இதோ இன்றுடன் ஒரு வருடமும் ஆகின்றது. இனிவரப்போகும் காலம் முழுவதும் இப்படியே அழுது புலம்பிக்கொண்டு இருக்கப்போகின்றோமா அல்லது அந்தத்துயரங்களையே பாடங்களாகக் கொண்டு எழுச்சிகொள்ளப் போகின்றோமா?
இந்த மே18ம் திகதிக்கான எமது பிரகடனம் எதுவாக இருக்கப்போகின்றது.
உலக விடுதலைப் போராட்டங்கள் எல்லாம் எப்போதாவது சந்தித்த அல்லது பின்தங்கிய ஒரு காலகட்டம் நமது காலத்தில் எமது விடுதலைப் போராட்டத்துக்கு நேர்ந்திருக்கிறது. இந்த நிலையை பின்வரும் நிலைகளில் பார்க்கலாம்
1.தமிழீழ விடுதலைப் போராட்டம் தனது பகிரங்கமான அனைத்து தளங்களையும் தமிழீழ மண்ணில் இழந்துள்ளது.
2.தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மையமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மெளனமாக பின்னகர்ந்து சென்றுள்ளது. (பலத்த இழப்புகளுடன்)
3.தமிழரின் பாரம்பரிய தாயகம் முழுவதும் சிங்கள பேரினவாதத்தின் இராணுவ காட்டு ஆட்சிக்குள் வந்துள்ளது.
இவை வெறுமனே மூன்று நிலைகள் அல்ல. இந்த மூன்று நிலைகளின் பின்னாலும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் உலக நாடுகளால் பிழையாக கற்பிதம் செய்துகொண்ட முறைமையும், இறைமையுள்ள ஒரு தேசம் உடையக்கூடாது என்ற சர்வதேச முரட்டுப் பிடிவாதமும் காரணங்களாக நிலைக்கின்றன.
இது ஒரு புறத்தில்,
இன்னொரு புறத்தில் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் பெரும்பாலான உலக தமிழர்கள் மத்தியிலும் இந்த மூன்று நிலைகளும் உருவானது அவர்களின் ஆன்மாவை கூறுபோட்டது போலவே இன்னமும் கருதப்படுகின்றது.
ஈழத்தமிழர்களிலும் புலம்பெயர் தமிழர்கள் இந்த நிலைக்கு எதிராக எழுதியும் பேசியும் கூடியும் அவை உருவாக்கியும் எதிர்வினைகளை காட்டக் கூடிய சூழலில் வாழ்கிறார்கள். ஆனால் தாயகத் தமிழர்கள் நடந்து முடிந்த வன்னி அவலங்களின் கோர நிகழ்வுகளால் சுருண்டுபோய் பேசும் உரிமைகூட இல்லாது ஏனோ நடந்து படுத்து வாழும் உயிரினங்களாக வாழ பழகி வருகிறார்கள். அல்லது அவ்வாறே வாழ நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள்.
இப்போது இருக்கும் இந்த உறை நிலையே இன்னும் தொடருமானால் எங்கள் எல்லோரையும் இணைக்கும் பொதுப்பண்பான ஒரே தேசிய இனத்தவர் என்ற உறவுமுறை இல்லாது போய்விடக்கூடிய பேரபாயம் நிகழும் சாத்தியம் வரக்கூடும்.
எங்களின் தாயகம் பொருளாதார ரீதியிலும் கலாச்சார ரீதியிலும், வாழ்விட ரீதியிலும் சிங்கள மயப்படுத்தப்படுமானால் அதன் பின்னர் தமிழீழ தேசிய இனம் என்பதை காணாமல் போனோர் பட்டியலில்தான் தேடவேண்டும். இதனை மாற்றி எமது தாயகத்தை மீட்கவேண்டுமானால் இந்தநாளில் நாம் அனைவரும்
போராடவேண்டும்!
போராடவேண்டும்!!
போராடவேண்டும்!!!
ஆம். ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் எமது மக்களின் நிரந்தரமான சுதந்திர வாழ்வுக்காகவும் எங்களின் மாவீரரின் இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காகவும் நாம் அனைவரும் ஏதோ ஒருவகையில் இனிமேல்த்தன்னும் போராட முன்வரவேண்டும்.
1.தற்காலிகமான உடனடித்தேவைகளுக்கான போராட்டங்கள்
2.சர்வதேசத்தை எமது தாயகஅவலங்கள் மீது கவனம்கொள்ளவைக்கும் போராட்டங்கள்.
3.சர்வதேசத்தை எமது சுயநிர்ணய உரிமையுடன்கூடிய விடுதலைப் போராட்டத்துக்கு அங்கீகாரம் கோரும் போராட்டங்கள்
4.எமது மக்களின் சமூக கலாச்சார சீரழிவுகளுக்கு எதிரான போராட்டங்கள்
5.சிங்கள ஆக்கிரமிப்பை எமது மண்ணில் இருந்து விரட்டும் போராட்டங்கள்.
இந்த மே18ல் தொடங்கி இடைவெளியற்று போராடினால் மிகவிரைவில் எமது விடுதலைக்கான விடிவெள்ளியை காணலாம்.
நாம் போராட எழுச்சிகொள்ளும்போது மௌனமாகி பின்நகர்ந்த எமது மண்ணின் மைந்தர்கள் புதிய பாய்ச்சலுடன் வருவார்கள்.
எனவே இன்று என்பது ஆரம்பம்.
மே18 என்பது வலியும் வேதனையும்சுமந்து அதனையே எமது வலிமையாக மாற்றி எழும் தினமாகட்டும்.
- சங்கதிக்காக அபிமன்யு
Comments