கே.பி. குழுவா? தமிழ் மக்களா?

தமிழீழ மக்களின் சாபக்கேடாகத் தொடரும் அதிகாரப் போட்டியும், காட்டிக் கொடுத்தல்களும், பிளவு வாதங்களும் பிரான்ஸ் மண்ணிலும் இன்றுவரை தொடர்ந்தே வருகின்றது.

இறுதி யுத்த காலத்தில் ஓரணியில் திரண்டு, தாயகத்தின் அவலங்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் மக்களைப் பிளவு படுத்தித் தங்களது இருப்புக்களைத் தக்க வைப்பதற்கான சதி முயற்சிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ்த் தேசியத்திற்கான போர்க் களத்தை பிளவு படுத்த இவர்களால் மேற்கொள்ளப்படும் இந்தச் சதிகளின் பின்னால் சிங்கள அரசு இருக்கலாமோ என்ற சந்தேகமும் வலுவடைந்து வருகின்றது.

‘நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற போர்க் களத்தைத் தம்வசம் வைத்துக் கொள்வதன் மூலம் தமது நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றும் முடிவில், பிரான்சில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஒரு பொய்யான குற்றச்சாட்டின் மூலம் மக்கள் தீர்ப்பை மாற்றி அமைக்கும் முயற்சியில் இந்தப் பிளவு வாதிகள் விடாப் பிடியாக உள்ளார்கள். இது, பிரான்சில் வாழும் தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கி வருகின்றது.

ஆனாலும், அவர்களது இரு துருவவாத நிலைப்பாடு மாறுவதற்கான அறிகுறி இன்றுவரை காணப்படவில்லை. பிரான்சில் என்னதான் நடக்கின்றது? நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் நடாத்தும் முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து. அதில் மக்கள் பேரவையினர் பங்குபற்றக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே அதனை நடாத்துவதற்காக திரு. கே.பி. அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவினர் இருந்தனர்.

2007 ஏப்ரல் 1 ஆம் திகதி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னர், தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியிருந்த அச்ச நிலையையும், வெற்றிடத்தையும் போக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்த் தேசியவாதிகளுக்கு உருவாகியிருந்தது.

ஆனாலும், பல வருடங்கள் தேசியத் தலைவர் அவர்களால் பொறுப்பு வழங்கப்பட்ட நீண்ட கால மாவீரத் தலைவர்கள் பலர் காவல்துறையின் பார்வை தங்கள் பக்கமும் திரும்பி விடுமோ என்ற அச்சத்துடன் ஒடி ஒழிந்து கொள்ள, சமூக அக்கறை கொண்ட தமிழ்த் தேசியவாதிகளால் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கையேற்கப்பட்டது. அன்றிலிருந்து, பிரான்சில் இடம்பெற்ற அத்தனை எழுச்சி நிகழ்ச்சிகளையும், போராட்டங்களையும் இவர்களே முன்நின்று நடாத்தி வருகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது, நாங்களும் புலிகளே என்று வீராவேசத்துடன் புலம்பெயர் நாடுகளின் வீதிகளில் தமிழ் மக்கள் போராட்டங்கள் நடாத்தியபோது, பிரான்சிலும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் அதன் உப அமைப்புக்களும் தொடர் போராட்டங்களை நடாத்தின.

இந்த நிலையில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள், சட்டத்தின் பிடியில் சிக்கியிருந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, அதன் உப அமைப்புக்களுக்கு இணையாக ஜனநாயக கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து ஆராயப்பட்டது.

அதிலிருந்து ‘மக்கள் பேரவை' பிரான்சில் உருவாக்கம் பெற்றது. இது காலா காலமாக பிரான்ஸ் மண்ணில் செயல்பட்டு வந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, விடுதலைப் புலிகளின் பிரஞ்சுக் கிளை ஆகியவற்றின் முழுமையான அங்கீகரிப்புடனேயே உருவாக்கப்பட்டது.

இதே கால கட்டத்தில், புலம்பெயர்ந்த நாடுகள் எங்கும் இதே காரணத்தோடு மக்கள் பேரவைகள் உருவாக்கம் பெற்றன. கடந்த வருடம் எங்கள் தேசத்தில் நடைபெற்ற மனிதப் பேரவலம் பற்றிய போர்க் குற்றங்களை சர்வதேச நீதி விசாரணைக்குட்படுத்துவது, எங்கள் தேசத்து மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான உலக நாடுகளின் அங்கீகாரத்தைப் பெறுதல், அந்த மக்களுக்கான அனைத்துலக உதவிகள் அந்த மக்களுக்கே சென்றடைவதை உறுதிப்படுத்தல் போன்ற அத்தனை தளங்களிலும் மக்கள் பேரவைகளே இன்று வரை செயல்படுவதால், மக்களிடமிருந்து மக்கள் பேரவைகளை வேறுபடுத்துவது முடியாத காரியமாகவே உள்ளது.

இதனால், மக்கள் பேரவையினரை இணைக்காத நாடு கடந்த தமிழீழ அரசு என்பது சாத்தியமே இல்லாத நிலையே காணப்பட்டது. இந்த நிலை குறித்து நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இணைப்பாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்களுக்கு உணர்த்தப்பட்டதனால், நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் மக்கள் பேரவையும் பங்கு பற்றுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இப்படி நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்ற கே.பி. குழுவினர் எடுத்த அத்தனை முயற்சியும் மக்களால் தோற்கடிக்கப்பட்டது. நான்கு தேர்தல் தொகுதிகளில் போட்டியின்றித் தெரிவுகள் இடம்பெற்றன.

அதில் இருவர் மக்கள் பேரவை சார்பானவர்கள். மிகுதியான, ஆறு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான நான்கு தேர்தல் தொகுதிகளில் மக்கள் பேரவை சார்பான மூவர் தெரிவு செய்யப்பட்டனர். இது இரு துருவ வாதத்தை நிராகரித்து பிரான்ஸ் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பு. இந்த முடிவுதான் கே.பி. குழுவினரது நோக்கத்தைத் தகர்ப்பதாக அமைந்தது. பிரான்சின் நாடு கடந்த தமிழீழ அரசைத் தமது கைப் பிடியினுள் வைத்திருக்க விரும்பிய இவர்கள் தேர்தலில் மோசடி என்ற நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

இன்றுவரை இவர்களால் சுமத்தப்பட்ட தேர்தல் மோசடிக் குற்றச்சாட்டுகள் குறித்து, அந்த இரு தேர்தல் தொகுதிகளுக்கும் இவர்களால் நியமிக்கப்பட்டிருந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள், பொறுப்பாளர்கள், பணியாளர்கள், வேட்பாளர்கள் என யாரிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை. அந்தக் குற்றச்சாட்டு விபரம், விசாரணைகள் குறித்த எந்தத் தகவல்களும் யாருக்கும் அறியத்தரப்படவில்லை. இது ஒரு மோசமான முன்னுதாரணமாக உள்ளது. இது குறித்து பலரும் பல தடவைகள் திரு. உருத்திரகுமாரன் அவர்களுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.

குறைந்த பட்சம் இந்தத் தேர்தலில் ஒருவரையாவது நிராகரித்து, அதில் தமக்குச் சார்ந்த ஒருவரை நியமித்து, தங்களது அதிகாரத்தைத் தக்க வைக்கும் முயற்சி மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. நேர்மை தவறிய பிரஞ்சு தேர்தல் ஆணைக்குழுவை உடனடியாக நீக்கிவிட்டு, பொது அமைப்புக்கள் சார்பான புதியவர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில், மகிந்த போல் நாட்களைக் கடத்தும் தந்திரோபாயத்தையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தமிழ் மக்களை இரு துருவப்படுத்தி, பலவீனப்படுத்தும் சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட நிகழ்வாகவே தமிழ் மக்களால் கருதப்படுகின்றது. இது தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற தமிழ் மக்களது எழுச்சிக்கு விரோதமான நடவடிக்கை என்பதே தமிழ் உணர்வாளர்களின் முடிவாகவும் உள்ளது. திரு. உருத்திரகுமாரன் அவர்கள் வேகமாகவும், விவேகமாகவும் முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளார்.

கே.பி. குழுவினரா? தமிழ் மக்களா? என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும். அவரது தாமதமான முடிவுகள் போர்க் களத்தின் திசையை மாற்றிவிடும் அபாயம் உள்ளதை மறுத்துவிட முடியாது. புலம்பெயர் தேசத்துப் போர்க் களமும் இன்னொரு முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெயக் கூடாது என்பதே தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் அவாவாக உள்ளது.

- அகத்தியன்

Comments