நோர்வேயில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு அமோக ஆதரவு

வரலாற்று சிறப்பு மிக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தேர்தலில், நோர்வே வாழ் மக்கள் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு பெருமளவில் ஆதரவாய் நின்று தமிழர் ஒருங்கிணைப்பு குழு வேட்பாளர்களை மாபெரும் வெற்றியடையச் செய்துள்ளனர்.



நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அதிகாரப் பூர்வமாக நோர்வே தமிழர் தேர்தல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது (www.tamilvalg2010.com).

3500 மக்கள் பங்குபெற்ற இத்தேர்தலில், 2500 மக்கள் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரிந்துரைத்த வேட்பாளர்களுக்கு வாக்கிட்டமை, நோர்வேயில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாடு மற்றும் மக்களிடம் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை எடுத்துகாட்டுவதாக அமைகிறது.

நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழு பரிந்துரைத்த வேட்பாளர்கள், பன்மடங்கு வாக்குவித்தியாசத்தில் வெற்றி ஈட்டியமை நோர்வே வாழ் தமிழ் மக்களின் எண்ணத் திரையை சரியாக காட்டியிருக்கிறது என்று குறிப்பிடலாம்.

எம் தாயக விடியலுக்காய் தம்மை முழுமையாய் அர்பணித்து பாடுபடும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு மக்கள் என்றென்றும் ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருப்பார்கள் என்பதற்கு இதனைவிட மேலும் ஒரு சான்று தேவையில்லை.

வட்டுகோட்டைத் தீர்மானம் மீளுறுதிப்படுத்தும் தேர்தலாகட்டும், தமிழீழ மக்களவை அமைப்பதிலாகட்டும் அனைத்திற்கும் முன்னோடியாய், உறுதுணையாய் நிற்கும் நோர்வே வாழ் தமிழீழ மக்கள், கொள்கையில் இருந்து என்றும் வழுவாமல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தேர்தலிலும் காட்டிய நெறிமுறை அனைவருக்கும் நல்லதொரு உதாரணம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் உயரிய லட்சியத்தை அனைத்து தமிழ் மக்களும் ஜனநாயக முறையில் தாங்கிப் பிடித்து எமது இலக்கை அடைய பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கை இதன் மூலம் தெளிவாய் உணரமுடிகிறது.

லட்சியத்தில் உறுதியில்லாமல் எம் பாதையை தடுக்கும் சக்திகளை புறந்தள்ளிவிட்டு, தலைவரின் சிந்தனையில் பயணித்து வெற்றி பெற அரசியல் போராட்டம் நடத்தும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கு அதிர்வு இணையதளம் இவ்வேளையில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

Comments