ஏனென்றால், இவர்கள் சாத்தானிடம் வேதம் கற்றவர்கள்!

மே 12 முதல் 18 வரையான காலப் பகுதியை சிங்கள தேசம் தமிழர்களை வெற்றி பெற்ற வாரமாக அறிவித்துள்ளது. அதற்கான கொண்டாட்ட வைபவங்களுக்கான ஏற்பாடுகள் கொழும்பு, கண்டி, கிளிநொச்சி எனப் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த வருடம் தான் நிகழ்த்திய தமிழினப் படுகொலையை நாடு தழுவிய ரீதியில் கொண்டாடி மகிழ்ந்த சிங்கள தேசம் இந்தவருடம் மட்டுமல்ல, இனி வரும் காலங்களிலும் இன்னொரு போர் வெடிக்கும் வரை கொண்டாடவேதான் போகின்றது. இதற்கு மாறாக, தமிழர் தரப்பிலும் கடந்த வருடத்தின் சோக நாட்களில் எந்த நாள் அதிக வலி சுமந்தது என்பதில் பெரும் குழப்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசிய வரலாறுகளில் தன்னையும் ஒரு பதிவாக்கிக் கொள்ள விரும்பிய 'புதினப் பலகை' என்ற இணையத் தளம் மே 19 ஆம் நாளை 'ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் நாள்' எனப் பிரகடனப் படுத்தி, அதற்கான ஆதரவையும் கோரியுள்ளது. ''கூரையேறிக் கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம்'' என்பது போல்தான் புதினப்பலகையின் அறிவிப்பு.

ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலைகளுக்காக நீதி கோரி உலகத் தமிழர்கள் போராடுகின்ற நிலையில், 'ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு நாள் தேடும்' முயற்சியில் புதினப்பலகை தமது பதிவுக்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனிலும் கொடுமை, எதிர்வரும் மே 12 முதல் 18 ஆம் திகதி வரையான ஒரு வாரத்தை கறுப்பு நாட்களாக நினைவு கூரும்படி தமிழ் அமைப்புக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மே 18 ஆம் திகதியை 'போர்க் குற்ற நாள்' என உலகத் தமிழர் பேரவை அறிவித்தது, அந்த நாளை நினைவு கூரும் நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், புலம்பெயர் தமிழர்களின் போர்க் களங்களை நெருங்கிவர மறுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மே 17 ஆம் திகதியை துக்க தினமாக அறிவித்துள்ளது. முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் பட்ட வேதனைகள், அவலங்கள். அழிவுகள், மரணங்கள் கூட எம்மவர்களால் அரசியல் ஆக்கப்படுகின்றது.

மே மாதம் தொடங்கியதுமே, தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை நாளாந்தம் கொல்வதை சில மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த இரு துருவவாதிகள் தற்போது மீண்டும் தமது பணியினை இணையத் தளங்களில் ஆரம்பித்து விட்டார்கள். விடுதலைப் போர்க் களத்தில் பங்காற்றினார்களோ, பணியாற்றினார்களோ, நிதி வழங்கினார்களோ அறியேன். ஆனால், தேசியத் தலைவர் குறித்த தமிழ் மக்களது நம்பிக்கை அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு இடைஞ்சலாக உள்ளதை உணரக் கூடியதாக உள்ளது.

தேசியத் தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறார் என்ற நம்பிக்கை 90 வீதமான தமிழர்களிடம் உண்டு. தமிழீழ விடுதலைக்காகப் பாடுபட்ட அனைத்துத் தலைவர்களிடமும் உண்டு. யாராலும் அறியப்படாத, தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத, தமிழ் மக்கள் முன்பாக முகம் காட்டவே அச்சப்படும் ஒருசிலரும், முன்னர் தேசியத் தலைவர் அவர்களால் பதவியிறக்கம் செய்யப்பட்ட, பதவி நீக்கம் செய்யப்பட்ட, வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் பணியாளர்கள் சிலரும் தேசியத் தலைவர் அவர்களுக்குப் பால் வார்ப்பதன் மூலம் தமக்கே தமக்கான புதியதொரு நிகழ்ச்சி நிரலுக்குள் ஈழத் தமிழர்களை அழைத்துச் செல்ல முற்படுகின்றார்கள்.

ஆடுகள் நனைவதைப் பார்த்து ஓநாய்கள் அழுவது போலவே, தமிழர்கள் தேசியத் தலைவரது ஆணையின்கீழ் இப்போதும் செயல்படுவதைப் பார்த்து இவர்களும் விழுந்து விழுந்து கதறி அழுகின்றார்கள். பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்ற சிங்கள வாதத்தை ஏற்றுக்கொண்டிரந்தால், தமிழகத்தில் இரத்த ஆறு ஓடியிருக்குமாம், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் எழுச்சியை உருவாக்கியிருந்திருக்க முடியுமாம், போர்க் களத்தில் தப்பிப் பிழைத்து எஞ்சிய போராளிகள் பலம் பெற்றிருந்திருப்பார்களாம், புலம் பெயர் தேசங்களில் எதிர்ப்புப் போராட்டங்கள் பலம் பெற்றிருக்குமாம் என்றெல்லாம் பிதற்றும் இந்த வெற்று மனிதர்கள் எல்லாமே நடைபெற்றுக்கொண்டிருந்த அந்தக் கொடுமையான காலங்களில் எதற்காக முன் வந்து மக்களிடம் தெளிவுகளை ஏற்படுத்தி, முன்நின்று வழி காட்டவில்லை என்பது புரியாமலேயே உள்ளது.

'பிரபாகரன்' என்பது ஒரு தனி மனித அடையாளம் அல்ல. அது தமிழ்த் தேசியத்தின் முகவரி. தமிழ் மக்களது தேசிய நம்பிக்கை உயிர்த் துடிப்பு. அந்த வார்த்தைக்கு முடிவுரை எழுதுவதன் மூலம், தமிழ்த் தேசிய எழுச்சியைச் சிதைப்பதும், தமிழ் மக்களின் தேசிய நம்பிக்கையைச் சிதைப்பதுமே இந்த நாசகாரர்களின் குறிக் கோளாக உள்ளது.

தமிழீழ மக்களின் நம்பிக்கையைச் சிதறடிப்பதன் மூலம் அவர்களது தேசிய எழுச்சியை முறியடிப்பதே இவர்களது ஒரே நோக்கம். மனிதர்களின் அப்பழுக்கற்ற நம்பிக்கை மட்டுமே வரலாற்றை மாற்றியமைக்கும் நம்பிக்கையை உருவாக்குகின்றது. கடவுள் மீதான நம்பிக்கை அந்த மக்களை நெறிப்படுத்துகின்றது. தலைவன் மீதான நம்பிக்கை அவர்களது சுதந்திரக் காற்றை உறுதிப்படுத்துகின்றது.

நல்லவற்றின் மீதான் நம்பிக்கைகள் என்றுமே பொய்த்துப் போனது கிடையாது. ஈழத் தமிழர்கள் தமது தேசியத் தலைவர் மீது கொண்ட நம்பிக்கையும், அவரது இருப்புக் குறித்த அவர்களது நம்பிக்கையும் வீணாகப் போய்விட முடியாது. 2010 வருடங்களுக்கு முன்னர் உலகில் அவதரித்த ஒரு சமூகப் புரட்சியாளனும் இவ்வாறே எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப்பட்டார். எதிரிகள் அவரை மக்களின் முன்பாகவே சிலுவையில் அறைந்து படுகொலை செய்தார்கள். ஆனாலும், அவரை நம்பியவர்கள் அவரது மரணத்தை நம்பவில்லை. அவர் மீண்டும் வருவார் என்று நம்பினார்கள். அவர் மீண்டு வந்ததை அவர்கள் தரிசித்தார்கள். அந்த நற்செய்தியை உலகம் முழுவதிற்கும் எடுத்துச் சென்றாhகள்.

அவரது வார்த்தைகளைப் பின்பற்றும் பல கோடி மக்கள் இன்றும் அவரது இருப்புக் குறித்து எந்தவித சந்தேகத்தையும் கொள்ளவில்லை. நாங்களும், எங்களது மக்களும் அந்த விசுவாசத்துடன், எங்கள் தேசியத் தலைவர் அவர்களுடைய வார்த்தைகளுடன் எங்கள் விடுதலைப் பயணத்தைத் தொடர்வதன் புனிதம் இவர்களுக்கு என்றுமே புரியப் போவதில்லை.

ஏனென்றால், இவர்கள் சாத்தானிடம் வேதம் கற்றவர்கள்!

- ஈழநாடு

Comments