இறுதி யுத்த களத்தில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டும்?


சிங்கள தேசத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புப் போரின் இறுதி நாட்களில் பலியானவர்கள் தொகை 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை என ஐ.நா. கண்க்குக் கூறியது. அந்த யுத்த களத்திற்கு மனித நேயப் பணியாளர்களும், ஊடகவியலாளர்களும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சுயாதீனமாகத் திரட்டப்பட்ட முடியாத நிலையில் வெளி வந்த தொகை 30,000 முதல் 50,000 வரை என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது வெளிவரும் தகவல்கள் இன அழிப்பின் உச்சத்தை உணர்த்துவதாக உள்ளது. வன்னிப் பிரதேசங்களில் மீள் குடியமர்ந்த பகுதிகளில் பல தெருக்கள் யாருமே இல்லாத நிலையே காணப்படுகின்றது. இவர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றே நம்பப்படுகின்றது. வன்னிப் பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் 50 வீதமான குடும்பங்களில் ஆண்கள் இல்லை எனத் தற்போது வன்னிக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வன்னிப் பெருநிலப் பகுதியில் வாழ்ந்த 360,000 மக்களில் வவுனியா வதை முகாம்களுக்குள் கொண்டு சென்று அடைக்கப்பட்டவர்கள் தொகை 290,000 பேர் அன சிங்கள அரச படைகள் அறிவித்தன. தற்போதும் இங்கே பாதிக்கும் சற்றுக் குறைவானவர்கள் தொடர்ந்தம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சென்று பார்வையிடுவதற்கு, யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு வருட காலத்தின் பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அங்கு பார்வையிடச் சென்ற அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இது, அந்த மக்களது அவலங்கள் வெளியே வருவதை விரும்பாத சிங்கள அரச தரப்பின் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கையாகவே நோக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்த களத்திலிருந்து மக்களோடு வெளியேறிய போராளிகள் வடிகட்டி அழைத்துச் செல்லப்பட்டதுடம், வவுனியா முகாம்களிலிருந்தும் ஏராளமான இளைஞர்கள், யுவதிகள் கடத்திச் செல்லப்பட்டனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை 30,000 இற்கும் மேல் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதும், 12,000 வரையிலான விடுதலைப் புலிகளே தம்மிடம் தடுப்புக் காவலில் உள்ளதாக சிங்கள அரசு தெரிவித்துள்ளது.

தற்போது சிறிலங்கா அரசு மீதான போர்க் குற்ற ஆதாரங்களாகத் தொடர்ந்தும் வெளிவரும் ஒளித் தட்டுக்களும், புகைப்படங்களும், சாட்சிப் பதிவுகளும் சிங்கள தேசத்தின் கொடிய யுத்த வன்முறைகளை வெளிக்கொணர்வதோடு, கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தையும் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மீள்குடியமர்வு என்ற பெயரில் வன்னியில் குடியேற்றப்பட்டு, தங்களது குடும்பங்களுடன் தங்கி வாழும் ஆண்களில் 30 வீதமானவர்கள் வலது குறைந்தவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது ஏற்பட்ட காயங்களினால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிங்கள தேசம் ஈழத் தமிழர்கள் மீதான அடக்கு முறையையும், இன வன்முறையையும் நிறுத்துவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஈழத் தமிழர்கள் தங்களது உறவுகளின் இழப்புக்களை எண்ணி அழுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். கண்களுக்கு முன்னால் சிதையுண்டு, எரியுண்டு போன தம் குடும்ப அங்கத்தினர்களைப் புதைக்கக் கூட அவகாசம் இல்லாமல் வெளியேறிய அந்த மக்கள் அந்த இடங்களுக்கு மீண்டும் செல்ல இப்போதைக்கு அனுமதி இல்லை என்று சிங்கள அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

மாவீரர் கல்லறைகளும், நினைவுத் தூபிகளும், தேசியத் தலைவர் அவர்களது வீட்டையும் கூட சிங்கள தேசம் சிதைத்துள்ளது. இலங்கையின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிக்க முடியாது என்று n1கலிய ரம்புக்வெல கொக்கரித்துள்ளார்.

திருந்தாத சிங்களத்துடன் இணைந்து வாழ்வது இனியும் சாத்தியமில்லை என்று அடுத்த தலைமுறை முடிவெடுக்கும்வரை நாம் அமைதி காக்கப் போகின்றோமா, அல்லது தற்போது உருவாகியுள்ள புலம்பெயர் களத்தை நிறைத்து எமது இறுதி இலட்சியத்தை இரத்தம் சிந்தாது வென்றெடுக்கப் போகின்றோமா? என்பதைப் புலம்பெயர் தமிழர்கள் முடிவு செய்ய வேண்டும்.

நன்றி: ஈழநாடு

Comments