அவசரகால சட்டம் எனும் பித்தலாட்டம்; புலம்பெயர் மக்கள் என்ன செய்யவேண்டும்

இலங்கை அரசாங்கம் தனது புதிய சிங்கள பாராளுமன்றத்தினை நேற்று கூட்டி அவசரகால சட்டம் தொடர்வதனை நியாயப்படுத்தியது. அதற்கு இலங்கை பிரதமர் கூறிய காரணம் ஒன்று புலிகளின் இராணுவ பிரிவு ஒன்று இன்னமும் இயங்குவதாக கூறியமை.

அடுத்ததாக வெளி நாட்மைச்சர் கூறிய காரணம் புனர்வாழ்வுக்கழகம் போன்ற அமைப்புக்கள் இயங்குவது என்பதே ஆகும். இந்த இரண்டு நொண்டி சாட்டுக்களை கூறினால் சர்வதேசம் ஓரளவு ஏற்றுக்கொள்ளும் என்பதனாலா அல்லது எதிரணிகள் இந்த கருத்திற்கு எதிராக பேசமாட்டார்கள் என்பதனாலா?

அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தினை ஓர் இன ஒடுக்கல் கருவியாகவே பாவிக்கின்றது என்பதனை யாராலும் மறக்க முடியாது. தமிழர்களை ஒடுக்க அவசரகால சட்டம் எனும் ஆயுதமே சிங்களத்திற்கு உதவுகின்றது. நிரூபிக்கமுடியாத, மறைமுகமாக செய்யப்படும் அனைத்து தமிழ் விரோத செயற்பாடுகளிற்கும் ஆதாரம் இந்த அவசரகால சட்டமே. இதனை சர்வதேசம், ஐக்கிய நாடுகள் சபை ஆகியன ஏற்றுக்கொண்டுதான் வெளி நாடுகளுக்கு தப்பி வரும் தமிழர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்படுகின்றது.

இதனை புலம்பெயர் சட்டவாளர் ஒருவரே கூறியுள்ளார். தவிர அவசரகால சட்டத்தினை நீக்கவேண்டும் என பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் வாதாடிவருகின்றன. ஏன் போரை முடிவுக்கு கொண்டு வந்தவர் என கூறும் சிங்கள படைத்தளபதியே அவசரகால சட்டம் நீக்கப்படவேண்டும்; நாட்டிற்கு ஆபத்து இல்லை என கூறியுள்ளார்.

ஆகவே அவசரகால சட்டத்தினை நீக்காது வைத்திருப்பதற்கு காரணம் தமிழ் இனத்தை முற்றாக இலங்கை தீவில் இல்லாது செய்வதற்கே ஆகும். ஆனால் சர்வதேசத்தை மீண்டும் ஏமாற்ற புலிசாயம் பூசும் சிங்கள அரசின் கோணங்கி தனத்தை சர்வதேசம் புரியவேண்டும். புலம்பெயர் மக்கள் உறுதியாக அதற்காக வேலைகளைச் செய்யவேண்டும்.

அவசரகால சட்டத்தின் சில சரத்துக்கள் நீக்கப்பட்டமையினை இலங்கை அரசு பெரும் பறைசாற்றலுடன் செய்கின்றது. இந்த சரத்துக்கள் நீக்கப்பட்ட செயற்பாடுகள் வெளி நாட்டு அரசுகளுக்கும், முதலீட்டாளர்களுக்கும், சிங்களவர்களுக்கு மட்டுமே அன்றி அங்கு இருக்கும் தமிழ் மக்களுக்காக அல்ல என்பதனை எம்மவர் சார்பாக எடுத்துக்கூறவேண்டும்.

முற்று முழுதாக அவசரகால சட்ட நீக்கப்பட்டு, உயர் பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்பட்டு, அனைத்து தமிழ் மக்களும் மீழ் குடியேற்றம் செய்யப்பட்டு ஓர் சகச வாழ்வு வரும்வரை இலங்கைக்காகன் பொருளாதார ஆதரவுகளை வழங்க கூடாது என்பதனை புலம்பெயர் மக்கள் அந்தந்த நாடுகளுக்கு வலியுறுத்தி போராடவேண்டும். புலம்பெயர்மக்களிடன் அதற்காக சக்தியும் வலுவும் இன்னமும் உள்ளது.

குறிப்பு:- இதனை எழுதும் போது பக்கத்தில் இருந்தவர் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பியோடிவந்த ஓர் வயதான நாட்டு பற்றாளர். அவர் கூறினார் அவசரகால சட்டத்தினை நீக்கினால் நம்மள அனுப்பிவிடுவாங்கையா என்றார். ஆனால் நான் கேட்டேன் சட்டத்தை நீக்கினால் உங்கட மகனை வெளியில் எடுக்கலாம் இல்லையா என்றேன். அவர் சொன்னார் உதெல்லாம் சரிவராதையா பிள்ளைய விடமாட்டாங்கள் என்றார்.

நன்றி: ஈழநாதம்

Comments