‘நாம் தமிழர்’ இயக்கம் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது.

மதுரை மண்ணிலிருந்து இன்னோர் அரசியல் கட்சி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. ஆம்! இயக்குநர் சீமானின் ‘நாம் தமிழர்’ இயக்கம் அரசியல் க ட்சியாக உருமாறியிருக்கிறது.

நடிகர் விஜயகாந்த் தனது கட்சியைத் தொடங்கிய இடம் மதுரை. சரத்குமார் தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்திய இடமும் மதுரை தான். அந்த வரிசையில் சீமான் இப்போது மதுரை விரகனூர் சுற்றுச்சாலையில், சரத்குமார் மாநாடு நடத்திய அதே இடத்தில் ‘நாம் தமிழர்’ இயக்க மாநாட்டை கடந்த 18.05.10 அன்று நடத்தியிருக் கிறார். ஈழத்தமிழர்கள் பெருமளவில் கடந்த ஆண்டு இதே தேதியில் கொல்லப்பட்டதை நினைவுகூரும் விதத்தில் இந்த நாள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது

.
முன்னதாக மாநாட்டு ஊர்வலம். அதில் பிரபாகரன் படம் ஒட்டப்பட்ட பதாகைகள் பவனி வந்தன. கூடவே பிரபாகரனை வாழ்த்தியும், கருணாநிதி, சோனியாவை விமர்சித்தும் கோஷங்களும் ஒலித்தன. அதுபோல மாநாட்டில் நடந்த இசை நிகழ்ச்சியிலும் இதேபோன்ற கிண்டல் பாடல்கள் இடம் பெற்றன. அங்கு நடந்த கலைநிகழ்ச்சி ஒன்றில் ராஜ பக்ஷேவை ஐ.நா. நீதிமன்றம் விசாரிப்பது போலவும், இங்குள்ள சில தலைவர்கள் போல வேடமணிந்த மூவர் தூக்கு மேடை முன் நிறுத்தப்படுவது போலவும் காட்சிகள் இடம் பெற்றன.

மாநாட்டு அரங்கத்துக்கு ‘வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அரங்கம்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. தீக்குளித்து உயிர்துறந்தமுத்துக்குமாரின் குடும்பத்தினரும் மாநாட்டுக்கு வந்திருந்தனர். மாநாட்டுத் திடலில் நாம் தமிழர் கட்சிக் கொடியை ஏற்றும் கௌரவம் முத்துக்குமாரின் தந்தை குமரேசனுக்கு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலி ருந்து வந்திருந்த சிலரது பனியன்களில் ‘முத்துக்குமார் மாவட்டம்’ என்ற பெயர் பளிச்சிட்டது. சீமானின் பெற்றோர், பத்திரிகையாளர் வரிசையில் அமர்ந்து மாநாட்டைப் பார்த்தனர். பிரமாண்ட மெழுகுவர்த்தியை ஏற்றி மாநாடு தொடங்கி வைக்கப்பட்டது.
நாம் தமிழர் இயக்கப் பாடல் ஒலிக்க மாநாட்டு மேடையில் ஏறிய சீமானுக்கு ஒருவர் வீரவாள் பரிசளித்தார். அதை உயர்த்திப் பிடித்தார் சீமான். திராவிடர் கழகத்தில் இருந்தும் பா.ஜ.க.வில் இருந்தும் சிலர் விலகி வந்து நாம் தமிழர் இயக்கத்தில் சீமான் முன்னிலையில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் 26 முதன்மைக் கொள்கைகள், 27 துணைக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. மாநாட்டுத் தீர்மானங்களில் நளினியை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துக்கு அதிக கைதட்டல் கிடைத்தது.

மாநாட்டு மேடையில் ஓர் ஆண் குழந்தைக்கு, “உலகத் தமிழருக்கெல்லாம் பிடித்த பெயரைச் சூட்டுகிறேன்’’ என்று கூறி பிரபாகரன் பெயரைச் சூட்டினார் சீமான். மாநாட்டில் முத்துக்குமாரின் தந்தை குமரேசன், கலியபெருமாள் மகன் சோழன் நம்பியார் உள்ளிட்ட ஆறு பேருக்கு ‘வேலுப்பிள்ளை விருது’ வழங்கப்பட்டது. மாநாட்டு மலரை மறைந்த ரகூப்பின் தந்தை அசன் முகமது வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம் பெற்றுக்கொண்டார்.

மேடையின் இருபுறமும் மாநில, தேசிய, சர்வதேசத் தலைவர்களின் படங்கள், இலங்கையில் உயிர்நீத்த தமிழினத் தலைவர்கள், தமிழகப் புலவர்கள், தமிழ் வளர்த்த மன்னர், சான்றோர்களின் 104 படங்கள் பிரமாண்டமான ஃபிளக்ஸ் பேனரில் இடம் பெற்றிருந்தன. அதில் எம்.ஜி.ஆர்., சந்தன வீரப்பன், கே.பி.சுந்தராம்பாள் ஆகியோர் படங்களும் இருந்தது விசேஷம். அண்ணா, காந்தி படங்கள் இல்லை. தவிர, பிரபாகரன் படமும் இல்லை. இதுபற்றிக் கேட்டபோது “இறந்தவர்களின் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன’’ என விளக்கம் தந்தனர் நாம் தமிழர் நிர்வாகிகள் சிலர்.

மாநாட்டில் சீமான் பேசியபோது அனல் பறந்தது.
“நாம் தமிழர் இயக்கத்தை, கட்சியை நாங்கள் தொடங்கவில்லை. சி.பா. ஆதித்தனார் தொடங்கியதை நாங்கள் தொடர்கிறோம். இந்தக் கட்சிக்கு நான் தலைவனுமல்ல. உலகெங்கும் உள்ள தமிழனுக்கான கட்சிதான் இது. இதுவரை கட்சிக்குள் தமிழன் இருந்தான். இனி தமிழனுக்குள் கட்சி இருக்கும். இந்த இனம் வாழ வேண்டுமானால் இங்குள்ள இருவரிடமிருந்து அரசியல் விடுதலை பெற வேண்டும். இன அழிவுக்குத் துணை போனவர்களின் அரசு அகற்றப்பட வேண்டும்



நாம் இந்தியரும் அல்ல. திராவிடரும் அல்ல. தமிழர். தற்போது மக்கள்தொகை கணக்கெடுக்க வரும்போது இந்தியன் எனக் குறிப்பிடாதீர்கள். தமிழன் என பதிவு செய்யச் சொல்லுங்கள். அரசியல் ஒரு சாக்கடை எனச் சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. அப்படியென்றால் அதைச் சுத்தப்படுத்துவது யார்?’’ எனச் சீறினார் சீமான்.

காந்திய அரசியல் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் பேசும்போது, ‘‘எது உடனடியாக தமிழ்மண்ணுக்குத் தேவையோ அது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம். இது உணர்வுமயமான மாநாடாக நடந்து முடிந்து விடக்கூடாது.

பிரபாகரனை வீழ்த்த எடுத்த முடிவு ஒரு கட்சி எடுத்த முடிவல்ல. ஒரு பெண்ணும் அவரது குடும்பமும் எடுத்த முடிவு. தமிழக முதல்வர் இலங்கைத் தமிழர்களுக்குச் செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக சட்டசபையில், ‘ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை. அதை எதிர்க்கிறோம்’ என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸை ஓர் அங்குலம் கூட வளர அனுமதிக்காதீர்கள். ஈழம் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது மலரும்’’ என்றார்.

மலேசிய பினாங்கு துணை முதல்வர் ராமசாமி, பேராசிரியர் தீரன், இயக்குநர் தங்கர்பச்சான் உள்பட பலரும் மாநாட்டில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் நிறையவே வித்தியாசங்கள். கூட்டத்தினரைக் கவர சினிமா பாடல்கள், அங்க அசைவுகள் நிறைந்த டான்ஸ்கள் இடம் பெறவில்லை. வழக்கமாக மாநாடு களில் உணரப்படும் ‘டாஸ்மாக்’ வாசனை இந்த மாநாட்டில் வீசவில்லை. படித்தவர்களை அதிகம் பார்க்க முடிந்தது. இளைஞர்களின் உற்சாக பங்கேற்பு, மாநாட்டு நிகழ்வு களை அவர்கள் கூர்ந்து கவனித்த விதம்... தீர்மானங்களை உள்வாங்கிய போக்கு.. என பாசிட்டிவான விஷயங்கள் இந்த மாநாட்டில் நிறைய.

சீமான் கூட்டிய இந்த இளைஞர் கூட்டம் அரசியலை வென்றெடுக்கப் போகிறதோ இல்லையோ, இளைய தலைமுறையினர் மத்தியில் தமிழ் உணர்வை தக்க வைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

Comments

Unknown said…
`நாம் தமிழர்’ இயக்கம் அரசியலில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

- மாயகிருஷ்ணன்