பிரித்தானியத் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது?

பிரித்தானிய பொதுத் தேர்தல், மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என்பன நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், யாருக்கு வாக்களிப்பது என்ற விவாத நிலை தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் தோன்றியுள்ளது.

பிரித்தானியாவில் வாழும் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் பொதுநலவாயப் பிரசைகள் என்ற அடிப்படையில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதால், தமிழ் மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.

பிரித்தானியத் தமிழர்களில் ஒரு சிலர் கட்சி சார்ந்தவர்களாக இருப்பினும், பெரும்பான்மையான தமிழ் மக்கள் தமது விடுதலையையும், அதற்கான ஆதரவையும், பன்னாட்டு அரசியல் அரங்கில் தமது விடுதலைக்கான பிரித்தானிய அரசியல்வாதிகளின் செயற்பாடுகளையும் அடிப்படையாக வைத்தே தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் பலம்பொருந்திய போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில், பிரித்தானியத் தமிழ் மக்களின் வாக்குகளைக் குறிவைத்து அரசியல்வாதிகள் தேர்தலில் களமிறங்கி இருப்பதுடன், தமிழ் மக்கள் விடயத்தில் வழமையான வாக்குறுதிகளையும், சாதனைகளையும் பட்டியலிட்டு வருகின்றனர்.

பிரித்தானியவாழ் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் இரண்டு முக்கிய விடயங்களைக் கவனத்தில் எடுப்பதாகக் கணிப்பிடலாம். அதில் முதலாவது தமது விடுதலைப் பயணத்திற்கு துணை நிற்பவர்கள், அல்லது நண்பர்கள். அடுத்தது, பிரித்தானியாவில் அகதித்த தஞ்சம் கோரியுள்ளவர்களின் விண்ணப்பங்களை சாதமாகப் பரிசீலனை செய்பவர்கள்.

இதில் இரண்டாவதாகவுள்ள அகதித் தஞ்சம் கோரும் விடயத்தில் நீதித்துறையும் இணைந்து இருப்பதால், அரசில் மட்டும் தங்கியிருக்கும் ஒரு விடயம் அல்ல ஆயினும், விண்ணப்பங்களை ஏற்பது பற்றி அரசாங்கமே முடிவு செய்து வருவதால், அது ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இருப்பினும், தமிழ் மக்கள் தாம் விரும்பும் தீர்வு கிடைக்கும் பட்சத்தில், தமது சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட்டால், அகதித் தஞ்சம் கோரும் தேவை இருக்காது என்ற அடிப்படையிலும், தமிழ் மக்கள் தமது விடுதலைக்காகக் கொடுத்துள்ள உயரிய ஈகத்தின் அடிப்படையிலும் முதலாவது விடயம் முக்கிய இடம்பெறுகின்றது.

தமிழ் மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து, அவர்களின் நண்பர்களாக இருந்து, தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், விடுதலையின் நியாயத் தன்மையை தமது அரசுக்கும், பன்னாட்டு அரசுகளுக்கும் எடுத்துரைக்கும் பணியைச் செய்பவர்கள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, “கட்சி அடிப்படையில் தமது ஆதரவை நல்குவதை தமிழ் மக்கள் தவிர்க்க வேண்டும்” என்ற வலுவான கருத்தே நிலவுகின்றது.

இதனை தெளிவாக்கும் வகையிலேயே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடு கடந்த அரசு, மற்றும் பிரித்தானியத் தேர்தல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த “பிரித்தானியத் தமிழர் பேரவை”, தமிழ் மக்கள் கட்சி அடிப்படையில் வாக்களிக்காது, தமது நண்பர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

நண்பர்கள் என்று இங்கு குறிக்கப்படுபவர்கள், தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுப்பவர்கள். அவர்கள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கின்றார்கள். ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கும்போது நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், அது தமிழ் மக்களிற்கு பாதகமாக அமையும். எனவே எந்தெந்த தொகுதியில் யார் யார் தமிழ் மக்களிற்கு ஆதரவாகச் செயற்படுகின்றார்களோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

ஆளும் கட்சியில் இருந்துதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குக் குரல் கொடுக்க வேண்டும் என்றில்லை. எதிர்க்கட்சியில் இருந்தும் குரல் கொடுக்கலாம். ஆனால் ஆளும் கட்சியில் இருக்கும்போது அது சற்று வலுவானதாகக் காணப்படுகின்றது. அதற்காக ஆளும் கட்சி எதிர்க்கட்சியாக வரும் என்ற நிலை காணப்பட்டாலும், எதிர்க்கட்சி ஆளும் கட்சியாக வந்தாலும், அந்த கட்சியில் இருந்து எமக்காகப் பணியாற்றிய நண்பர்களை நாம் மறந்துவிடலாகாது.

எதிர்க்கட்சியான கொன்சவேடிவ் கட்சியே அடுத்த ஆட்சியைக் கைப்பற்றும் என்று எதிர்வுகூறப்பட்டு வருகின்ற போதிலும், இதுவரை ஆளும் கட்சியில் இருந்து தமிழ் மக்களின் நண்பர்களாகத் திகழ்ந்த பலரை தமிழ் மக்கள் மறந்துவிட்டு, நன்றியற்ற இனமாக இருந்துவிடலாகாது.

குறிப்பாக கீத் வாஸ், விரேந்திர சர்மா, சிபோன் மக்டொனா அம்மையார், ஜோன் றையன் அம்மையார், சதீக் கான், டோன் பட்லர் போன்ற பலரைக் குறிப்பிடலாம். இதேபோன்று கொன்சவேட்டிவ் கட்சிக்குள் லீ ஸ்கொட், றேச்சல் ஜோய்ஸ், அன்றூ சரலம்பவுஸ் போன்ற பலரைக் குறிப்பிடலாம்.

இரண்டு பிரதான கட்சிகள் மட்டுமன்றி, மூன்றாவது பெருங்கட்சியான லிப் டெம் (லிபரல் டெமோக்கிறட்) கட்சியைச் சேர்ந்த எட் டேவி, சைமன் கியூஸ், சூசன் கிறமா போன்றவர்கள் நாடாளுமன்றிலும், அதற்கு வெளியேயும் தமிழ் மக்களிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இவர்கள் மட்டுமன்றி குறொய்டன் பகுதி போன்று சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

அதேநேரத்தில் ஆளும் தொழிற் கட்சியில் இருந்த ஒரு சிலர் தமிழ் மக்கள் விடயத்தில் சிறப்பாகச் செயற்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. கரத் தோமஸ், ஸ் ரீபன் ரிம்ஸ் போன்றவர்களை இந்தப் பட்டிலிற்குள் அடக்கலாம்.

இதனாலேயே ஹறோ மேற்குப் பகுதியில் கரத் தோமசை எதிர்த்துப் போட்டியிடும் கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த டொக்ரர் றேச்சல் ஜோய்ஸ் அம்மையாரை ஆதரிக்கும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதே நிலை இல்போர்ட் வடக்கு மற்றும் தெற்கிலும் காணப்படுகின்றது.

இவற்றைவிட பல புதிய வேட்பாளர்களும் தமிழ் மக்களிற்கு ஆதரவாகக் களமிறங்கி இருப்பது புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்களின் விடுதலைப் பயணித்திற்குப் பலம் சேர்க்கும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் தலைமை உன்னத ஈகத்துடன் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்திற்கு புலம்பெயர்ந்த மக்கள் தமது பணியை செவ்வனே செய்து வந்திருக்கின்றார்கள். இந்தப் பணியை தொடர்ந்து முன்னெடுக்கவும், மாவீர்களின் கனவை நனவாக்கி, தமிழ் மக்களிற்கான விடுதலையைப் பெற்றுக்கொள்வதற்கும் தமிழ் மக்கள் இன்னும் கடின பாதையில் ஓர்மத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.

இந்தப் பயணத்தின் ஒரு கட்டமாக எதிர்நோக்கப்படும் பிரித்தானியத் தேர்தலில் தவறாது வாக்களிப்பது தமிழ் மக்களின் முக்கிய கடமையாகும். அப்போதுதான் தமிழ் மக்கள் பிரித்தானியாவில் தமது அரசியல் பலத்தை நிரூபிக்க முடியும்.

அத்துடன், கட்சி அடிப்படையில் சிந்திக்காது, தமிழ் மக்கள் தமது “நண்பர்களைத் தெரிவு செய்ய வேண்டியது” அதைவிட மிக மிக முக்கிய விடயமாகும். இதன் அடிப்படையிலேயே “போர்க்குற்ற விசாரணை” உட்பட விடுதலை நோக்கிய அடுத்த கட்டத்திற்குள் புலம்பெயர் தமிழ் மக்கள்

Comments