புலம்பெயர் ஈழத்தமிழரை ஒரு கை பார்க்கப் போகின்றாராம் கோத்தபாய

தன் குடும்பமே இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது என்ற மமதையில் தான் நினைத்ததையெல்லாம் செய்யலாம் என்ற பாணியில் உளறித்திரிகின்றார் ஜனாதிபதியின் சகோதரனும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச.

இவர் ஒரு அரச பயங்கரவாதியாக பல நாடுகளினால் இன்று அடையாளப்படுத்தப்பட்டுளார். இவரோ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையும் ஈழத் தமிழ் விசுவாசிகளையும் ஒடுக்கப் போகின்றாராம்.

நான்காம் ஈழப் போராட்டத்தின் பொழுது இடம்பெற்ற அரச பயங்கரவாதத்தில் இவரின் நேரடி கட்டளையின்படியேதான் பல தமிழ் பொதுமக்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான சாட்சியங்களை உலக நாடுகள் தேடி அந்த முனைப்பிலும் அவர்கள் வெற்றிகண்டுள்ளதாக தகவல்.

இப்படியாக கோத்தபாயாவிற்கு எதிராக சாட்சியங்கள் சேகரிக்கும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் கோத்தபாயாவோ புலம்பெயர் தமிழருக்கு எதிராக புலனாய்வு குழு ஒன்றை நியமித்து ஈழத் தமிழர் வதியும் நாடுகளுக்கு அனுப்பி ஈழ விடுதலையை நேசிக்கும் தமிழருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறாராம்.

கோத்தபாய ராஜபக்ச ஒரு அமெரிக்க வதிவிட உரிமையைக் கொண்டவர். தனது சகோதரனின் அரசியல் செல்வாக்கு இலங்கையில் உறுதிப்படுத்தப்பட்டவுடன் இலங்கை சென்று இலங்கையை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றார். இவரின் கடந்த கால கசப்பான சம்பவங்களால் இவர் ஒரு சர்வாதிகாரி என்று பலராலும் பேசப்படுகின்றார். இவர் நேரடியாகவே பல சமூக விரோத செயல்களில் இறங்கி ஏன் இவரின் நேரடிக் கட்டளையிலையே பல உயிர்கள் வேட்டையாடப்பட்டது. இவைகள் அனைத்தும் இவற்றின் மமதை எந்த அளவிற்கு அதிகரித்து விட்டது என்பதை எடுத்தியம்பி நிற்கின்றது.

கோத்தபாய கடந்த வருடம் அமெரிக்கா செல்ல உத்தேசித்திருந்தார். இருந்தாலும் இவரால் அங்கு செல்ல முடியவில்லை காரணம் இவர் அங்கு சென்றால் நிச்சயம் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு அமெரிக்க நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு ஈழத் தமிழருக்கு எதிரான போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்களுக்காக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பார். தான் செய்த பயங்கரவாதச் செயல்களை மூடிமறைக்க ஒரு புலனாய்வு குழுவை நியமித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பை இல்லாதொழிக்கப் போகின்றாராம் இந்த அரச பயங்கரவாதத்தின் கதாநாயகன்.

தெருச்சண்டையை நாட்டுக்குள்ளையே வைத்திருக்க வேண்டியது தானே

தெருச்சண்டையில் பாண்டித்துவம் பெற்ற கோத்தபாய தனது நாட்டிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டியது தானே. அதைவிடுத்து சட்டம் ஒழுங்கு பேணப்படும் நாடுகளிற்குள் தனது தெருச்சண்டையை அறிமுகப்படுத்தி புலம்பெயர் தமிழரை அடிபணிய வைக்கலாமென்று கணக்குப்போட்டுள்ளார் போலும் இந்த தெருச்சண்டை வீரன் கோத்தபாய.

வன்னி பெருநிலப்பரப்பை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துவிட்டதாக கொக்கரித்து தமிழரின் பூர்வீக தாயகத்திற்குள் அடிக்கடி பிரயாணம் செய்யும் கோத்தபாய அங்கு சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதற்கும் மற்றும் தனது இராணுவ நிலைகளை விஷ்தரிப்பதற்கும் வியூகங்களை தீட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார். கடந்த வாரம் இவர் ஆனையிறவு சென்று தனது செல்வாக்கை இராணுவ சிப்பாய்கள் மத்தியில் நிலைநிறுத்தவேண்டும் என்ற தோரணையில் அங்கு ஒரு நினைவுத் தூபியை திறந்துவைத்தார்.

ஆனையிறவில் அந்த படைவீரர் நினைவுத் தூபி அங்குரார்ப்பண வைபவத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது: “பல நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதனை அழித்தொழிக்கும் நோக்கில் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது."

அவர் மேலும் தெரிவித்ததாவது: “தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோல்வியை தழுவிய போதிலும், புலம்பெயர் தமிழ் ஈழ இராச்சிய கனவை மெய்ப்பிக்க முனைப்பு காட்டி வருவதாக அறியக்கூடியதாகவுள்ளது. இந்த நடவடிக்கைகளை பூரணமாக தடுத்து நிறுத்துவதற்கு வெளிவிவகார அமைச்சும், புலனாய்வுப் பிரிவினரும் நடவடிக்கை மேற்கொள்வார்கள். அடையாளம் காணப்பட்ட நாடுகளின் தூதுவராலயங்களில் இராணுவ அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது."

கோத்தபாயவின் கூற்றின் படி ஏதோ இன்று வரை இலங்கையின் இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகள் இலங்கையின் தூதுவராலயங்களில் கடமையில் ஈடுபடுத்தவில்லை போன்ற தோரணையில் கூறுகின்றார். கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக இலங்கையின் புலனாய்வு பிரிவினர் பல வெளிநாடுகளில் இயங்கும் இலங்கையின் தூதுவராலயங்களில் முழுநேர பணியில் ஈடுபடுகின்றார்கள். அத்துடன் சில புலனாய்வு அதிகாரிகள் இரவு பகல் பாராது ஈழத் தமிழரின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றார்கள். இவர்களின் நேரடியான தலையீட்டில் இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட சில ஈழத் தமிழர் ஒருங்கிணைத்த கூட்டங்கள் தடைப்பட்டன. ஆக இலங்கையின் புலானாய்வு அதிகாரிகள் பல வருடங்களாக உசார் நிலையிலையே வைக்கப்பட்டிருந்தார்கள்.

இலங்கையின் புலனாய்வு அதிகாரிகளின் சதி நடவடிக்கைகளுக்கு எதிராக ஈழத் தமிழர் பல இடர்களுக்கு மத்தியில் தாம் நினைத்தபடியே கூட்டங்களை கூட்டி உலக நாடுகளில் மனக்கதவை திறக்க முனைந்தார்கள். நான்காம் ஈழப்போராட்டத்தின் இறுதிக்கால யுத்த நடவடிக்கையில் பல ஆயிரம் தமிழர் கொத்து கொத்தாக அழிக்கப்பட உலகம் முழுக்க பரந்து விரிந்து கிடக்கும் மானத் தமிழர் ஒன்றிணைந்து நடத்திய போராட்டங்களை இந்த இலங்கையின் புலனாய்வு அதிகாரிகளினாளையே அல்லது தமிழரின் இதயபூமியான மணலாற்றில் இடம்பெற்ற ஈழத் தமிழர் அழிப்பு நடவடிக்கையை முன்னின்று நடத்திய இலங்கையின் காலம்சென்ற தளபதி ஜனக பெரேரா இந்தோனேசியாவின் தூதுவராக கடமையாற்றி பின்னர் ஆஸ்ரேலியாவுக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றினார். இவரினால் ஆஸ்திரேலியத் தமிழரின் போராட்டத்தை அழித்துவிட முடியவில்லை.

கடந்த வருடம் இடம்பெற்ற யுத்தத்தில் நேரடியாக படைநகர்த்திய 57-ஆம் இராணுவப் பிரிவின் தளபது சரத் டயஸ் கடந்த வருடம் ஜெர்மனிக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக நியமிக்கப்பட்டார். இவரினால் அங்கு வாழும் ஈழத் தமிழரினால் நடாத்தப்படும் போராட்டங்களையோ அல்லது அவர்களின் தாகமான தமிழீழ தாயக கனவையோ அழித்துவிட முடியவில்லை. மாறாக அவர்கள் முன் எப்பொழுதுமில்லாதவாறு இன்று விடுதலைப் புலிகளின் கோட்பாட்டை முன்னிறுத்தி அரசியல் மற்றும் இராஜதந்திர காய்நகர்த்தலை மேற்கொள்கின்றார்கள் என்பது தான் உண்மை.

ஈழப் போராட்டம் என்பது சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போன்றது

எப்படி எரியுண்ட சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை விழித்தெழுகின்றதோ அதைப்போலவே தான் ஈழத் தமிழரின் போராட்டமும். பீனிக்ஸ் பறவை போல ஈழத் தமிழர் எழுச்சியுடனும், உயிர்த்துடிப்புடனும் வீறுகொண்டு எழுந்து நிற்கின்றனர்.

அவர்கள் செய்த தியாகங்கள் ஒருபொழுதும் வீண் போகாது. இதனையே மந்திரமாக கொண்டு வாழும் பல லட்சம் தமிழர் மத்தியில் கோத்தபாய போன்ற தெருச்சண்டைக்காரர்களின் செயல்கள் ஒருபொழுதும் வெற்றியளிக்காது. வெற்றியளிக்காத ஒன்றுக்காக வீணாக நேரத்தை மற்றும் பொருளை செலவழிப்பதானது இலங்கையை மென்மேலும் வறுமையை நோக்கியே பயணிக்க வழிகோணும்.

ஈழத் தமிழரின் தார்மீக கோரிக்கையான அரசியல் கோரிக்கைகளுக்கு ஒரு தீர்வை முன்வைக்காமல் தேவையில்லாமல் சண்டித்தனம் காட்டுவது நாகரிக விழுமியங்களுக்கே ஒத்துவராதவை. ஆகவே அடிப்படை பிரச்னைக்கு ஒரு தீர்வை முன்வைக்காமல் தேவையில்லாமல் புதுப் பிரச்சினையை கிளறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக அமையும் இதனால் நிச்சயம் பல விதமான பிரச்சனையை எதிர்காலத்தில் இலங்கை சந்திக்க வழிகோணும்.

சிலவருடங்களுக்கு முன்னர் இலங்கையின் இராஜதந்திரியுடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது அப்பொழுது அவர் கூறியதாவது: “பழைய சிங்கள தலைமை தவறை இழைத்துவிட்டார்கள் ஆனால் பின்னாளில் வந்த தலைமை அதை உணர்ந்து இதயசுத்தியுடன் ஈழத் தமிழரின் பிரச்சினையை தீர்க்க முன்வந்ததார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் அதனை உதாசீனப்படுத்திவிட்டார்கள்.”

அப்பொழுது எழுப்பிய கேள்வியொன்றுக்கு அவர் கூறிய பதில்: “சந்திரிகா அம்மையார் மற்றும் அவரின் பின்னர் வந்த தலைமைகள் ஈழத் தமிழரின் பிரச்சினையை சுமுகமாக தீர்க்க உறுதிபூண்டார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்கள். காரணம் அவர்கள் தமிழருக்கு ஒருபொழுதும் விடிவை பெற்றுத்தர முன்வரவில்லை. காரணம் அவர்கள் பயங்கரவாத செயல்களின் மூலம் கோடிக்கணக்கான பணத்தை சேர்த்து தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கின்றார்கள்."

அந்த இராஜதந்திரியின் பேச்சுக்கள் வேறு இனத்தவரை நம்பவைக்கக் கூடியதாக இருந்தாலும் அவரின் கூற்றுக்கள் ஈழப் பிரச்சனையை நன்கு அறிந்தவர்களினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல நேரங்களில் முன்னுக்கு பின்னான தகவல்களைத் தந்து ஒரு இக்கட்டான நிலையை அன்றைய தினம் அந்த மூத்த இலங்கையின் இராஜதந்திரி சந்தித்தார். இன்று எழும் கேள்வி என்னவென்றால் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக விழாக்களை நடாத்தும் சிங்கள தலைமை தமிழரின் அரசியல் பிரச்சனையை எப்படி தீர்க்கப் போகின்றது என்று இன்று வரை எதனையும் தெளிவாக கூறவில்லை. ஏதோ இந்தியா மற்றும் இதர உலக நாடுகள் அழுத்தம் கொடுப்பதற்காக ஒப்பந்தங்கள் போடுவதும் பின்னர் அவற்றை தாமே கிழித்தெறிவதும்தானே சிங்களத் தலைமைகள் தொடந்து கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக செய்துகொண்டிருக்கின்றது.

சிங்களத் தலைமைகளும் அவர்களின் அருவருடிகளும் காலத்திற்கேற்றவாறு தமது பேச்சை மாற்றி தமிழினத்திற்கு எப்படியெல்லாம் தீங்கு இழைக்க முடியுமோ அவ்வளவுக்கு கெடுதல் செய்து அவர்களின் தார்மீக அரசியல் கோட்பாட்டை அடியோடு இல்லாதொழித்து இலங்கையில் தமிழர்கள் என்ற இனம் ஒன்று இருந்ததாக வரலாறே இல்லை என்று சொல்லுமளவுக்கு நிகழ்கால நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதன் பின்னணியில் தான் கோத்தபாயவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அவரின் கணக்கின்படி இலங்கையில் வாழும் தமிழரை அடக்கி ஒடுக்கினாலும் புலம்பெயந்த தமிழர் மீண்டும் ஈழக் கோட்பாட்டை வலியுறுத்தி அதற்கு ஒரு புத்துயிர் கொடுத்துவிடுவார்கள் என்ற கலக்கத்தில் எழுந்தது தான் சிறப்புப் புலனாய்வு குழு நியமிப்பு.

ஈழத் தமிழரின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான ஆயுதப் போராட்டம் அதற்காக தமிழர் கொடுத்த விலை சொற்களால் வர்ணிக்க முடியாதவை. பல்லாயிரக்கணக்கான உயிர்களின் தியாகத்திற்கு ஒரே தீர்வு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தன்னாட்சிகொண்ட ஈழம். இதனை மறுத்து மென்மேலும் ஈழத் தமிழர் மீது இடர்களை உண்டுபண்ண எத்தனித்தால் அதன் பின் விளைவு முன் எப்பொழுதுமில்லாதவளவு விபரீதமாக இருக்கும் என்பதை கோத்தபாய எண்ணிப்பார்த்திருக்க சந்தர்ப்பமில்லை. காரணம் அவர் விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக கூறி வெற்றிக்களியாட்டத்தில் இறுமாப்புடன் இருக்கின்றார்.

புலம்பெயர் ஈழத் தமிழரை ஒரு கை பார்ப்பேன் என்பது கோத்தபாயாவின் அகங்காரத்தை எடுத்தியம்பி நிற்கின்றது. அவர் எத்தனை புலனாய்வு குழுக்களை நியமித்தாலும் ஒருபொழுதும் அவர்களின் நடவடிக்கைகள் வெற்றியளிக்க போவதில்லை என்பது தான் நிஜம். அதற்காக தேவையில்லாமல் செலவிடுவதிலும் பார்க்க பேசாமல் ஈழத் தமிழரின் அடிப்படை அரசியல் கோரிக்கையை நிவர்த்தி செய்து அவர்களை தமது பூர்வீக இடங்களில் சுதந்திரமாக வாழ விடுவதுதான் நிரந்தர சமாதான சூழலை உருவாக்கும்.

அதனை மறுத்து சண்டித்தனத்தை தொடர்ந்தும் காட்ட முனைந்தால் ஈழத் தமிழர் எவ்வாறு பீனிக்ஸ் பறவை சாம்பலில் இருந்து விழித்தெழும்புகின்றதோ அதைப்போலவே ஈழத் தமிழரும் புது எழுச்சியுடனும், உயிர்த்துடிப்புடனும் வீறுகொண்டு எழுந்து புதுமையான பல வழிகள் ஊடாக தனித் தமிழ் ஈழத்தை உலக நாடுகளின் ஆசியுடன் அடைவர். இதனைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் சிங்கள தேசத்திற்கும் நல்லது அதை வழிநடத்தும் மகிந்த ராஜாபக்சவுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் நல்லது.

-அனலை நிதிஸ் ச. குமாரன்

nithiskumaaran@yahoo.com

Comments