கிளிநொச்சியில் 5 பெண்களின் உடலங்கள் மீட்பு

நேற்று கணேசபுரத்தில் மலக்குழி ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட உடலங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. முன்னர் விடுதலைப்புலிகளின் நிர்வாகம் இருந்த போது கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த காணிக்கு மிக அருகாக உள்ள ஒரு காணி ஒன்றின் மலக்குழி ஒன்றிலேயே இவ் உடலங்கள் காணப்படுகின்றன.

கிளிநொச்சி நகரில் உள்ள கந்தசாமி கோவிலுக்கு முன்வீதியில் உள்ள வீட்டு வளவிற்குள் உள்ள மலசலகூடத்துக்கு அருகாமையில் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மலக்குழியினை துப்புரவு செய்ய முற்பட்டவேளை சந்தேகத்துக்கிடமாக மணல் பரவப்பட்டு அது நிரவப்பட்டிருந்த மணலினை வெளியெடுத்திருக்கின்றனர்.

4 முதல் 5 அடி ஆழத்தில் கிண்டியபோது, குறித்த குழியினுள் கறுத்தப் பைகளால் முடிக்கட்டப்பட்ட நிலையில் பொதிகள் காணப்பட்டுள்ளன. அவற்றினை பிரித்துப் பார்த்தபோது துர்நாற்றத்துடன் பெண்களின் உடலங்கள் காணப்பட்டிருக்கின்றன.

ஐந்துவரையான உடலங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளபோதிலும் இன்னமும் அதிகமான உடலங்கள் அதே குழியினுள் இருக்கலாம் என அங்கு சென்ற மக்களால் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உடனடியாக சிறீலங்காப் படையினருக்கும், காவல்துறையினருக்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இவ் அறிவிப்பினை அடுத்து அங்கு சென்ற படையினர் அங்கிருந்து அனைவரையும் வெளியேறுமாறு மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் பெருமளவு மக்கள் திரண்டு அவற்றினைக் கண்ணுற்றதாகத் தெரியவருகின்றது.

இவ்வுடலங்கள் மூன்று அல்லது நான்கு மாதத்துக்கு முன்னதாக புதைக்கப்பட்டதாக இருக்கலாம் என தெரியவருகின்றது. இதேவேளை நேற்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்ற போதிலும் நேற்று இரவு 7.30மணிவரை கிளிநொச்சி மாவட்ட நீதிபதிக்கு இச்சம்பவம் குறித்த முறைப்பாடு எதுவும் வழங்கப்படவில்லை.

இதன் அடிப்படையில் குறித்த சடலங்கள் இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றப்படலாம் என்ற அச்சநிலையும் எழுந்திருக்கின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடங்கிய காலப்பகுதியில் இதே கணேசபுரம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு பெண்களின் உடலங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்காப்படையினரால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யுவதிகளாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Comments