ஒரு இனமான , மனிதாபியுமான இளைஞனை காக்க உதவிடுவோம்

நீதி கேட்டுப் போராடும் சுரேஷிற்கு உதவுங்கள்



இன்னலுறும் தனது இனத்துக்கு மனிதாபிமான முறையில் உண்மையாக உழைத்த ஒரு இளைஞனின் வாழ்வை இருட்டிலிருந்து காக்க நேயமுள்ள உங்களின் உதவி கோருகிறோம்

எமது அன்பிற்குரிய தமிழ் உறவுகளே!,

இந்த வேண்டுகோள் மனிதாபிமான உதவி கேட்டு வரையப்படுகிறது. இதைப் படித்த பின்னர் சுரேஷ் யார்? அவருக்கு என்ன உதவி வேண்டும்? என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.



கல்வியில் சாதனை

சுரேஷ் ஈழத்திலிருந்து ஒன்பதாவது அகவையில் கனடாவுக்கு ஏதிலியாக வந்தவர். புலம்பெயர் நாட்டில் மிகுந்த அக்கறையோடு படித்துப் பல்கலைக் கழகம் புகுந்தார். பள்ளிகளில் படிக்கும் போது புலமைப் பரிசில்களையும் விருதுகளையும் பெற்றார். இக்காலத்தில் அவர் ஒரு கெட்டிக்கார மாணவன் என்று பெயர் எடுத்ததோடு சமூக அக்கறை கொண்ட மாணவனாகவும் விளங்கினார். இவரது அறிவுத்தேடலும் அயராத முயற்சியும் இவரைத் தனது பதினெட்டாவது அகவையிலேயே ஓர் கணனி நிறுவனத்திற்குச் சொந்தக்காரராக்கியது.

சுரேஷ் 2006 ஆம் ஆண்டு Waterloo பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் பொறியியல் துறையில் (Electrical Engineering) இளமானிப் பட்டத்தையும், 2008 இல் கலைத்துறையில் இளமானிப் பட்டத்தையும் (Bachelor of Arts), Waterloo Wilfrid Laurier பல்கலைக் கழகத்தில் வணிக முகாமைத்துவ முதுமானிப் பட்டத்தையும் (MBA) பெற்றார். இவர் Microsoft, Amazon, NVIDIA, RIM போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற காலங்களில் Microsoft நிறுவனத்திற்காக மாணவர்களை தெரிவு செய்யும் பொறுப்பும், பணியும் கூட இவரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

ஈழச் சிறுவர் சிறுமிகளுக்கு உதவி

2004 ஆம் ஆண்டில் ஈழம் செல்லும் வாய்ப்பு சுரேஷிற்குக் கிட்டியது. அங்கு போரினால் ஏதிலிகளாக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் வலிகளை செந்தளிர் இல்லத்தில் கண்கூடாகக் கண்டார். அந்தக் காட்சிகள் அவர் மனதை மிகவும் பாதித்தது. புலம் பெயர்ந்த மண்ணில் தனக்குக் கிடைத்த கணணிக் கல்வி தாயகத்திலுள்ள இளம் சமுதாயமும் பெற்று வாழ்வில் உயரவேண்டும் என்று ஆசைப்பட்டார். மேலை நாடுகளுக்கு நிகரான அறிவாற்றலோடு ஈழத்தமிழ் சமுதாயமும் வளரத் தன்னாலான உதவிகளைச் செய்ய வேண்டுமென்று உறுதி பூண்டார்.

வன்னியிலுள்ள VanniTech என்ற நிறுவனத்திற்கு தன் துறைசார் அறிவையும் கணணிகளையும் கொடுத்து உதவினார். சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்திசெய்யும் (Solar Panel System) முறைக்கு தன்னாலான உதவியை செய்தார். மீண்டும், 2004 வது ஆண்டு மார்கழியில் தாயகம் சென்ற வேளையில் பல ஆயிரம் உயிர்களைப் பலிகொண்ட ஆழிப்பேரலையின் அனர்த்தங்கள் அவருக்கு நேரடி அனுபவமானது. தான் மிகவும் நேசித்த செந்தளிர் இல்லச் சிறார்கள் பலரின் உயிரற்ற உடல்கள் அவரது மனதை மிகவும் பாதித்தது.

ஆழிப்பேரலை ஏற்படுத்திய பொருள் அழிவுகள் அத்தனையையும் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமென்ற நோக்கத்தோடு இங்கு வந்து ஈழத்தில் பொதுமக்கள் படும் இன்னல்களை மாணவர்களுக்கு விளக்கினார். அவர்களை ஒன்றிணைத்து தன்னாலான பல உதவிகளை செய்தார். அந்தக் காலகட்டத்தில் தான் இவர் வாழ்வில் எதிர்பாராத ஓர் விபத்து ஏற்பட்டது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

21-08-2006 இல் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க கனேடிய காவல் துறையினர் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் சுரேஷை கனடாவில் கைது செய்தார்கள். தடை செய்யப்பட்ட ஓர் பயங்கரவாத அமைப்புக்கு (தமிழீழ விடுதலைப் புலிகள்) உதவினார் என்பதே அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். கூடவே, கணனி போன்ற உபகரணங்களை வாங்கிச்சென்று யாருக்கு வழங்கினார் என்பது தொடர்பாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சோகம் என்னவென்றால் அவர்கள் குறிப்பிடும் காலப்பகுதியில் கனடாவிலோ, இலங்கையிலோ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை.

இருந்தும் கனடாவில் இவரது பிணை மனுவை விசாரணைக்கு எடுத்த நீதிபதி இவரது நன்னடத்தையையும் கல்வித்தகமைகளையும் கவனத்தில் கொண்டு இவரைப் பிணையில் வெளியே செல்ல அனுமதித்தார். பிணையில் வெளியே வந்த சுரேஷ் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதை எதிர்த்து வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார்.

இதன் விளைவாக வேலைவாய்ப்புகள் ஏதுமின்றி பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார். வழக்குச் செலவுகளைப் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் அவரது குடும்பமும் நல்ல உள்ளம் படைத்த சில நண்பர்களும் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நெருக்கடியான சூழ்நிலைக்குள்ளும் தனது கல்வியைத் தொடர்ந்து தனது BA மற்றும் MBA பட்டப்படிப்பை 2008 ம் ஆண்டு படித்து முடித்தார். பல்கலைக்கழகம் அவரது திறமைக்கு மதிப்பு கொடுத்து 2010 முதல் வணிகமுகாமைத்துவ மாணவர்களுக்கு (MBA Students) பகுதிநேர விரிவுரையாளராக அமர்த்தியது.

சுரேஷிற்கு எதிரான வழக்கு அடிப்படையில் இரண்டு நோக்கங்களை கொண்டுள்ளது. ஒன்று சுரேஷ் போன்ற இளைஞர்கள் தாயகத்திற்கு செய்யும் கல்வி மற்றும் சமூகத் தொண்டினை முடக்குவது. இரண்டு இவரைப்போன்ற ஆர்வமிக்க தமிழ் இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி அவர்களின் செயற்பாடுகளுக்குத் தடை போடுவது.

ஆகவே, சுரேஷ் போன்ற சமூக அக்கறை கொண்ட ஓர் இளைஞன் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படவேண்டும். சுரேஷ் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டால் தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் குறைந்தது 25 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்க அமெரிக்க சட்டத்தில் இடமிருக்கிறது.

எமது அன்பான உறவுகளே,
இந்த வழக்கின் வெற்றி என்பது புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழ் சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள அச்ச உணர்வைக் களைந்து புதியதோர் நம்பிக்கையைத் தரும் வெற்றியாக இருக்கும். அந்த வெற்றிக்கு உங்களின் அன்பான உதவியையும் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம்.

பண உதவி செய்ய விரும்புவோர் தயவு செய்து கீழேயுள்ள www.justiceforsuresh.org என்ற தொடர்பை அழுத்தி உதவுங்கள். அல்லது Pay Pal (Credit Card) மூலமாகவும் Certified Cheque மூலமாகவும் உதவலாம். கனடாவில் உள்ளவர்கள் விரும்பினால் Personal Cheque கொடுக்கலாம். உங்கள் காசோலைகளை அனுப்பவேண்டிய முகவரி,

Justice for Suresh
38064- 256 King St. North, Waterloo, ON, N2J 2Y9 Canada

எவ்வாறு பணம் செலுத்துவது?

Justice for Suresh என்ற அமைப்பினூடாக வழங்கப்படும் பண உதவி சட்டரீதியானது.

இந்த வங்கிக் கணக்கை நிர்வகிக்க பல்கலைக்கழக பொறுப்பாளர் ஒருவரும் சமூக சேவையாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மட்டுமே இப்பணத்தைக் கையாளமுடியும் என்பதையும் சுரேஷிற்கு எதிரான வழக்கைத் தவிர வேறெந்தத் தேவைகளுக்கும் இப்பணத்தைப் பயன்படுத்த முடியாது என்பதையும் உறுதிப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

சுரேஷிற்குத் தாமதிக்காமல் உங்களால் முடிந்த பண உதவியை செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்!



மேலதிக விபரங்களுக்கு

http://www.justiceforsuresh.org/
http://www.a9memories.com/


-நன்றி-

Comments