தமிழர் தாயகப் பகுதிகளை மிக கச்சிதமாகத் திட்டமிட்டு சிங்கள மயமாக்கும் நடவடிக்கையை சிறீலங்காவில் ஆளும் மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற போதிலும், அதனைத் தடுக்க முடியாது தமிழ் மக்கள் தவித்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமும், பலத்துடனான பாதுகாப்பும் மௌனிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தவித பலமுமின்றி தமிழ் மக்கள் திணறி வருவதுடன், மீண்டும் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலயங்கள் இயங்கிய கிளிநொச்சியிலுள்ள உருத்திரபுரம் தற்பொழுது உருத்திரபுர என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று உதயநகர் தற்பொழுது உதயநகர் மாவத்தை என படையிரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பை படையினர் முற்றாக ஆக்கிரமித்த பின்னர் விஹாரைகளை நிறுவுவதும், வீதிகளுக்கு சிங்கப்பெயர் சூட்டுவதும் மிக வேகமாக நடத்தேறியது போன்று, தற்பொழுது யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் பெயர் மாற்றம், பெயர் பலகைகளில் சிங்களத்திற்கு முக்கியத்தவம், பௌத்த விஹாரைகளை நிறுவுதல் போன்ற செயற்பாடுகள் மிக வேகமாக இடம்பெற்று வருகின்றன.
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் 14 ஆசனங்களுடன் எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்டத்தையும் பிரிதிநிதித்துவப்படுத்துகின்ற போதிலும், இந்த பெயர் மாற்றங்கள் பற்றி அறிந்திருக்கின்றதோ தெரியவில்லை என அங்குள்ள மக்கள் சங்கதியின் செய்தியாளரிடம் கூறி கவலைப்பட்டுள்ளனர்.
மன்னார் மடு சந்தியில் புதிதாகத் தோன்றியுள்ள பௌத்த விஹாரை பற்றியும், மடு தேவாலய்ப பிரதேசத்தில் மீள் குடியேற்றம் என்ற கோதாவில் குடியேற்றப்படவுள்ள 80 சிங்களக் குடும்பங்கள் பற்றியும் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தெரிய வந்தபோதிலும், இதுவரை அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததாகவோ, இந்தக் குடியேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுத்ததாகவோ தெரியவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உரைகளையும், ஊடகங்களுக்கு வெளியிடும் வீர முழக்கங்களையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் தமிழ் ஊடகங்கள், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளாகவுள்ள மீள் குடியேற்றம், இயல்பு வாழ்க்கையை தோற்றுவித்தல், சிங்கள மயமாகும் தமிழர் தாயகத்தைக் காப்பாற்றுதல், கடத்தல், கப்பம் கோருதல், கொலைகள், கொள்ளைகள், பாலியல் துன்புறுத்தல்களைத் தடுத்தல் போன்ற இன்னோரன்ன விடயங்களில் கூட்டமைப்பின் செயற்பாடு பற்றிக் கண்டறிந்து தகவல் வெளியிடத் தவறி வருகின்றன.
தேர்தலின்போது உரக்க வீரமுழக்கமிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குறிதிகளில் ஒன்றையேனும் நிறைவேற்ற இதுவரை முயற்சி எடுக்கப்பட்டதாகவோ, அது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகவோ இதுவரை தகவல் இல்லை.
Comments