குளோபல் தமிழ் நியூஸ் [GTN] தானே தன்னைச்சுற்றி உருவாக்கியிருக்கிற குழப்பத்திற்கான விளக்கம்


பதிவு, மீனகம், ஈழம் நியூஸ் ஆகிய இணையத்தளங்கள் தமது கட்டுரை ஒன்றை மறுபிரசுரம் செய்துள்ளதாக குளோபல் தமிழ் நியூஸ் என்னும் இணையத்தளம் குற்றம் சுமத்தி செய்தி ஒன்றை கடந்த 01ம் திகதி வெளியிட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக் குறித்த தன்னிலை விளக்கம் ஒன்றை பதிவு செய்ய செய்யவேண்டிய கடப்பாடு எங்களுக்கு உள்ளது.

வியாபார நோக்கங்களை பெரும்பாலும் முதன்மைப்படுத்தி இணையத்தளங்களை நடத்திவரும் இணையங்களில் இருந்து செய்திகளை மறுபிரசுரம் செய்யும் போது யாருக்கும் ஆத்திரமும் கோபமும் வருவது சகஜமே. அதனை நாம் முதலில் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் எமது நிலைப்பாடு என்பது வேறுபட்டது. முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது போல அனைத்துலக மட்டத்திலும் தமிழ் தேசியத்தை அழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை முறியடித்து தேசியத்தின் அடையாளங்களை காப்பதை ஒரே நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் ஈழம் ஈ நியூஸ்.

அதற்காக பணிபுரியும் உழியர்களும் அர்ப்பணிப்பு ஒன்றையே எதிர்பார்ப்பாக கொண்டு இயங்கி வருகின்றனர். இந்த நிலையில் நாம் தேசியத்திற்காக உலகெங்கும் இயங்கிவரும் 20 (எம்மோடு சேர்த்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இணையங்கள் உட்பட) இற்கு மேற்பட்ட தமிழ் இணையத்தளங்களுடன் இணைந்து செய்திகளை பரிமாறி வருகின்றோம்.

எமக்குள் பரிமாறிக்கொள்ளப்படும் செய்திகள் குறித்த மூலங்களை கூட நாம் அடையாளப்படுத்துவதில்லை. யார் தகல்களை வெளியிட்டவர்கள் என்பதை நாம் முதன்மைப்படுத்துவதில்லை

அந்த தகவல் எவ்வளவு மக்களை சென்றடைகின்றது என்ற வழியை தான் நாம் பார்ப்பதுண்டு. ஏனெனில் ஒரு போராடும் இனத்திற்கு அது முக்கியமானது. இதற்காக ஊடக அறத்தையோ தர்மத்தையோ நாம் மீறுவதில்லை.

எமது சக ஊடகங்களிலிருந்து செய்திகள் எடுக்கும்போதுதான் நாம் மூலத்தை சுட்டுவதில்லை. ஏனைய ஊடகங்களிலிருந்து செய்திகளை எடுக்கும்போது நாம் கட்டாயம் மூல ஊடகத்தை ஆதாரம் காட்டியே செய்திகளை வெளியிட்டு வருகிறோம்.

ஒரு போரடும் இனத்தின் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளும், துன்புறுத்தல்களும், மனித உரிமை மீறல்களும் உலகில் பரந்து வாழும் பெருமளவிலான மக்களை சென்றடைய வேண்டும் என்பது தான் முக்கியமானது.

ஆனால் வியாபார நோக்கங்களை முதன்மைப்படுத்தும் ஊடகங்கள் இந்த நிலைப்பாட்டில் செயற்பட முடியாது என்பதும் எமக்குத் தெரியும்.

இது எமது தவறை நியாயப்படுத்தும் முயற்சி அல்ல. அன்று நடந்த சம்பவத்தின் பின்னணியை விபரிப்பதே நமது நோக்கம்.

இந்த அடிப்படைகளில்தான் நாகேஸ் (கிழக்கின் உதயத்தில் ‐ அஸ்தமிக்கும் உண்மைகள் ‐ நாகேஸ் நடராஜா) என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றை தனது சக இணையங்களிலும் மேற்படி குற்றம் சுமத்தும் ஊடகம் உட்பட வேறுபல ஊடகங்களில் வெளியாகியதன் அடிப்படையில் சக இணயம் ஒன்றில் இருந்து ஈழம் ஈ நியூஸ் மறுபிரசுரம் செய்திருந்தது. கிழக்கு மக்களின் துன்பமான வாழ்வு குறித்த கட்டுரை அது.

ஆனால் அக் கட்டுரை இப்போது குற்றஞ்சாட்டும் இணையத்திற்கு பிரத்தியேகமாக எழுதப்பட்டதென்பதும் தனது வியாபார நோக்கங்களை முதன்மைப்படுத்தியே அக்கட்டுரையை அந்த ஊடகம் பிரசுரம் செய்திருந்தது என்பதையும் நாம் அறியவில்லை.

அத்தோடு அந்த மூலக் கட்டுரை அந்த இணையத்திற்காக மட்டுமே எழுதப்பட்டதுதானா என்பதிலும் எமக்கு குழப்பம் ஏற்பட்டதன் விளைவாகவே எழுதியவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு ஊடக மூலத்தை குறிப்பிடவில்லை. ஏனெனில் இந்த குழப்பத்திற்கு பின்வரும் நிகழ்வும் காரணமாகிறது.

அதாவது அன்றைய திகதியில் குபேரன் என்பவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சி. வி. கே சிவஞானத்தின் உரை ஒன்றை பதிவு செய்ததாக உதயன் நாளேடு பிரசுரம் செய்திருந்தது.

அதனை நாம் உதயன் பத்திரிகையை மேற்கோள்காட்டி மறுபிரசுரம் செய்திருந்தோம் (http://www.eelamenews.com/?p=26429). ஆனால் அது ஜி.ரி.என் ற்காக குபேரன் வழங்கியதாக ஜி.ரி.என் தெரிவித்துள்ளது.

எனவே இதில் எது உண்மையானது?

குபேரன் ஜி.ரி.என் இற்கு எழுதினாரா அல்லது உதயனுக்கு எழுதினாரா? அல்லது இரண்டுக்கும் செய்தி கொடுப்பவரா?

அவர் ஜி.ரி.என் இற்கு மட்டும் தான் எழுதியிருந்தால் ஜி.ரி.என் இணையத்தை குறிப்பிடாது செய்தி வெளியிட்ட உதயனை சேறடித்து ஏன் ஜி.ரி.என் செய்தி வெளியிடவில்லை?

தமிழ் தேசியத்தின் மீது ஈடுபாடுகொண்ட ஊடகங்களின் மீது தான் சேறடிப்பது என்ற கொள்கையுடன் தான் இவர்கள் செயற்படுகிறார்களா?

மறுவளமாக குபேரன் என்பவர் உதயன், ஜி.ரி.என் ஆகிய ஊடகங்களுக்கும் செய்தி வழங்கும் ஒருவராக இருந்தால் நாகேஸ் என்பவரும் அவ்வாறே பல்வேறு - எமது சக இணையங்கள் உட்பட- ஏனைய ஊடகங்களுக்கும் ஒரே செய்தியை வழங்கியிருப்பார் என்று நாம் எண்ணியதில் தவறிருக்க முடியாது.

சி.வி.கே சிவஞானத்தின் உரையை மறு பிரசுரம் செய்ய விரும்பும் ஊடகம் ஜி.ரி.என் மூலத்தை குறிப்பிட்டு பதிவு செய்வதா அல்லது “உதயன்” நாளிதழின் மூலத்தை குறிப்பிட்டு பதிவு செய்வதா என்பதை தயவு செய்து ஜி.ரி.என் நிர்வாகம் விளக்க வேண்டும். இரு மூலங்களையும் குறிப்பிட்டு ஒரு செய்தியை வெளியிட முடியாது என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த குழப்பத்தில்தான் ஊடக அறத்தை மீறாது – சிவிகே சிவஞானத்தின் உரைக்கு இரண்டு ஊடகங்கள் தனித்தனியாக பொறுப்பெடுத்து அபத்தம் புரிந்தது போல் – நாம் அந்த அபத்தத்தை புரியாமல் கட்டுரை எழுதிய கட்டுரையாளரின் பெயரை மட்டும் போட்டு நாம் அந்த பதிவை எமது இணையத்தில் இணைத்தோம்.

குபேரனின் கட்டுரையை ” உதயன்” தனது செய்தியாளரின் பதிவாக வெளியிட்டபோதும் ஜி.ரி.என் தனது கட்டுரையாக – தமக்கு மட்டும் பிரத்தியேகமாக எழுதப்பட்டதாக தெரிவித்து வெளியிட்டிருந்தது. பிற்பாடு நாகேஸ் அவர்களின் கட்டுரையையும் தனது கட்டுரை என்று பதிவு செய்த போது எமக்கு இயலாபாகவே சந்தேகம் எழுகிறது.

எனவே நாம் எழுதியவரின் பெயரை மட்டும் போடுவோம் என்ற முடிவுக்கு வந்தது ஜி.ரி.என் தானே தன்னைச்சுற்றி உருவாக்கியிருக்கிற குழப்பத்தின் முடிவு. இதில் மற்றவர்களை பழி சுமத்துவது நகைப்புக்கிடமானது.

எம்மிடம் எழுத்துமூலம் விளக்கத்தை கோராமல் ஊடக மூலம் இல்லாமல் வெளியிடப்பட்டதன் பின்னணியை எம்மிடம் நேரிடையாக அறியாமல் உடனடியாகவே இணையத்தில் அவதூறு பரப்ப முற்பட்டதற்கே நாம் இந்த விளக்கத்தை பதிவு செய்துள்ளோம். ஊடக அறம், ஊடக தர்மம் குறித்து ஜி.ரி.என் புரியவைக்கும் அவல நிலையில் நாம் இல்லை என்பதை சொல்லி வைக்க விரும்புகிறோம்.
முக்கிய குறிப்பு : “ஈழம்ஈநியூஸ்” இணையத்தளத்தில் வரும் செய்திகளை, கட்டுரைகளை, ஆக்கங்களை எமது அனுமதியின்றியே எவரும் பயன்படுத்தலாம், மறுபிரசுரம் செய்யலாம்.

எமது மூலத்தை குறிப்பிட வேண்டிய அவசியமும் கிடையாது. போராடும் இனம் என்ற அடிப்படையில் மக்களுக்கு நேரிய கருத்துக்கள் சென்றடைவது ஒன்றே எமது நோக்கம். அதை யாரும் மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

நன்றி: ஈழம் ஈ நியூஸ் நிர்வாகம்.

Comments