மாவீரர்களின் நினைவிடங்களை சிதைக்கும் சிங்கள இராணுவம் ! குமுறும் ஈழ தமிழர்கள்

மாவீரர்களின் நினைவிடங்களை சிதைக்கும் சிங்கள இராணுவம் ! குமுறும் ஈழ தமிழர்கள் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் வார இதழில் ஈழத்தின் இளங்கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிடுகிறார் மாவீர்களின் நினைவிடயங்களை சிதைப்பதை குறித்தும் அதனால் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படும் மனக் குமுறலை தொடர்ந்து தீபச்செல்வன் இப்படி விபரிக்கிறார். ஒரு போராளியை விதைக்கப்பட்டதாக உணரும் ஈழ மண்ணில் அவர் மரணமடைந்து போனதாக யாரும் எண்ணுவதில்லை. கனவுக்காக அவர் உறங்ககிக் கொண்டிருக்கிறார் என்றே வணங்கப்படுகிறார்.

ஈழ மக்களில் பெரும்பாலனவர்களின் பிள்ளைகள், சகோதரர்கள், தந்தைமார், தாய்மார், உறவுகள் என்று இப்படி முப்பதாயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் கனவுக்காக விதைக்கப்பட்டிருக்கிறார்கள். கனவு உறங்கும் அந்த இடங்கள் அல்லது கனவு உறைந்துபோன அந்த இடங்கள் உன்னதமான வணக்கத்திற்குரிய மரியாதைக்குரிய நிலமாக, நடப்பட்ட கற்காளாக, நினைவு தூபிகளாக பேணப்பட்டு வந்தன.

ஈழ மண்ணில் தமிழ் மக்களின் போராட்டம் சிதைக்கப்பட்டு பேராளிகள் அழிக்கப்பட்டும் முறியடிக்கப்பட்டும் உள்ள சூழலில் அரசு திட்டமிட்ட வகையில் மறைமுகமாகவும் மர்மமாகவும் அந்தக் கல்லறைகளை, நடு கற்களை, நினைவுத்தூபிக்ளை அழித்துக் கொண்டு வருகிறது. கனவின் வெற்றிகளும் தோல்விகளும் அழுகைகளும் இரத்தமும் கசதைத்துண்டங்களும் என்று நினைவுகள் தங்கியிருக்கும் ஈழப்போராட்டத்தின் தடயங்கள் அழித்தொழித்து காலத்தை மறைத்து அவற்றுக்கு எதிராக சிங்கள இராணுவத்தின் நினைவுத் தூபிகளை அரசாங்கப் படைகள் அமைத்து வருகின்றன.

ஈழப்போராட்த்தில் ஈடுபட்டமைக்காக தமிழ் மக்கள் மற்றும் போராளிகள் மிக்க கோராமாக கொல்லப்பட்டு அந்த குருதி காயுமுன்பே, காயம் ஆறு முன்பே பேராடி மடிந்த வீரர்கள் உறைந்த இடங்களை அரசு அழிக்கத் தொடங்கியது. எனது சகோதரன் ஒருவன் இந்தப் போராட்டத்தில் 2001 இல் முகமாலை மண்ணில் வீரமரணம் அடைந்தவன். அவன் கிளிநொச்சி முறிப்பு என்ற இடத்தில் இருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டு அவனது கல்லறை அமைக்கப்பட்டிருந்தது. முறிப்பு வீதி என்ற அந்தத் தெருவால் செல்லும் பொழுதெல்லாம் அவனின் தணியாத தாகம் இலட்சியம் கனவு உட்பட அவனது நினைவுகள் வந்து அங்கு என்னை கல்லறையடிக்கு இழுத்துச் செல்லும்.

அம்மா அந்தத் துயிலும் இல்லாத்தை ஒரு கோயிலாக வணங்குவாள். அருகருகாக அங்கு ஆயிரம் ஆயிரம் போராளிகள் விதைக்கப்பட்டிருந்தார்கள். இன்று அந்த துயிலும் இல்லம் சிதைந்து கற்குவியலாகவும் கல்மேடாகவும் அழிந்து கிடக்கிறது. பற்றை மூடி யாரும் உள்நுழைய அனுமதிக்கப்படாத இடமாயிருக்கிறது. இப்பொழுது அந்தத் தெருவால் செல்லும் பொழுது அடக்க முடியாத பெரு வலி ஏற்படுகின்றது. இறுதி யுத்தத்தின்பொழுது ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் இழந்து ஓடிய பொழுது அவனது புகைப்படத்தையும் விட்டு என் அம்மா ஓட நேரிட்டது.

அன்றுதான் நாங்கள் அந்த சகோதரனை இழந்ததாக உணர்ந்தோம். அந்த நாட்களிலேயே அவனது கல்லறையை இராணுவம் சிதைத்தது. அன்று தான் இராணுவம் அவனை கொன்றதாக நாங்கள் உணர்ந்தோம். இன்று அவனது புகைப்படத்தை – அவனது முகத்தை மீள எங்களால் பெற முடியாது அவனை இழந்ததாக தவித்து அவனது முகத்தை தேடிக் கொண்டிருக்கிறோம். இந்த இழப்பு மனதில் மிகுந்த வலியையும் தாக்கத்தையும் தருகின்றது.

இறுதியுத்தத்தின் பொழுது நிறைய மக்கள் தங்கள் வீரமரணடைந்த பிள்ளைகளின் புகைப்படங்களை கிழித்தும் புதைத்தும் அழித்தும் விட்டு இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள்.

சரணடைந்த போராளிகளில் பலரை மிக கோரமாக படைகள் கொன்றழித்தன. பெண்போராளிகளை புணர்ந்து அதை தங்கள் கையடக்க தொலைபேசிகளில் படம் பிடித்து இன்றும் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனர். இன்று தங்கள் பிள்ளைகள் பற்றிய எந்தக் குறிப்பும் அடையாளமும் இல்லமால் அவர்களை நினைவுகளில் சுமந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களைப் பெற்ற தாய்மார்கள். முகாமுக்கு முகாம் தங்கள் பிள்ளைகளை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பணத்தில் உள்ள தீலீபனின் நினைவுத் தூபியில் முதலில் அவரது புகைப்படம் பொருத்தப்பட்ட இடம் குடைந்து அழிக்கப்பட்டது.

இப்பொழுது அதை தரை மட்டமாக்கி கோபுரத்தை அகற்றி அந்த தூபி இருந்த இடத்தில் எந்த அடையாளத்தையும் இல்லாமல் செய்திருக்கிறார்கள். அது குடைந்து அழிக்கப்பட்டபொழுது அதைப் பார்த்து நெஞ்சு வலித்தது. இன்று அது தரைமட்டமாக்கப்பட்டபொழுது ஏற்பட்ட வலியை என்னால் விபரிக்க முடியாதளவில் இருக்கிறது. தீலிபன் கனவுக்காக பசியிருந்து தியாக மரணடைந்த உன்னதமான போராளி. குளிர்மையான இலட்சியம் கொண்ட அவன் ஒரு மலரைப்போன்ற மென்மை கொண்டவன். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம், கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லம், வவுனிக்குளம் மாவீரர் துயிலும் இல்லம், விசுவமடு மாவீரர் துயிலும் இல்லம், கிளிநொச்சி கனகபுரம், மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீர் துயிலும் இல்லம் உட்பட கிழக்கில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் முதல் வீழ்த்தவர்களால் நிரம்பியிருந்த நிலத்தில் பல துயிலும் இல்லங்களை இலங்கைப் படைகள் அழித்து விட்டன.

இதைவிட இன்னும் மக்கள் செல்ல அனுமதிப்படா இடங்களிலும் இப்படி சிதைத்திருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மிக வன்மமான முறையில் தங்கள் வக்கிர மனத்தை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இவற்றைப் படைகள் சிதைத்திருக்கின்றன.

போராளிகள் புதைக்பபட்ட அந்த நிலத்தை கிளறி மண்ணை ட்ரக்கில் அள்ளிச் சென்று வேறு இடங்களில் குவிக்கிறார்கள். மண் அணைகளை எழுப்பவும் கட்டிடங்களை அமைக்கவும் அவை பயன்படுத்தப்படுகிறது. படையினர் அப்படி ஏற்றிச் செல்லும் பொழுது இந்த மண்ணில் தலை முடிகளும், எலும்புத்துண்டுகளும், சீருடைகளும் தெரிகின்றன. இதைப் பார்த்துக் கொண்டிருந்த தாய் தன்னை தானே அடித்து அழுது கொண்டிருக்கிறாள். வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறாள்.

இப்படியான இழப்பையே இப்பொழுது நாங்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கனவுக்காக தம்மை தியாகம் செய்த போராளிகள் உறைந்த அந்த இடங்களை அழித்து விட்டு எங்கள் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் இராணுவத்தின் அதிகாரத்தனமான ஆக்கிரமிப்பை அதன் வெற்றியை திணிக்கும் பாரிய அளவிலான இராணுவ நினைவுத் தூபிகளை இலங்கைப் படைகள் அமைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனையிறவிலும் கிளிநொச்சி டிப்போ சந்தியிலும் பாரியளவிலாக தூபிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை எமது நிலத்தை ஆக்கிரமித்ததின் பெரும் அடையாளமாக நடப்பட்டுள்ளன.

போராடிய எமது மண்ணின் அடையாளத்தை அழித்து சிங்கள இராணுவ அடையாளத்தை திணித்திருக்கின்றன படைகள். ஆனையிறவு என்பது தமிழ் மக்களின் வரலற்றில் முக்கியமான தளமாயிருக்கிறது. பல்வேறு தியாகங்கள், முயற்சிகளின் மத்தியில் ஆனையிறவை போராளிகள் கைபற்றியிருந்தார்கள். ஒல்லாந்தர்கள், போர்த்துக்கேயர்கள், ஆங்கிலேயர்கள், சிங்களவர்கள் உட்பட பல அந்நியப்படைகளது படையெடுப்புகளை சந்தித்த அதேவேளை தமீழ விடுதலைப் புலிகளிப் போராளிகளின் வீரம் செறிந்த தாக்குதல்களினால் ஆனையிறவு மீட்கப்பட்டது. இன்று தமிழ் மக்களை அரசு வெற்றி கொண்டதன் நினைவாக ஆனையிறவில் இலங்கைப் படைகள் அந்தப் பாரிய தூபியை அமைத்திருக்கின்றனர்.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் போராளி லெப்டினன் கேணல் சந்திரன் நினைவாக குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட பூங்கா அமைந்திருந்த பகுதியில் ஈழப்போராட்டம் தகர்க்கப்பட்டதை சொல்லும் மற்றொரு தூபியை படைகள் அமைத்துள்ளன.

பாரிய சுவர் ஒன்றை பெரும் சன்னத்தால் தகர்த்து அதிலிருந்து ஒரு அல்லி மலர் மலரும் வடிவிலாக தமிழர்களின் நெஞ்சில் சன்னம் அறையும் வலி தரும்விதமாக அமைக்கப்ட்டிருக்கிறது. ஈழத் தமழர்களுக்கு பேரிழப்புக்களை ஏற்படுத்திய மே மாதம் மறக்க முடியாத நிளைவலைகளை எங்கள் மனங்களில் மீட்டுகின்ற சூழலில் சிங்களப்போர் வீரர் தினங்களை அறிவித்து, போராளிகளின் கல்லறைகள், நடு கற்கள்மீது படைகள் போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர். போராளிகளின் நினைவிடங்களை அழித்தும் படைகளின் தடயங்களை உருவாக்கியும், எமது மண்ணை அடிமைப்படுத்தியதன் வெற்றியை, கையகப்படுத்தியதன் அதிகாரத்தை, கனவு சிதைக்கப்பட்டதன் கோரத்தை, எமது நிலத்தில் எமது கண்களின் முன்பாக படைகள் நட்டு வைத்திருக்கின்றனர்.

இப்படி மாவீரர்களின் நினைவிடங்களை சிதைப்பதால் ஏற்படும் ஈழத்தமிழர்களின் குமுறலைக் குறிப்பிடும் தீபச்செல்வன் ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’, ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ ஆகிய கவிதை தொகுப்புகள் மூலம் தமிழ் இலங்கிய உலகிற்கு அறிமுகமாகிய இளஞ்கவிஞர். ‘தீபம்’ என்ற தனது வலைப்பதிவில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் ஈழம் குறித்து நிறைய எழுதி வருகிறார். யுத்த பூமியின் சாட்சியாக ஈழத்தில் இன்றும் வசித்து வருகிறார். குமுதம் உட்பட தமிழக சிற்றிதழ்கள் பலவற்றில் எழுதிவருகிறார்.

தீபச்செல்வன்

நன்றி : குமுதம் 02-06-2010

Comments