இந்திய திரைப்பட விழாவை முற்றுமுழுதாகப் புறக்கணிப்பதற்கு தமிழக திரையுலகம் முடிவு

தமிழீழ மக்களை வகைதொகையின்றி கொன்றுகுவித்து நரபலி வேட்டையாடிய சிங்கள அரசின் முகத்தில் ஓங்கியறையும் வகையில் அனைத்துலக இந்திய திரைப்பட விழாவை முற்றுமுழுதாகப் புறக்கணிப்பதற்கு தமிழக திரையுலகம் முடிவு செய்துள்ளது.

அத்துடன், தமது ஆட்சேபனைகளை மீறி கொழும்பில் இடம்பெறும் அனைத்துலக இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் சகல இந்திய நடிகர் – நடிகைகளின் திரைப்படங்களும் தமிழகத்தில் திரையிடப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்றும் தமிழக திரையுலகத்தினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்புக்கு வருகை தந்து அனைத்துலக இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜனிகாந்த் அவர்களுக்கு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ச இரகசிய அழைப்பிதல் அனுப்பியிருந்த பொழுதும், அதனை நடிகர் ரஜனிகாந்த் அவர்கள் தூக்கியெறிந்திருப்பதோடு, இதேபோன்ற தீர்மானத்தை நடிகர் கமலஹாசன் உட்பட முன்னணி தமிழக திரையுலகத்தினர் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜூன் மாத ஆரம்பத்தில் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 11வது பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவை இடம் மாற்றவும், அதில் கலந்துகொள்ள வேண்டாம் எனவும் புலம்பெயர் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களும், தமிழ் மக்கள் சார்ந்த ஊடகங்களும் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய, சிறீலங்கா அரசுகள் விழாவை இடம் மாற்ற மறுத்தால், இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என்ற அழுத்தத்தை அது சம்பந்தப்பட்ட அனைவரும் தொடர்ச்சியாகக் கொடுக்கும் கடப்பாடு உள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலுள்ள பல அமைப்புக்கள் தாமாக முன்வந்து முக்கிய நடிகர்களது வீடுகளிற்கு முன்பாகப் போராட்டங்களை நடத்தி வருவதுடன், கலந்துகொள்ள வேண்டாம் என தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. இந்த அமைப்புக்களுடன் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களும், ஊடகங்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும்.

கொழும்பில் நடைபெறவுள்ள இந்த விழாவிற்கு 9 மில்லியன் அமெரிக்க டொலரைச் செலவழித்து, 126 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடாகவும், வேறு வழிகளிலும் இலாபமாகப் பெறுவதற்கு சிறீலங்கா அரசு கணக்கிட்டுள்ளது.

இந்த விழாவை 110 நாடுகளிலுள்ள 600 மில்லியன் மக்கள் பார்வையிட இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளதால், அதன் மூலம் தனது சுற்றுலாப் பயணத்துறையை விரிவாக்கி இலவச விளம்பரம் மூலம் பாரிய வருவாயை ஈட்டவும் சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ் மக்களின் உணர்வை மதிக்கும் வகையில் இந்த விழாவில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்துள்ள தமிழ் திரையுலகினருக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் அமைப்புக்கள் தமது நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த கீழுள்ள அமைப்புக்கள் தாம் இந்த விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளன.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
சின்னத்திரைக் கலைஞர்கள் சங்கம்
தென்னிந்திய திரைப்படப் பத்திரிகைத் தொடர்பாடல் சங்கம்

மேற்கண்ட அமைப்புக்கள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை இணைக்கப்பட்டுள்ளதுடன், அதில் கையொப்பம் இட்டுள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் வி.சி. குகநாதன், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலர் ராதாரவி, மற்றும் சரத்குமார், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ராம நாராயணன் ஆகியோருக்கும், மேற்கண்ட அமைப்புகளிற்கும் நன்றி தெரிவிக்கும் கடப்பாடு உண்டு எனவும் கூறப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் இனவழிப்புத் தாக்குதல் உச்சக்கட்டத்தில் இருந்தபோது தமிழ் திரையுலகம் மாபெரும் பேரணி, மனித சங்கிலிப் போராட்டம், உண்ணாநிலைப் போராட்டம் என்பவற்றை நடத்தியிருந்தமை இங்கு மீள் நினைவில் கொள்ளத்தக்கது.

Comments