்று இற்றைவரை தொடர்ந்து கூறிவருகின்றபோதிலும், அதனை அழைத்துப்பேசுவதற்கு இன்னமும் சிங்கள தேசம் தயாரில்லை. ஏனெனில், தமிழ் தேசிய கூட்டமைப்பு எதனை வலியுறுத்தப்போகின்றது என்பது சிங்களதேசத்துக்கு நன்றாகவே தெரியும். தற்போது அந்த கட்சியுடன் பேச்சு என்று சென்று, தமிழர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சர்வதேசங்களும் சங்கு ஊதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிராகரித்தால் அது தனக்கு மேலும் ஒரு தலையிடியை மேலதிகமாக்கிவிடும் என்பதில் சிங்களதேசம் தெளிவாக இருக்கிறது.

இதிலிருந்து முடிவாக தெரிவது யாதெனில், போர் முடிவடைந்த பின்னரும் தமிழ் தேசியத்தின் ஆன்மாவில் பின்னிப்பிணைந்துள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை முறியடிக்க முடியாமல் திணறும் சிங்கள தேசம், அதற்கான தந்திரோபாய அரசியல் நகர்வுகளுக்காக காலத்தை இழுத்தடித்துவருகிறது. இதுவே யாதார்த்தம்.

ஆனால், புலம்பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு பகுதியினர் - தேசியம் போராட்டம் என்றெல்லாம் பேசி, அதற்கு ஆதரவு தெரிவித்துவிட்டால் தாம் சிறிலங்காவிற்கு சென்று ஒரு ஜாலி பயணம் மேற்கொள்ளமுடியாதே என்ற அங்காலாய்ப்பினாலும், அதற்கு புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள், தமது உல்லாச பயணங்களுக்கு தடையாக இருந்துவிடலாம் என்ற ஆதங்கத்தினாலும் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் தேசிய உணர்வை ஒளித்துவைப்பதற்கு இவர்கள் முற்படுகின்றார்கள். அதன்மூலம் தமிழர்களின் தேசிய உணர்வையும் நீண்டகால நோக்கில் அழித்துவிடத்துடிக்கும் சிங்கள தேசத்திற்கு பல்லக்கு தூக்குகின்ற நிலையாகவே இதனை கருதவேண்டியிருக்கிறது.

இந்த ஒரு பகுதியினரால் முன்வைக்கப்படும் இன்னொரு விமர்சனம் குறித்த விளக்கமும் இங்கு தேவையான இன்னொரு விடயம்.

அதாவது, தாயகத்தில் மக்கள் போரின் வடுக்களால் மரணப்படுக்கையில் கிடக்க, இங்கு வட்டுக்கோட்டை தீர்மானம் என்றும் நாடு கடந்த தமிழீழ அரசு என்று கோடிக்கணக்கில் பணத்தை இறைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தேவைதானா? இந்தப்பணத்தை அல்லல்படும் அந்த மக்களுக்கு அனுப்பினால் அவர்களின் வாழ்வு மேம்படாதா என்பதாகும்.

உண்மை. இந்த நடவடிக்கைகளுக்காக செலவிடப்படும் கோடிக்கணக்கான பணத்தை தாயகத்துக்கு அனுப்பினால், மக்கள் துயர் தீர்ப்பதற்கு அது பெரும் உதவியாக அமையும்.

ஆனால் ஒரு விடயத்தை தெளிவாக உணரவேண்டும். தாயகத்தில் உள்ள மக்கள் எமது இரத்த சொந்தங்கள். அவர்களுக்கான உதவிகள் உடனடியாகவும் நிறைவாகவும் மேற்கொள்ளப்படவேண்டும். விடுதலைக்கான பயணத்தில் தமது சக்திக்கு அதிகமாகவே அவர்கள் தமது தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் வழங்கியவர்கள். அவர்களுக்கான உதவிகள் புலம்பெயர்ந்து வாழும் மக்களினால் தற்போது பல்வேறு வழிகளிலும் சென்றுகொண்டிருக்கின்றன. உதவிகளை மேலும் வழங்கக்கூடிய வழிவகைகளும் ஆராயப்பட்டவண்ணமுள்ளன.

ஆனால், தாயத்தில் தமிழர்களின் தேசிய இராணுவம் சிதைக்கப்பட்டு தமிழர்களின் நிர்வாக கட்டமைப்புக்கள் அழிக்கப்பட்டு சகலதுமே சர்வ நாசம் செய்யப்பட்டுள்ள இந்நிலையில், புலம்பெயர்ந்து வாழும் மக்களே முற்றுமுழுதாக தற்போது தமிழர்களின் அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுத்துவருகிறார்கள். அவ்வாறு ஒரு முழுநிலைப்போராட்டத்தை முன்னெடுப்பதற்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்களின் சக்தி கட்டமைப்பு ஒன்றினுள் கொண்டுவரப்படவேண்டும். நிர்வாகமயப்படுத்தப்பட்டு, அவற்றின் செயற்பாடுகள் நேர்த்தியான ஒழுங்குமுறையின் ஊடாக மேற்கொள்ளப்படவேண்டும்.

தாயக மக்களுக்கு மேற்கொள்ளப்படவேண்டிய உதவிகள் எத்துணை முக்கியமோ, அவர்களுக்கான அரசியல்போராட்டத்தை மேற்கொள்ளவுள்ள கட்டமைப்பின் உறுதிப்பாடும் மிகமிக முக்கியம். இதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

தாயக மக்களின் விடிவுக்காகவும் அவர்களின் அரசியல் எதிர்காலத்துக்கும் ஆயுதவழியில் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் கிடைத்த நிதி யாவற்றையும் அப்படியே மக்கள் அபிவிருத்தியிலும் அரசியல் மேம்பாட்டுக்கும் செலவிட்டிருந்தால், தமிழர்களின் விடுதலைப்போராட்டம் எப்போதோ இருந்த இடம்தெரியாது அழித்தொழிக்கப்பட்டிருக்கும்.

அபிவிருத்திக்கான கட்டமைப்புக்களாக நிதித்துறை, நீதித்துறை, பொருண்மியத்துறை, கல்வித்துறை, கலை - பண்பாட்டுத்துறை, காவல்துறை என்ற கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு நிர்வாக கட்டுமானங்கள் செம்மையாக கட்டியெழுப்பப்பட்டபோதும், அதற்கு சமாந்தரமாக தமிழர்களின் இராணுவ இயந்திரமும் பாரியளவில் கட்டியெழுப்பப்பட்டது.

அதுவே, மக்களின் மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாக - மூன்று தசாப்த காலமாக - செயற்பட்டுவந்தது. அந்த ஒரு சமாந்தர கட்டுமானம் செயற்பட்டிராவிட்டால், எமது மக்களின் அழிவு எப்போதோ ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கும் என்பதற்கு அப்பால், தமிழர்களின் போராட்ட நியாயம் தாயக வேலிகளுக்குள்ளேயே அழிக்கப்பட்டிருக்கும்.

ஆகவே, இன்று அந்த ஆயுத போராட்டத்துக்கு ஈடு இணையான வலுவுள்ள வகையில் புலம்பெயர்ந்த மண்ணில் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் மற்றும் ஜனநாயக போராட்டத்தை கட்டமைப்பு ரீதியாக - நேர்த்தியாக - மேற்கொள்வதற்கான பணிகள் என்பது அவசியமானவை. அதன்மூலமே சர்வதேச அரசுகளின் கவனத்தை பெற்றுக்கொள்வதுடன் அப்பணிகளுக்கான அங்கீகாரத்தையும் கொடுக்கும்.

இந்த உண்மைநிலை உணரப்படுவது புலம்பெயர்ந்துள்ள தமிழ்சமூகத்தை பொறுத்தவரை தேவையான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில், இன்று தமிழினம் வரலாற்றில் சந்திக்கமுடியாத - சந்திக்ககூடாத - எதிர்பாராத - பேரழிவை சந்தித்து சற்று எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது. எல்லா மக்களின் மனங்களிலும் ஆறாத கவலையினதும் வருத்தத்தினதும் வெளிப்பாடாக விரக்தி, கோபம், கையறுநிலை என பல உணர்வுகள் கொப்பளித்தவண்ணமுள்ளன.

ஆனால், அவற்றை சரியான புரிதல்களின் ஊடாகவும் விளக்கங்களின் ஊடாகவும் களைந்து பொறுப்புள்ள கடமைகளுக்கான வடிகால்களாக புலம்பெயர்ந்துவாழும் சமூகம் மாறியுள்ளதன் தாற்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகியுள்ளது.

தெய்வீகன்

Comments