தமிழர்களின் துயரங்களுக்கு தீர்வு தனித்தமிழீழமே! முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல! தொடக்கமே! உறுதியோடு பயணிப்போம் என செந்தமிழ் சீமான் கூறினார்.
நாம் தமிழர் இயக்கத்தின் கட்சி ஆரம்பநிகழ்வு பற்றியும், வலிசுமந்த மே 16,17,18 ஆம் திகதிகள் குறித்தும் வருடல் இணையம் சார்பாக கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்….
கடந்த ஆண்டு யூலை 18 இல் தமிழ் மக்களை அடைத்துவைத்துள்ள சிங்கள முள்வேலிக் கம்பிகளை அறுத்தெறிவோம் வாரீர் என்று ஆரம்பிக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கம் தொடர்ச்சியாக பல்வேறு தளங்களில் இயங்கிக்கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக மே 18 இல் 50,000 ர்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பலியாகியிருப்பதால் அன்றைய தமிழர்களின் கறுப்பு தினமாக இருப்பதனால் இருக்கிறது.
வீரம் செறிந்த தமிழர்களின் போராட்டம் முடிவுற்றது, இனி அவ்வளவுதான் தமிழர்கள்! அந்த மண்ணிலே விடுதலைப்போராட்டம் இல்லை! விடுதலைப்புலிகள் இல்லை! முற்றுமுழுதாக அழித்துவிட்டோம் என்று இன எதிரிகளும், துரோகிகளும், உலக பேராதிக்க நாடுகளும் எண்ணிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையிலே வீரத் தமிழினம் எந்த நிலையிலும் வீழாது. மானமுள்ள தமிழர் கூட்டம் எவருக்கும் மண்டியிடாது என்பதை காட்டுவதற்காகத்தான் நாங்கள் எந்த இடத்தி விழுந்தோம் என நினைத்தீர்களோ அந்த இடத்தில் எழுந்தோம் பாருங்கள் என்று காட்டவே அன்றைய தினத்தில் மதுரையிலே ஒரு மகாநாட்டை நடாத்தி அன்றைய தினமே நாம் தமிழர் இயக்கத்தை ஒரு அரசியல் இயக்கமாக அறிவிக்க இருக்கிறோம். இது தொடர்ச்சியாக தமிழ் தேசிய இன விடுதலைக்காக போராடுகின்ற மிகப்பெரிய ஒரு அரசியல் அரணாக இந்த இயக்கம் இருக்கும். அரசியல் கட்சியாக மட்டுமன்றி அரசியல் புரட்சியாகவும் இது இருக்கும் எனக் கூறினார்.
தொடர்ந்து உலகப் பந்தில் பரந்து வாழும் தமிழ்மக்களுக்கு இந்த வலிசுமந்த மாதத்தின் கறுப்பு நாட்களான மே 16,17,18 ஆகிய நாட்கள் தொடர்பாக கூறுகையில்,
கடந்த ஆண்டு இதே தினங்களில் நாம் எவ்வளவு அளிவுகளையும், அவலங்களையும், சந்தித்தோம் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இந்த நிலையில் இருந்து விடுபட வேண்டியது தான் தலைவர் பிரபாகரனினுடைய விருப்பமாக இருந்தது.
தமிழர்களுக்கு இந்தளவு துயரமும், அவலமும் வந்து சேர்வதற்கு காரணம் உலகத்தில் அவர்களுக்கு என்று சொந்தமாக ஒரு நாடு, அவர்களுக்கென்று ஒரு தாயகம், இல்லாததுதான் இழிவான நிலைக்கு எம் தமிழினம் தள்ளப்பட்டுள்ளமையை உணர்ந்து தான் வீரம் செறிந்த விடுதலைப்போராட்டத்தை அந்த தாயக மண்ணிலே அவர்கள் முன்னெடுத்தார்கள்.
அந்த விடுதலைப்போராட்டத்தை 20 நாடுகளிற்கு மேலான நாடுகளின் துணைகொண்டு தாங்கள் வீழ்த்திவிட்டோம், அழித்துவிட்டோம் என்று சிங்கள பேரினவாத அரசு கூறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த துயரமும், துன்பங்களும் எதற்கு? நாம் அறுபது ஆண்டுகளாக போராடிவந்ததெல்லாம் எதற்கு? இத்தனை உயிரிழப்புகளை கொடுத்தது எதற்கு? இவ்வளவு இரத்தமும், கண்ணீரும் நாம் சிந்தியது எதற்கு? முடங்கிக் கிடப்பதற்கு தானா?
தாயக விடுதலைக்காக களமாடி வீழந்த அந்த தியாக மறவர்களின் கனவு என்னாவது? எல்லாவற்றிற்குமான தீர்வு தனித்தமிழீழம் தான். அதனை விட வேறு தீர்வு இருக்கமுடியாது.
இந்த முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல தொடக்கம் தான் என்பதை நாம் உள்ளுக்குள் உறுதியாக உச்சரித்துக்கொண்டு எங்கு நாம் வீழ்ந்தோம் என்று சர்வதேசம் கருதுகிறதோ அந்த இடத்திலிருந்து நாம் எழுந்து தமிழர்களுக்கான தீர்வு தனித்தமிழீழம் தான் என்று உறுதி எடுத்துக்கொண்டு அதை நோக்கி பயணிப்போம் என்று கூறினார்.
Comments