புலம்பெயர் தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடுத்துள்ள இராஜதந்திரப் போர்

இங்கையின் புதிய அரசாங்கம், அதன் பழைய அரச தலைவரின் தலைமையில் முற்று முழுதான ஒரு இராஜதந்திரப் போரில் தற்போது இறங்கியுள்ளது. புதிய வெளிவிவகார அமைச்சர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இலங்கை அரசின் இந்த இராஜதந்திரப்போர் என்பது எதற்காக? யாரை எதிர்த்து?

உலகில் உள்ள மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புகள், அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துவரும் மேற்குலகம், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைக்குழுவை அமைக்க முற்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றை எதிர்த்தே இலங்கை அரசு இந்தப்போரை ஆரம்பித்துள்ளது.

மறைமுகமாக இந்தப் போரானது புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கு எதிரானது என்று கூறினாலும் அது தவறாகாது. ஏனெனில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அனைத்துலக மட்டத்தில் அதிக அழுத்தங்களை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மேற்கொண்டு வருகின்றது. ஏறத்தாழ 1.8 மில்லியன் புலம்பெயர் தமிழ் மக்களைக் கொண்ட இந்த மிகப்பெரும் கட்டமைப்பை வலுவான ஒரு நிலைக்குக் கொண்டு வருவதற்கு மேற்குலகம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசு அச்சமடைந்துள்ளது.

வழமைபோல புலம்பெயர் தமிழ்ச் சமூகம் விடுதலைப்புலிகளின் அமைப்பு என இலங்கை அரசு தெரிவித்து வருகின்றபோதும் அதனை அனைத்துலக சமூகம் நம்பத் தயாராயில்லை.

இலங்கையில் போர் நிறைவடைந்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்து ஒரு வருடம் கடந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் எந்த ஒரு தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. ஒரு துப்பாக்கிச் சன்னம் கூட வெடிக்கப்படவில்லை. ஆனாலும் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததைப்போன்ற வளர்ச்சியைக் காணவில்லை.
வர்த்தகத்துறை பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கையின் வர்த்தகத்துறை கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 277 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை அரசு தனது வரவுசெலவுத்திட்டத்தைக் கூட சமர்ப்பிக்க முடியாது உள்ளதாக தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜே.வி.பி தெரிவித்துள்ளது. இந்த நிலைமைக்குக் காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதன் மூலம் போரின் தடயங்களையும் இனப்பிரச்சினைக்கான தடயங்களையும் அழித்துவிட முடியும் என அரசு நம்புகின்றது.

அதனை அடைவதற்கு இலங்கை அரசு முழு மூச்சாக செயற்பட்டு வருகின்றது. மனித உரிமை அமைப்புகளும், மேற்குலகமும் மேற்கொண்டுவரும் போர்க்குற்ற அச்சுறுத்தல்கள், ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தப்போவதாக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டுவரும் அச்சுறுத்தல், அனைத்துலக நாணயநிதியம் வழங்கிவரும் நிதி உதவியின் கொடுப்பனவு நிறுத்தம் போன்றவை தான் தற்போது இலங்கை அரசின் நெருக்கடிகளுக்கு காரணம்.

மறுவளமாக இந்த நடவடிக்கைகளை அழுத்தமாக பிரயோகிப்பதன் மூலம் தான் தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெறுவதற்கான பேரம்பேசும் அரசியலை மேற்கொள்ள முடியும் என தமிழ் மக்கள் வலுவாக நம்புகின்றனர். இந்த நிலையில் தான் இராஜதந்திரப்போர் என்பது இரு தரப்புக்கும் இடையில் வலுவடைந்துள்ளது. இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் இரண்டு தடவைகள் பிரசல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையலுவலகத்திற்கு சென்று பேச்சுக்களை மேற்கொண்டதுடன், தற்போது (இந்த பத்தி எழுதும்போது) நியூயோர்க்கில் தங்கியுள்ளார். அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் உட்பட பல முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கவுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கைகளை முற்றாக விலக்கிக் கொள்வதாக அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம் கடந்த வியாழக்கிழமை (27) தெரிவித்திருந்தது.

அமெரிக்காவின் இந்த அறிவித்தலானது சாண் இறங்க, முழம் ஏறுதல் என்ற நிலைப்பாட்டின் அடிப்டையில் தான் அமைந்துள்ளதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஆனால் அனைத்துலகத்தின் நீதி தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் சக்திவாய்ந்த சில அரசுகள் தமது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக நீதியை புறந்தள்ளி வருகின்றன எனவும் அனைத்துலக மன்னிப்புச்சபை தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர்க் குற்றங்கள் நடைபெற்றுள்ளதற்கான சாத்தியங்கள் உண்டு, ஆனால் அதில் தலையீடுகள் மேற்கொள்வதில் இருந்து ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது எனவும் அது குற்றம் சுமத்தியுள்ளது.

போரினால் இடம்பெயர்ந்த 300,000 மக்களில் பெருமளவானவர்களை அவசரமாக மீள்குடியமர்த்தியமை, அவசரகாலச்சட்டத்தின் சில சரத்துகளை தளர்த்தியமை போன்ற காரணிகளை முன்வைத்து அனைத்துலக சமூகத்தின் விசனங்களைத் தணிப்பதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சகம் பெரும் பிரசாரப்போரை மேற்கொண்டுள்ளது. அது தொடர்ச்சியாக இராஜதந்திரிகளையும் சந்தித்து வருகின்றது. ஆனால் மீள்குடியமர்த்தப்படாது 25 சதவீத தமிழ் மக்கள் தற்போதும் முகாம்களில் தங்கியுள்ளதாகவும், மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி துன்பப்படுவதாகவும் வன்னி தகவல்கள் தெரிவித்து வருகின்றன.

மேலும் அவசரகாலச்சட்டத்தில் சில சரத்துகள் தளர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள போதும், அதன் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பல ஆயிரம் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இது ஒரு போலியான தோற்றப்பாடு என்ற கருத்துகளை தோற்றுவித்துள்ளதுடன், தற்போதைய அரசு தனது பதவிக்காலம் முழுவதும் அவசரகாலச்சட்டத்தைத் தொடரும் என்ற கருத்துகளையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜி15 நாடுகளின் தலைமைப் பொறுப்பை தற்போது தன்வசப்படுத்தியுள்ள இலங்கை அரசு அதில் அங்கம் வகிக்கும் ஆசிய நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா மீது அழுத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருகையில், ஜி20 நாடுகள் தமது அரசியல் அனுகூலங்களை கைவிட்டு, அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தின் நடவடிக்கைகளைப் பலப்படுத்த வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு அண்மையில் விடுத்துள்ள கடுமையான அறிக்கையும் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை வேண்டும் என அதன் தலைவர் லுயிஸ் ஆர்பர் அழுத்தமாக தெரிவித்துவரும் கருத்துகளும் கவனிக்கத்தக்கவை. இதனிடையே இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்குழு அமைக்கப்படுவது அவசியமானது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம் என்பதை பான் கீ மூனுடன் நடைபெற்ற சந்திப்பின் போது தாம் வலியுறுத்தியிருந்ததாகவும், அதற்கு பிரித்தானியா முழு ஆதரவையும் வழங்கும் எனவும் ஐ.நா.வுக்கான பிரித்தானிய தூதுவர் லயால் கிரான்ட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொன்சவேர்டிக் கட்சி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ள போதும் அது அனைத்துலக நெருக்கடிகளுக்கான குழுவின் அறிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அனைத்துலக மனிதாபிமான அமைப்புகள் மிக அவதானமாக கவனித்து வருவதும், எதிர்நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதும் ஒரு முன்னேற்றமான படிமுறையாகவே கொள்ளப்படுகின்றது. எனினும் மேற்குலகத்தினதும், அது சார்ந்த மனிதாபிமான அமைப்புகளினதும் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் பூகோள நலன்சார்ந்த நகர்வுகள் புதைந்திருக்கலாம்.

ஆனால் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டத்திற்குள் தமிழ் சமூகம் உள்ளது. எனினும் அதனை முறியடிப்பதற்கு இலங்கை அரசு தனது முழு வளங்களையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசு எவ்வாறு தனது முழு வளங்களையும் பயன்படுத்தி போரை மேற்கொண்டதோ அதனைப் போலவே இந்த இராஜதந்திரப் போரையும் வெற்றிகொள்வதற்கு அது தனது முழு வளங்களையும் தற்போது பயன்படுத்தி வருகின்றது. இந்தப் போரின் வெற்றி தோல்வியில் தான் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான தீர்வின் அடுத்த நகர்வின் வேகம் தங்கியுள்ளது.

-வேல்ஸிலிருந்து அருஷ்

Comments