இறுதியுத்த நடவடிக்கையில், இந்திய இராணுவத் தளபதி களமுனையில் நின்றார்-இந்திய நிருபர்

சென்ற ஒரு வருடத்துக்கு முன்னர், இலங்கையில் நடந்த இனப்படுகொலை யுத்தத்தில், இந்தியாவின் பங்கு மிகுதியாக இருந்தது எனவும், இராணுவ உதவிகள் வழங்கப்பட்டன எனவும், பல இடங்களிலும், பலராலும், தெரிவிக்கபட்டிருக்கிறது. அந்த இறுதியுத்த நடவடிக்கையில், இந்திய இராணுவத்தளபதியே நேரில் பங்கு கொண்டிருந்த செய்தி தற்போது, செய்தியாளர் ஒருவரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக 'ஈழநேசன்' இணையத்தளத்தின் செய்திக்குறிப்பும், செய்தி மூலத்துக்கான இணைப்பையும், அந்தத் தளங்களுக்கான நன்றிகளுடன் இங்கே பதிவு செய்கின்றோம். -4tamilmedia Team.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரில் சிறீலங்கா இராணுவத்தினருக்கு இந்தியப்படைகள் களத்தில் நின்று கட்டளைகளையும் நெறிப்பபடுத்தல்களையும் வழங்கியமைக்கு தகுந்த சாட்சியாக இந்திய ஊடகவியலாளர் நிக்கில் கோக்கலே தனது அனுபவப்பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வன்னியில் இந்திய படைகளும் ஆயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்டமைக்கு ஆதாரமாக இந்திய இராணுவத்தின் தளபதிகளில் ஒருவரான ஜெனரல் தீபக் கபூர் அங்கு களமுனை பணிகளில் ஈடுபட்டிருந்தமை நிக்கல் கோக்கலேயின் பத்தியொன்றில் வெளியாகியிருக்கின்றது.

போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த கடந்த மே மாத நடுப்பகுதியில் வன்னிப்பகுதி நேரடியாக சென்று செய்தி சேகரித்தவர் என்ற வகையில் அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ள இந்தியாவிலன் புதுடில்லி தொலைக்காட்சியின் பாதுகாப்புத்துறை நிருபரும் முன்னாள் அவுட் லுக் சஞ்சிகை நிருபருமான நிக்கல் கோக்கலே தனது பத்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:-

விடுதலைப்புலிகளுக்கு எதிராக போர் இவ்வாறான ஒரு முடிவைக்கிட்டும் என்றும் எதிர்பார்த்திராத பலரில் ஒருவராக நானும் இந்தியாவிலேயே இருந்து செய்திகளை அவதானித்துக்கொண்டிருந்தேன். ஆனால், போர் முடிவடைந்துவிட்டது. பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று சிறிலங்காவிலிருந்து தொடர்ச்சியாக கிடைத்த தகவல்களை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்ற தொடர் குழப்பநிலை இருந்துகொண்டே இருந்தது. இறுதியில் சிறீலங்காவுக்கு செல்வது என்ற முடிவுடன் எனது ஒளிப்பதிவாளர் தனபாலுடன் கொழும்புக்கு சென்றேன.

அங்கு சென்று பொன்சேகா, கோத்தபாய உட்பட பலரை செவ்வி கண்டேன். பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இடத்துக்கும் சென்று செய்தி சேகரித்தேன்.

இதன்பின்னர், மே 22 ஆம் திகதியும் அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் பல கேள்விகளை கேட்டேன். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறதே? எவ்வாறு அவர் கொல்லப்பட்டார். என்பது உட்பட பல கேள்விகளை தொடுத்தேன்.

அதற்கு பொன்சேகா, "உங்களது நாட்டு இராணுவ தளபதிதான் களமுனையில் நின்றார். எங்களது இராணுவ வெற்றியை பாராட்டினார்" - என்று பதிலளித்தார். அதற்கு நான் " ஆம். ஜெனரல் தீபக் கபூர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சீறிலங்காவின் இராணுவ நடவடிக்கையில் விசேட கவனம் செலுத்திவந்தார் என்பது எனக்கு தெரியும்" - என்றேன். அதற்கு பொன்சேகா " என்ன...தீபக் கபூரை உங்களுக்கு தெரியுமா" என்றார். அப்போது பொன்சேகாவுடன் கூடவிருந்த சிறிலங்கா இராணுவத்தின் அப்போதைய பேச்சாளர் பிரிகேடியர் உதய நாயணக்கார " இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பான நிருபராக நிக்கின் பல ஆண்டுகளாக பணிபுரிந்துவருகிறார்" என்று பொன்சேகாவுக்கு விளக்கினார்.

- இவ்வாறு அவர் தனது பத்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய இராணுவத்தில் 43 வருடங்களாக பணியாற்றிய ஜெனரல் தீபக் கபூர் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பத்தியினை முழுமையாக வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும்

http://news.rediff.com/column/2010/may/12/nitin-gokhale-on-the-lttes-defeat.htm

Comments