இந்திய சீன ஆதிக்கப் போட்டியில் கொழும்பும் அம்பாந்தோட்டையும்

சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் நீட்சியாக முழுமையான பொருளாதார இரு தரப்பு உடன்பாட்டினை (COMPREHENSIVE ECONOMIC PARTNERSHIP AGREEMENT)ஏற்படுத்த இந்தியா ஆவல் கொண்டுள்ளதை தற்போது காணக் கூடியதாகவிருக்கின்றது.

சீபா (CEPA)என்று பரவலாக அழைக்கப்படும் இந்த உடன்படிக்கையின் ஊடாக, இந்தியா எதனைச் சாதிக்க முற்படுகிறது என்கிற கேள்வி எழுகிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான அமைச்சுப் பொறுப்பினை வகித்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வுடன்படிக்கையை நிறைவேற்ற மேற்கொண்ட முயற்சிகள், காலம் சென்ற நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டன. ஆனாலும் 2007 இல் கைச்சாத்திடப்படவிருந்த இந்த ஒப்பந்தம் தமதுஅடுத்த ஆட்சிக் காலத்தில் கவனிக்கப்படும் என்கிற வகையில் ஜனாதிபதி ராஜபக்ஷ அதனை ஒத்தி வைத்தார். வருகிற ஜூன் 8 ஆம் திகதி இந்தியப் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொள்ளவிருக்கும் நிலையில் மறுபடியும் இவ்விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

2000 ஆம் ஆண்டு இந்தியாவோடு ஏற்படுத்தப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ¯ (FREE TRADE AGREEMENT) மேலும் செழுமைப்படுத்துவதை "சீபா' தன் நிகழ்ச்சி நிரலாகக் கொண்டுள்ளது. நட்பா? மனித உரிமை மீறல் விவகாரமா? என்று வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்காவில் இராஜதந்திரப் போராட்டம் நிகழ்த்தும் இவ்வேளையில், அலரி மாளிகைக்கு முன்பாக தேசிய முதலாளிகள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் தகைமைசார் அறிவியலாளர்கள் ஒன்று கூடி "சீபா' (CEPA) வை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்புதிய உடன்படிக்கையில் நாட்டின் வங்கிச் செயற்பாடுகளையும் பொது நிர்வாகத் துறை சார்ந்த நிறுவனங்களையும் இந்தியாவின் உயர் நிலைப் புத்திஜீவிகளிடம் தாரை வார்க்கக் கூடிய சரத்துகள் இருப்பதாக இதனை எதிர்க்கும் சிங்கள தேசிய பூர்சுவாக்கள் அச்சமுறுகின்றனர்.

அதேவேளை, 2008 ஆம் ஆண்டு இரு தரப்பு வர்த்தகச் சமநிலையில் இந்தியாவிற்கான ஏற்றுமதி 418.3 மில்லியன் டொலர்களாகவும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கான இறக்குமதி 3443 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்படுகிறது. ஆகவே சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் விளைவாக உருவான இந்தியாவிற்குச் சார்பான நிலைமை புதிய சீபா ஒப்பந்தத்தால் மேலும் அதிகரிக்கலாமென்பதே தேசிய முதலாளிகளின் கவலை.
இதைத் தவிர அமெரிக்காவின் கணனி மென்பொருள் நிறுவனங்களிலுள்ள வெற்றிடங்களை இந்திய புத்திஜீவிகள் நிரப்பியது போன்று நாட்டின் நிர்வாகச் சேவையினை அவர்கள் ஆக்கிரமித்து விடுவார்களோ என்கிற அச்சம் மேலோங்கியுள்ளது. பல முதலீட்டு ஒப்பந்தங்கள் ஊடாக ஏறத்தாழ 25,000 சீன நாட்டுத் தொழிலாளர்கள் இலங்கையில் பணி புரிவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டிச் சென்றுள்ளதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் கூறுகின்றன. ஆகவே இந்திய சீன தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணியாளர்களால் இலங்கை நிரம்பி வழியப் போவதை மேற்குறிப்பிடப்பட்ட விடயங்கள் புலப்படுத்துவதை உணரலாம். சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் காணப்பட்ட முதலீட்டிற்கான வரிச்சலுகைகளையும் குறைவான வரித் தீர்வையையும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு பல தொழிற்சாலைகளை இலங்கையில் நிறுவிய இந்திய முதலீட்டாளர்கள், தமது உற்பத்திப் பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய முடியாதவாறு அரசால் தடுக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். இலங்கையில் முதலீடு செய்யும் அதேவேளை, இந்திய வணிகச் சந்தையில் இங்கு தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருட்கள் வர்த்தகப் போட்டியினை உருவாக்காமல் தடுக்கும் நகர்வுகளையிட்டு இந்திய ஆளும் தரப்பினர் மிக அவதானமாகச் செயற்படுகிறார்களென்றே கூற வேண்டும்.

இந்திய இறக்குமதிகள் குறித்த அவதானிப்புகளை நோக்கினால், அதன் அதிகரிப்பானது பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் இறக்குமதிகளால் வீக்கமடைவதைக் காணலாம். ஆனால், தேயிலை மற்றும் ஆடை உற்பத்திப் பொருட்களின் இந்தியாவிற்கான ஏற்றுமதி வர்த்தகம் மட்டுப்படுத்தப்படுகிறது என்கிற வாதமும் உண்டு.
பரஸ்பர வர்த்தக நலன்களை பேசித் தீர்க்கலாமென்கிற விடயத்தில் ஏற்றுமதி இறக்குமதிக்கு இடையிலுள்ள பாரிய இடைவெளி அதிகரிக்காமல் இருப்பதற்கு வேறெந்த பாதைகளும் கிடையாதென்பதே உண்மையாகும். அதேவேளை, மனித உரிமை மீறல் விவகாரத்தால் எழுந்துள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டாலும் அச்சலுகை மீண்டும் தொடருமா என்கிற சந்தேகம் அரச மட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுடனான வர்த்தக உறவில் பலவீனமான நிலை தென்படுவதை அவதானிக்கும் அதேவேளை, மேற்குலகின் அழுத்தங்கள் யாவும் தவிர்க்க முடியாதவாறு இந்தியாவை நோக்கியே இலங்கையை இழுத்துச் செல்லுமென்று கணிப்பிடலாம். மனித உரிமை விவகாரம் மற்றும் போர்க்குற்ற விசாரணை அழுத்தங்கள் தணிவடைந்தால் "சீபா' உடன்படிக்கை இழுத்தடிக்கப்படலாம். போரினால் சிதைவடைந்த பொருளாதார நிலைமைகளைச் சீர்செய்ய மாற்று வழியொன்றைத் தேடும் அவசியம் இலங்கைக்கு உண்டு. மேற்குலகின் அழுத்தங்கள் சீன இந்திய பொருண்மிய ஆக்கிரமிப்பிற்குள் இலங்கையை முடக்கி விடுமென்பதையும் அவதானிக்கலாம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாம் பாக ஆட்சியில் சர்வதேசத்தை இராஜதந்திர ரீதியில் வென்றெடுக்கும் பெரும் சவாலான பணியொன்று பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு ஜனாதிபதியின் பொறுப்பிலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஜனாதிபதியின் சகோதரர் பஷில் ராஜபக்ஷவின் வசம் இருப்பதாலும் "சீபா' உடன்படிக்கையில், ஜீ.எல்.பீரிஸின் வகிபாகம் காத்திரமான பங்களிப்பைச் செலுத்தப் போவதில்லை.

அனைத்துலக மன்னிப்புச்சபை, நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமை கண்காணிப்பகம், மற்றும் சர்வதேச நெருக்கடிக்குழு (INTERNATIONAL CRISIS GROUP) போன்ற அமைப்புகள் தொடர்ச்சியாக விடுக்கும் போர்க்குற்ற விசாரணை குறித்த அறிக்கைகளால் நொந்து போயுள்ளார் பேராசிரியர் பீரிஸ்.

அமெரிக்காவின் தேசிய ஊடக மையம் ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாட்டில் கலந்து கொள்ளாது ஒதுங்கிக் கொண்ட விவகாரம் இதனை உறுதி செய்கிறது. போர்க்குற்றச் சிக்கல்களிலிருந்து இலங்கையை மீட்டெடுக்காமல் வெளிவிவகாரங்களையோ அல்லது அனைத்துலகின் வர்த்தக கொள்கைகளையோ இலங்கைக்குச் சாதகமாக மாற்ற முடியாதென்ற தெளிவான பார்வையினை பேராசிரியர் பீரிஸ் புரிந்து கொள்வார்.

ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜூன் 8 இந்திய விஜயத்திற்கு முன்பாக பீரிஸ் தலைமையில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவும் பிரசில்ஸ் (BRUSELL)இல் வரிச்சலுகை மீட்டெடுப்பில் குதித்துள்ள நபர்களும் தமது பேச்சுவார்த்தைப் பெறுபேறுகளை ஜனாதிபதி ராஜபக்ஷவிற்குத் தெரிவிக்க வேண்டும்.

வரிச்சலுகையை இலங்கை பெறுமென்கிற நம்பிக்கையை தம்மால் வழங்க முடியாதென்று கூறும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் பேர்னாட் சாவேஜ், இது குறித்து தொடர்ந்தும் பேசப்போவதாக காலத்தை இழுத்தடிப்பதை இங்கு கவனிக்க வேண்டும். அத்தோடு ஐ.நா. சபையோ அல்லது அதன் மனித உரிமைப் பேரவையோ மனித உரிமை மீறல் குறித்து பேசலாம். ஆனால், ஏனைய தன்னார்வ அமைப்புகள் அதுபற்றி பேச முடியாது என்கிற வகையில் பேராசிரியர் பீரிஸின் இறுக்கமான செய்தி அமைந்திருப்பதையும் காணலாம்.
இந்தியாவுடன் செய்து கொள்ள உத்தேசித்துள்ள முழுமையான பொருண்மிய இரு தரப்பு உடன்படிக்கையின்(CEPA) பின்புலத்தில் இந்திய சீன பொருண்மிய ஆதிக்க இழுபறிகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

சீன உதவியுடன் அம்பாந்தோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் பாரிய துறைமுக மற்றும் விமான நிலைய கட்டுமான விஸ்தரிப்புகளுக்கு மாற்றீடாக, கொழும்பை மையப்படுத்திய முதலீட்டு ஆக்கிரமிப்பொன்றை நிகழ்த்த இந்தியா வியூகம் அமைக்கிறது.

அம்பாந்தோட்டை நோக்கி நகரும் துறைமுக, விஸ்தரிப்பானது கொழும்பின் முக்கியத்துவத்தை குறைத்துவிடும். ஏற்கனவே இப் பிராந்தியத்தின் துறைமுக மற்றும் விமானப் போக்குவரத்துகளின் முக்கிய மையமாகத் திகழும் கொழும்பு பிரதேசத்தில் எண்ணெய் சுத்திகரிக்கும் மையங்களும் உண்டு. சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை கிடப்பில் போட்டு கொழும்புத் துறைமுகத்தை தமது நவீன காலனித்துவ துறைமுகமாக மாற்றும் சிந்தனை இந்தியாவிற்கு ஏற்பட்டிருப்பது போல் தெரிகிறது.

எரிபொருள் பற்றாக்குறையால் திண்டாடும் இலங்கை, அதை நிவர்த்தி செய்வதற்கு இந்தியாவையே அதிகம் நம்பியிருக்கிறது. 2000 ஆம் ஆண்டிலிருந்து 2006 வரையான இரு தரப்பு வர்த்தகம், 2.8 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் அதிகளவு பங்கு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த எண்ணெய் வகிப்பதனை புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. கொழும்பு எரிசக்தி மையமாகவும் அம்பாந்தோட்டை கப்பல்களுக்கு எண்ணெய் நிரப்பும் மையமாகவும் இருப்பது இலங்கையின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்குமென்று சிங்கள அரசறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

ஆனாலும் இந்தியா மீதான சிங்களதேசத்தின் நம்பிக்கை குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறும்போது, ""இந்தியா எம்மை அச்சுறுத்தி வாழும் காலம் மலையேறி விட்டது'' எனக் குறிப்பிடுகின்றார். ஏலவே, இந்தியா சீன பொருண்மிய மற்றும் பிராந்திய ஆதிக்கப் போட்டியில், கொழும்பும், அம்பாந்தோட்டையும் ஆடுகள மையமாக மாறுமாவென்பதை ஜூன் 8 ஆம் திகதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

-இதயச்சந்திரன்

Comments