சோனியா, மன்மோகனும் யுத்தக் குற்றவாளிகளே – தோழர் தியாகு

ஈழத்தில் போர் நிறுத்தம் கோரிய தமிழகப் போராட்டங்களை கடுமையாக அடக்கி ஒடுக்கியது ஆளும் கருணாநிதி அரசு. அரசின் அடக்குமுறையை சந்தித்து எழுச்சியை ஏற்படுத்துவதற்குப் பதில் சந்தர்ப்பவாத அரசியல் சகதியில் சிக்கியது தமிழக ஈழ ஆதரவுத் தளம். விளைவு நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், திமுக கூட்டணி வென்றது. துயரமான ஈழப் போர் முடிந்து ஒரு வருடம் ஆகப் போகிற நிலையில் தமிழக அரசியல் சக்திகளிடம் அமைதி. தமிழ் தமிழர் இயக்கத் தலைவர் தோழர் தியாகுவோ தமிழக கிராமங்கள் எங்கும் நடைபயணமாகச் சென்று மக்களைச் சந்தித்து வந்திருக்கிறார். மக்கள் உணர்வுகளை அவர்களின் பிரச்சனைகளை அறிந்து வந்திருப்பவரை ஆதவன் ஏப்ரல் இதழுக்காகச் சந்தித்தோம்…….

போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய தமிழக எழுச்சி ஏன் வீணானது?

பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்னும் பெயரில் போரில் ஈடுபடாத வயோதிகர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையுமே பாதுகாப்பு வலையம் என்று அறிவித்து அங்கே வரவழைத்துக் கொன்றார்கள். ஹிரோஷிமா மனிதப் பேரழிவுக்குப் பின்னர் நடந்த மாபெரும் மனிதக் கொலை இதுதான்.சேனல் 4 போன்ற ஊடகங்களும் இன்னும் சில ஊடகங்களும் இதை வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தது. இவளவு பெரிய மனித அழிவு மனிதக் கொலை நடந்தும் ஏன் நம்மால் அதை தடுத்து நிறுத்த முடியவில்லை. நடந்த முடிந்த பிறகும் அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உலகத்தை நம்மால் நெருக்க முடியவில்லை என்பதே யதார்த்தமான உண்மை. 2008 அக்டோபரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போர் நிறுத்தம் கேட்டு உண்ணாவிரதம் இருந்தது. அடுத்து சில நாட்களில் போரை நிறுத்த தந்தி கொடுக்குமாறு முதலமைச்சர் கருணாநிதி அறிவிக்கிறார். பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டம் . அடுத்தடுத்து தீர்மானங்கள் அதில் ஆறாவது தீர்மானமாம் மாநில அரசின் போர் நிறுத்தக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிடில் பதவி விலகுவது என்றது.ஆனால் இவைகளுக்கு எந்த பயனும் இல்லை.மனிதச் சங்கிலி நடந்த மறு நாள் இந்திய அதிகாரி சிவசங்கர மேனனும், ராஜபக்சேவும் வெளியிட்ட கூட்டறிக்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தொடர்ந்து நடத்த இந்தியா ஆயுதங்கள் வழங்கும் என்றிருந்தது. இலங்கையும் இந்தியாவும் கூட்டாளிகள் தமிழக மக்களும் ஈழ மக்களும் கூட்டாளிகள் இதுதான் இந்தப் போரின் தார்மீகமானதும் உறவு நிலையானதுமான உண்மை நிலை. போர் நிறுத்தம் கேட்ட நேரத்தில் சென்னைக்கு வந்தார் ப்ரணாப்முகர்ஜி வந்தவரிடம் கருணாநிதி எங்குமே போர் நிறுத்தம் கேட்டு கோரிக்கை வைக்கவில்லை. டில்லியில் இருந்து வந்தவர்தான் கருணாநிதியிடம் அரசுக்கு தர்மசங்கடம் உருவாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.இவரும் அதற்கு இணங்கினார் கடைசி வரை காங்கிரஸ் அரசுக்கு கருணாநிதி எந்த விதமான நெருக்கடியையும் கொடுக்கவில்லை. கருணாநிதி மட்டுமல்ல கிட்டத்தட்ட தேர்தல் அரசியல் பங்கெடுத்து பதவியைப் பங்கிட்ட எல்லா கட்சிகளுமே பதவி விலகுவதில் தயக்கம் காட்டினார்கள். தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் பதவி மோகத்தை அறிந்து கொண்ட காங்கிரஸ் அரசோ அதை லாவகமாக கையாண்டது எல்லா போராட்டங்களும் வீணடிக்கப்பட்டன. தமிழர்களுக்கான அரசியல் அதிகாரம் ஒன்று இல்லாமல் போனதால்தான் ஈழப் போராட்டத்தில் நாம் பின்னடைவைச் சந்தித்திருக்கிறோம்.

போர் முடிந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகப் போகும் நிலையில் கேள்விகள் உண்டா?

இப்போது நாம் எழுப்பும் கேள்விகள் என்னவென்றால் தமிழ் மக்கள் போராடினார்கள் உதாரணத்திற்கு வணிகர் சங்கங்கள் கடையடைப்பு செய்தார்கள், 16 இளைஞர்கள் தீக்குளித்தார்கள் முத்துக்குமார் தொடங்கி கட்சி சார்ந்தவர்கள் சாராதவர்கள் என இந்த தீக்குளிப்பு ஈழ மக்களுக்காக நடந்தது.இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது கூட இவ்வுளவு பேர் தீக்குளித்தது கிடையாது, அப்போது தீக்குளித்தவர்கள் அனைவருமே திமுகவினர்.இங்கு அப்படியல்ல எந்த கட்சிக்காகவும் அல்லாமல் எந்த தலைவருக்காவும் அல்லாமல் ஈழத்து மக்களுக்காக மட்டுமே தீக்குளித்தனர். சீர்காழி ரவிச்சந்திரன் காங்கிரஸ்காரர். அவர் எங்கள் கட்சியைச் சார்ந்தவரே அல்ல என்றார்கள் காங்கிரசார். திமுக வை சேர்ந்த 2 பேர் தீக்குளித்தனர், அவர்களுக்க்காக திமுக பெருமைப்பட்டுக்கொள்ளவே இல்லை. 60 வயது அமரேசன் என்பவர் தீக்குளித்தார். பெரும் குமுறலை அடக்கி வைத்து கரையில் அலையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதே அந்தக் கடலைப் போன்றது. துருப்பிடிக்காத இரும்புத்தூண்களால் சட்டப்பேரவை கட்டியிருக்கிறேன் என்கிறார் கருணாநிதி ஆனால் இனக்கொலையை நிறுத்தக் கோரி போட்ட தீர்மானங்கள் துருப்பிடித்துக் கிடக்கிறதே? அப்படியானால் தமிழர்களுக்கு என்னதான் இந்தியாவில் அதிகாரம் இருக்கிறது. தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவில் இருந்து நாம் விடுதலை பெற வேண்டும் என்பதைத்தான் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் எனது கேள்வியும் கூட

தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் சென்ற அனுபவம் எப்படி இருந்தது?

ஈழத்திற்கு ஆதரவான பெரும் கொந்தளிப்பு தமிழகத்தில் இருந்தும் ஏன் நம்மால் சாதிக்க முடியவில்லை, காவிரி முல்லை அணை உரிமையும் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்பதோடு மக்கள் என்னவிதமான பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் என்பதையும் அவர்களைத் தேடிச் சென்று அறிந்து கொள்ளும் சுயவிமர்சன நோக்கிலேயே தமிழின மீட்பு நெடும்பயணத்தைத் துவங்கினோம். அரசியலில் தொடர்பில்லாத பலரை நான் பல ஊர்களில் சந்தித்துவிட்டேன். அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் ஆதரித்தது இல்லை ஆனால் இந்த இன அழிப்பு செய்தியை கேள்விபட்ட போது எல்லோரும் பாதிக்கப்பட்டு கலங்கிப் போனார்கள் என்பது உண்மை.இரண்டாவது செய்தி என்னவென்றால், ஈழத்தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென்றால் நமக்கான ஒரு அரசு இருந்திருக்க வேண்டும் அது இல்லாவிட்டாலும் அதை நோக்கி ஒரு வலுவான இயக்கத்தை மக்கள் சார்ந்து கட்டமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் தேசிய இயக்கத்தை வலுவாக உருவாக்க ஈழப் பிரச்சனை மட்டும் போதாது, இங்குள்ள மக்களின் பிரச்சனைகளையும் எடுது களம் காண வேண்டும்.

இன்றைய மறு காலனியாதிக்கச் சூழலில் மக்கள் சந்திக்கும் பிரச்சனை எப்படி உள்ளது?

முல்லை அணையில் நீர் தரமறுக்கிறது கேரளம் ஐந்து மாவட்ட விவசாயிகள் அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். காவிரிப் பிரச்சனையால் திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிப்படைகின்றன. நீர் உரிமை மறுப்பு காரணமாக விவசாயம் என்னும் ஜீவாதாரத்தை மக்கள் இழந்து விட்டார்கள். அவர்கள் வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வறுமை, மிரட்டும் விலைவாசி, மின் தட்டுப்பாடு என கடுமையாக கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களின் பிரச்சனைகளை அவர்கள் உணரமுடியாத அளவுக்கு எங்கும் சாராயம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. வீதிக்கு வீதி திறந்து வைத்துள்ள டாஸ்மாக் கடைகளைத்தான் இந்த அரசு அவர்களின் பிரச்சனைகளுக்காக பரிசளித்திருக்கிறது. இப்படியேச் சென்றால் ஈழ மக்களையும் நம்மால் காப்பாற்ற முடியாது என்பதோடு நாமும் அழிந்து போவோம் என்பதுதான் உண்மை. தமிழர்களின் உரிமைகளை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவதால் எதுவும் ஆகப் போவதில்லை. கருணாநிதி போய் ஜெயலலிதா வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதும் வீண் வேலை.

தமிழர்கள் என்பதால்தான் தமிழக தமிழன் பாதிக்கப்படுகிறாரானா?

ஆமாம் தமிழன் என்பதாலேயே ராமேஸ்வரத்தின் மீனவனை சுட்டுக்கொல்கிறான் சிங்களவன். தமிழர்கள் என்பதால்தான் அதை தட்டுக் கேட்டுத் தடுக்க முயலவில்லை இந்திய அரசு. சென்னையில் கூட நெல்லூர் அரிசிதான் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுக்க ஆந்திரப் பொன்னிதான் கிடைக்கிறது. தமிழ் மக்கள் விளைவிக்கும் நெல்லை முழு அளவில் அரசு வாங்குவதில்லை. நுகர்பொருள் வாணிபக் கழகம் என்னும் அரசு நிறுவனம் கர்நாடக விவாசாயிகளிடமும் ஆந்திர விவாசாயிகளிடம் இருந்தும்தான் அரிசி வாங்குகிறது. தமிழனின் நிலங்கள் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்பட்டு விட்டன. தமிழன் எல்லா வகையிலும் தோற்று விட்டான். தோற்றுக் கொண்டிருக்கிறான். இதனடிப்படையில் எங்களின் பயணம் ஏராளமான விஷயங்களை எங்களுகுக் கற்றுக் கொடுத்தது. தமிழ் மக்களுக்கான சுயத்தை மீட்காமல் தமிழர்கள் இனி வெல்ல முடியாது.

ஈழத்தில் இனக்கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் சூழல் உருவாகுமா?

யூத மக்கள் கொலை நடந்து எவளவோ ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் யூதர்களைக் கொன்ற இனக்கொலை குற்றவாளிகள் வயதான கிழவர்களாக இருந்தாலும் இன்றும் தேடிக் கொண்டு வந்து தண்டிக்கிறார்கள். அது போல தமிழ் மக்கள் இனக்கொலை குற்றவாளிகளை மன்னிப்பதில்லை என்ற உறுதி ஏற்க வேண்டும். ராஜபட்சே குடும்பம், பொன்சேகா மட்டுமல்ல சோனியாகாந்தி, மன்மோகனும் இனக்கொலை குற்றவாளிகளே, இவர்களையும் மன்னிக்க மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டுமே தவிற இந்தியாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிக் கெஞ்சுவதைத் தவிற வேறு வழியில்லை என்றால் பேசாமல் ராஜபட்சேவிடமே ”எங்களுக்கு ஏதாவது பார்த்துச் செய்யுங்கள்” என்று கெஞ்சலாமே. சுதந்திரத் தமிழீழமே இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது எங்களின் நிலைப்பாடு. இனக்கொலையாளிகளை தண்டிக்கும் சூழல் சர்வதேச அளவில் உருவாகி வருகிறது. இதை தமிழினம் சரியாகப் பயன்படுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி: ஆதவன்

Comments