சனல் 4 வெளியிட்ட படம்- தகப்பனாரை 7 வயது மகள் அடையாளம் கண்டுள்ளார்

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான மேலும் பல புகைப்படங்கள் சனல் 4 தொலைக்காட்சியால் கடந்த வாரம் வெளியிடப்பட்டது தெரிந்ததே. அப்புகைப்படங்கள் யாழ்ப்பாண உள்ளூர்ப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அப்புகைப்படங்களில் தனது தகப்பனார் இருப்பதை 7 வயதான மகள் அடையாளம் கண்டுள்ளார். அப்புகைப்படத்தில் உள்ளது தனது கணவர் தான் என்பதை குறிப்பிட்ட நபரின் மனைவியும் உறுதிப்படுத்தியுள்ளார். இவர்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள அனாதைகள் காப்பகத்தில் உள்ளனர். அடையாளம் காணப்பட்ட நபர் 40 வயதான ஹரிகிருஷ்ணன் துரைசாமி என்பவராவார்.

Mrs Harishkrishnan
இவர் முன்னர் புலிகள் இயக்கத்தில் இருந்தவர் எனினும், அதன்பின்னர் இயக்கத்திலிருந்து விலகி தனது குடும்பத்துடன் இருந்தவர் ஆவார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இடம்பெயர்ந்தபோது விட்டுவிட்டு வந்த தமது உடமைகளை எடுப்பதற்காக ஆனந்தபுரம் சென்ற இவர் திரும்பிவரவில்லை.
Harikrishanan Thuraichamy
மேற்படி புகைப்படத்தில், ராணுவத்தினரால் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் பதுங்குகுழி ஒன்றில் அவர் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளது. ஆனால் கடைசிக் கட்டப் போரின்போது விடுதலைப் புலி உறுப்பினர்களின் உடல்களுக்கிடையே தனது கணவரின் உடலும் இருந்ததாக சிலர் கூறினர் எனத் தெரிவித்த திருமதி ஹரிகிருஷ்ணன், ஆனால் தாம் தமது கணவர் இறந்து விட்டார் என்பதை நம்பவில்லை எனவும் கூறினார்.


இப்போது புகைப்படத்தில் அவரைக் கண்டுள்ள இவர், ஒரு நாள் ஹரிகிருஷ்ணன் உயிருடன் தம்மைத் தேடி வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளார் என அவரைச் சந்தித்த மனிதநேயத் தொண்டர் ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு போரின்போது 2 வயதான மகன் ஒருவரையும் இவர் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments